நான் கற்றதும், பெற்றதும், ரசித்ததும், மற்றும் என்னை பாதித்ததும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்
Wednesday, September 07, 2005
Tuesday, September 06, 2005
ஆசிரியர் தினம் --சில சிந்தனைகள்
யோசித்துப் பார்த்ததில் எனக்கு நினைவுக்கு வந்த ஒரு ஆசிரியரை பற்றி எழுதலாம் என எண்ணினேன்.விளைவு இதோ!!!
1930 -ல் இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி உருமினான் " ஏன் இன்னும் லிபியா விழவில்லை "
படைத்தளபதி பயந்து கொண்டே " சர்,அங்கு கலகக்காரர்களை அடக்குவது கடினமாக உள்ளது"
முசோலினி " யார் அவர்களை வழி நடத்துவது ?"
தளபதி " ஒமர் முக்தார் "
முசொலினி " ஒமர் முக்தார் ?!! யார் இவன் ?!"
தளபதி " சர்,அவர் ஒரு ஆசிரியர்...He is a teacher "முசோலினி ஆச்சரியத்துடன் " a teacher ?!!" பின் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தனக்குள்ளே " Even I was a teacher " என்கிறான்.
ஒரு படத்த்ல் இடம் பெற்ற காட்சி இது.உண்மையில் இப்படி நடந்ததா அல்லது சினிமாவுக்காக சித்தரிக்கப் பட்ட காட்சியா தெரியாது.ஆனால் பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட , கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய "ஓமர்-அல்-முக்தார்" பற்றி தெரிந்தவர்கள் இது உண்மையாக நடந்திருக்கும் என தயங்காமல் ஒத்துக் கொள்வார்கள்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த , இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த , பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் என்றால் நம்ப முடிகிறதா ?
இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிர்ச்சியோ நவீன ஆயுதங்களோ, போக்கு வரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது.தணியாத சுதந்திர வேட்க்கையும்,அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.
ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை.அவரே முன்னின்று போரிட்டார்.முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது,அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படிவற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார்.இத்தாலியப் படை அவரை சலோக் நகரில் , 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி, சர்வதேச விதி முறைகளையும் மீறி,அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.(எண்பது)
சிறையில் சிறை அதிகாரி "ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை ?"என்ற போது " ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும்நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும் " என்றாராம் ஒமர் முக்தார்.
வாழ்க இவர் போன்ற ஆசிரியர்கள்...அவர் மாதிரியான மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தினத்தில் ஒரு சல்யூட்.
பின் குறிப்பு :ஒமர் முக்தார் பற்றி " Omer Mukta-The Lion of Desert " என்ற படம் 1984 இல் வெளி வந்தது.Antony Quinn ஒமர் முக்தாராக அருமையாக நடித்திருப்பார்.பார்க்காதவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.பல ஆஸ்கர்களை தட்டிச் செல்லும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட இந்தப் படம் ஒரு முக்கிய ஆஸ்கர் கூட வாங்காதது துரதிஷ்டமே.
காரணம் அதே ஆண்டு (1984)ஒமர் முக்தார் போன்றே தன் தாய் நாட்டின் விடுதலைக்காக போராடிய ஆனால் மிகவும் வித்தியாசமான முறையில் போராடிய மற்றொரு உன்னதமான மனிதனைப் பற்றிய திரைப் படம் வெளிவந்து நடிப்பு,டைரக்ஷன் உட்பட பல ஆஸ்கர்களை(ஆறோ அல்லது ஏழோ) தட்டிச் சென்றது....
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
அந்தப் படம் " காந்தி "
அன்புடன்...ச.சங்கர்
Sunday, September 04, 2005
தமிழ் படைப்பு மற்றும் படைப்பாளிகள் பற்றிய பொது அறிவு
Sunday, August 14, 2005
சிறுகதைப் போட்டி - " என்ன செய்யப் போகிறாள் "
நந்தினி பதறிப் போய் பின்னால் நகர்ந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்து"அவனை ஏன் இப்படி என் கண் முன்னாலேயே அடிக்கிறீர்கள்?சட்டப்படி அவன்மேல் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதன் படி செய்து தண்டனை கிடைக்கச் செய்தாலே போதுமானது " என்றாள்.
இன்ஸ்பெக்டர் நந்தினியைப் பார்த்து கொஞ்சம் கடுப்பாக " மேடம்...இவனை என்ன கொஞ்சச் சொல்றீங்களா?இந்த நாயெல்லாம் இப்படி அடிச்சாத்தான் திருந்தும்.நீங்க வேணும்னா பக்கத்து அறைல போய் உட்கார்ந்து , நடந்ததை ஒரு கம்ப்ளைன்டா எழுதிக் குடுங்க.நான் இவனை விசாரிச்சுட்டு வந்து ஒங்க புகாரை வச்சு ஒரு எ·ப் ஐ ஆர் போட்டுர்ரேன்.கான்ஸ்டபிள் இவங்களை கூட்டிட்டு போய் ஸ்டேட்மென்ட் வாங்கிக்குங்க " என்றார்.
கான்ஸ்டபிள் என்று விளிக்கப் பட்ட பெண் காவலர் பக்கத்து அறையில் நந்தினியை உட்கார வைத்து மின் விசிறியை போட்டு ஒரு வெள்ளை காகிதத்தை கொடுத்து " இதுல எழுதுங்கம்மா..பேனா இருக்குதா?" என்றாள்.
நந்தினி இருக்கிறது என்பது போல் தலை ஆட்டி விட்டு நடந்ததை யோசிக்க ஆரம்பித்தாள்.
நந்தினி பிரபல சென்னை பத்திரிக்கை ஒன்றில் நிருபர். இன்னும் கல்யாணமாகாத நன்கு படித்த 25 வயது பெண்.
சென்னை மெயிலில் நேற்றிரவு வரும் போது எதிர்பக்க மேல் பெர்தில்தான் அவன் படுத்திருந்தான்.கிட்டத்தட்ட நடு நிசி வேளையில் காலில் ஏதோ பூச்சி ஊர்வது போல் இருக்கவே சட்டென விழிப்பு வந்து பார்க்கையில் அவன் கால் நந்தினியின் கால்களை தடவிக் கொண்டிருந்தது.நந்தினி முழித்துக் கொண்டதைப் பார்த்ததும் சட்டென காலை நகர்த்திக் கொண்டான்.
முதலில் நந்தினிக்கு புரியவில்லை.அவன் தூக்கத்தில் தெரியாமல் கால் பட்டு பின் நகர்த்திக் கொண்டானா இல்லாவிட்டால் வேண்டுமென்றே செய்தானா என்று . நந்தினிக்கு என்ன செய்வது என்றே தோன்றவில்லை.சத்தம் போட்டு ஊரைக் கூட்டி பின் தெரியாமல் கால் பட்டது என நிரூபணமாகி விட்டால் வெறும் அவமானம் மட்டுமே மிஞ்சும்.அல்லாமல் நடந்து முடிந்ததற்காக எப்படி ஊரைக் கூட்டி ஞாயம் கேட்பது, மற்றவர்கள் அதை தவறு என நினைப்பார்களா அல்லது தெரியாமல் கால் பட்டதற்கு படித்த பெண்ணின் மிகையான அலட்டல் என கொள்வார்களா என்று யோசித்து நடந்ததை வெறும் சாதாரண நிகழ்சி போல் எண்ணி மறக்க முயன்றாள்.முடியவில்லை.
படித்த,பத்திரிக்கையில் வேலை பார்க்கும் அடுத்தவரை கேள்விகளால் துளைக்கும் தன் போன்ற பெண்ணிற்கே இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர் கொள்ள துணிச்சல் இல்லையே என வேதனைப் பட்டு தன்மானம் தாழ்ந்து போய் கீழ்த்தரமாக உணர்ந்தாள்.எப்போது விடியும்,சென்னை வரும் என்று எண்ணியவாரே மறுபடி தூங்கிப் போனாள்.
மறுபடி அரை மணி நேரத்தில் யாரோ மார்பில் கை வைப்பது போல் உணரவே தனிச்சியாக "வீல்"என அலறி விட்டாள்.அவளது அலறல் சத்தத்தால் அனைவருவ் விழித்தது,பின் பரிசோதகரும் இரயில்வே போலிசும் அழைக்கப்பட்டு அந்தப் பையன் வலுக்கட்டாயமாக போலிசாரால் அழைத்து செல்லப்பட்டான்.நந்தினி பெண்ணாகவும் தமிழாகவும் இருந்ததால் பொது மக்களின் பச்சாதாபம் வேற்று பாஷைக்காரனாகவும் ஆணாகவும் இருந்த அவனுக்கெதிராக இருந்தது.
ஆனால் அதன் பின் நடந்த நிகழ்சிகள் நந்தினியை அதிர்சியடைய செய்தன.பரிசோதகர் வந்து அந்த பையனை இரயில்வே போலிசார் செமத்தியாக கவனித்து விட்டதாகவும் இனி புகார்,கேஸ் என்று போனால் நந்தினி உட்பட அனைவருக்கும் அனாவசிய நேர விரயமும் தொந்தரவும் எனவே இதை இப்படியே விட்டு விடுமாரும் சொன்னார்.நந்தினியை ஆதரித்த சக பயணிகள் சிலர் கூட அவர் சொல்வது யதார்த்தம் போலவும் நந்தனி அதைக் கேட்பதே நல்லது என்பது போலவும் பேசத் தொடங்கினர்.
நந்தினி பதில் ஏதும் பேசவில்லை. இந்த சமுதாயத்தில் பெண்ணுக்கு நடக்கும் எந்த அநீதியும் எவ்வளவு அலட்சியமாகவும், சர்வ சாதாரணமாகவும் அனைவராலும் கையாளப் படுகிறது என வேதனைப் பட்டாள்.
மறு நாள் காலை சென்னை சென்ட்ரலில் அந்தப் பையனை கைகளை அவன் சட்டையாலேயே பின்னே கட்டி போலிசார் அழைத்துக் கொண்டு வந்தனர்.நந்தினியிடம் வந்து "அம்மா,ஸ்டேஷன் வந்து ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்திடுங்க, மத்ததை நாங்க பார்த்துக்குரோம்" என்றார்கள்.
நந்தினி அவர்களுக்கு சற்று பின்னால் நடக்க முற்படுகையில் ஒரு இளைஞன் வந்து அவசர ஆங்கிலத்தில் தணிந்த குரலில் தான் அந்தப் பையனின் நண்பன் என்றும், " ஏதோ தெரியாமல் நடந்து விட்டது,மன்னித்து விடுங்கள்,அவன் அரசாங்க வேலை தேடி பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டது. அவன் மேல் கேஸ் நடந்து தண்டனை கிடைத்தால் அவன் எதிர்காலம் பாழாகி விடும் " என்றான்.
நந்தினி கோபத்துடன் " உன் அக்காள் ,தங்கைக்கு இதைப்போல் நடந்தால் இப்படித்தான் அறிவுறை கூறுவாயா " என ஆங்கிலத்தில் கேட்டாள். அந்த இளைஞன் முகம் கறுக்க அந்த இடத்தை விட்டு அகன்றான்.
போலிஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கூட முதலில் "மேடம், செமத்தியா நாலு சாத்து சாத்தி ரெண்டு நாள் ரிமாண்டுல வச்சு விட்டுரலாமே " என்றார். பின் நந்தினியின் கோபத்தையும் பத்திரிகை பின்னணியையும் பார்த்து சுறுசுறுப்பாய் கேஸ் போடுவதில் தீவிரமானார்."மேடம்,திட்டமிட்டு செய்தது என கேஸ் போட்டு ஒரு ஆறு மாதமாவது உள்ளே தள்ளி விடலாம் " என்றார்.
அடுத்த அறையில் அந்தப் பையனினிடம் விசாரணையும் அவனது பதில்களும் இந்த அறையில் தெளிவாக கேட்டன.
இன்ஸ்பெக்டர் " நாயே ...சொல்லேண்டா ...ஏன் இப்படி செய்தாய் " என்றார்
அந்தப் பையன் சன்னமான குரலில் ஹிந்தியில் பின்வருமாறு சொன்னான்.
"ஐயா, நான் நடுத்தர சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.கஷ்டப்பட்டு பி.ஏ வரை படிக்க வைத்தனர்.வீட்டில் புதிதாக கல்யாணமான அண்ணன்,அண்ணி.வயதான தாய் தந்தை இவர்களுடன் படுதா போட்டு பிரிக்கப்பட்ட ஒரே அறையில் படுக்கை.
மனதுக்குள் ஆயிரம் வாலிப கனவுகளை, உடலில் இளமை வேதனைகளை சுமந்து கொண்டு வேலையும் கிடைக்காமல் கல்யாணம் என்று ஒன்று நடக்குமா என்பது தெரியாமல் தினம் பாதி ராத்திரியில் படுதாவிற்கு அந்தப் பக்கமிருந்து கேட்கும் வளையல் ,மெட்டி ,சிணுங்கள் சத்தங்களால் சலனப்பட்டு தினம் தினம் சுய பச்சாதாபத்தால் செத்துக் கொண்டிருக்கிறேன்.
சில சவடால் நண்பர்கள் பெண்களை இணங்க வைக்க வேண்டுமானால் முதலில் நீயாக உன் விருப்பத்தை அவர்களிடம் செயலில் காட்ட வேண்டும். பெண்கள் முதலில் விருப்பமில்லாதது போல் நடந்தாலும் பின் பணிந்து விடுவார்கள் என்றும் மற்றும் இது போன்று அவர்கள் நிகழ்த்திய சாகசங்களை சொல்லும் போது இப்படி ஏதும் செய்யாத ,அனுபவமில்லாத என்னை தினம் தினம் கேவலமாகப் பேசி இகழும் நண்பர்களிடம் எனது சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும் ஒரு நொடி சலனத்திலும் இவ்வாறு செய்து விட்டேன். இதனால் ஜெயிலுக்குப் போய் வேலை கிடைக்காமல் போனால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியேயில்லை " என்று அழுதான்.
இதைக் கேட்ட நந்தினிக்கு "திக்"கென்றது.இவன் ஏற்கனவே ஒரு பாதி செத்த பாம்பு . சமுதாயத்தால் மறுபடி மறுபடி பலமுறை அடிக்கப் பட்டு சொந்தமாக நல்லது கெட்டது கூட தெளிவாக சிந்திக்கத் தெரியாமல் குற்றுயிரும் கொலை உயிருமாகக் கிடக்கும் ஆயிரக் கணக்கான பாம்புகளில் ஒன்று . ஏதோ ஒரு சந்தர்பத்தால் தேங்கிக் கிடந்த ஆக்ரோஷத்தில் ஒரு கணம் படமெடுத்து விட்டது.இதை மேலும் மேலும் அடித்துதான் நமது தன்மானத்தை திருப்திப் படுத்திக் கொள்ள வேண்டுமா? சமுதாயம் மாறி மாறி அடித்து துன்புறுத்தியதால் ஏற்பட்ட வலியினால் ஒரு கணம் படமெடுத்து விட்டது உண்மையிலேயே பாம்பின் குற்றம் தானா ? அதை மேலும் அடித்து துன்புறுத்தி கொல்வது சரியான முடிவுதானா ?
அதே சமயம் தனக்கு எற்பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுக்காமல் வாய் மூடி மௌனமாக போனால் இது வாழ்நாள் பூராவும் ஒரு கெட்ட கனவாக , முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கும்..இது போல தினம் தினம் பெண்களுக்கெதிராக நடக்கும் கோடானு கோடி தவறுகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது போலாகி விடும். பெண் என்ற முறையில் அதுவும் படித்த ,சுய சிந்தனையுள்ள பெண் என்ற முறையில் தன்னைத்தனே மேலும் இழிவு படுத்திக் கொள்ளும் செயலாகி விடும்...என்று குழப்பமாக யோசித்தாள்.
கையில் புகார் எழுதிய காகிதம் காற்றில் படபடத்தது.புகாரை வாங்கிப் பதிய அடுத்த அறையிலிருந்து இன்ஸ்பெக்டர் வரும் காலடிச் சத்தம் கேட்டது.
நந்தினி ......"என்ன செய்யப் போகிறாள் "
பின்குறிப்பு:
இன்ஸ்பெக்டர் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த போது நந்தினி அங்கே இல்லை.
நாலாக மடிக்கப் பட்ட காகிதம் மேசை மேல் காற்றில் பட படத்தது.இன்ஸ்பெக்டர் அதை எடுத்து பிரித்தார் ..அதில் ..
"இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு,
நான் புகார் எழுதும் போது, அடுத்த அறையில் உங்கள் விசாரணை உரையாடல் காதில் விழுந்தது.அவன் சொன்ன பதில் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.
நான் இந்தப் புகாரை பதிவு செய்து அவனுக்கு சட்டத்தின் படி தண்டனை வாங்கிக் கொடுப்பதால் நாட்டில் மற்றவர் இது போன்ற தவறை செய்யாமல்இருந்து விடுவார்கள் என்று சொல்ல முடியாது.அப்படி இருப்பின் தண்டனை அளிக்கப் பட்ட அனேக குற்றங்கள் நாட்டில் திரும்ப நடை பெறக் கூடாது.ஆனால் அவ்வகைக் குற்றங்கள் தினமுக் நடந்து வருகின்றன.தண்டனை அதிகமாக அதிகமாக குற்றவாளிகள் மேலும்நூதன முறையில் பிடிபடா வண்ணம் யோசித்து குற்றம் செய்ய துணிகின்றனர்.அல்லது பிடி பட்டாலும் சட்டத்தின் ஓட்டைகளைக் கொண்டுதப்பிக்க முயல்கிறார்கள்.
ஆனால் அவன் சொன்ன காரணங்களை கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் அவனை மன்னித்து அதை அவனுக்கு தெரியுமாறுசெய்தால் கண்டிப்பாக இவன் திருந்தி விடுவான், இந்த மாதிரி தவறை வாழ்நாளில் எந்த சந்தர்ப்பத்திலும் திரும்ப செய்ய மாட்டான் என எனக்கு தோன்றுகிறது.
எனவே சட்டத்தின் மூலம் பலரை திருத்த முயல்வதை விட மனிதாபிமானத்தால் கண்டிப்பாகஇவன் ஒரே ஒருவனைக் கூட நல்வழிப்படுத்தினால் அதுவே மற்ற பெண்களுக்கு நான் செய்யும் உபகாரமாக இருக்கும் என தோன்றுகிறது.எனவே நான் புகார் செய்யும் எனது எண்னத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்.
உங்கள் நேரத்தை விரயம் செய்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்.... இப்படிக்கு...நந்தினி " என எழுதியிருந்தது.
இன்ஸ்பெக்டருக்கு ஏனோ நேரம் விரயமானதில் கோவம் வரவில்லை.அவன் கண்டிப்பாக திருந்தி விடுவான் என்றே தோன்றியது.
திறந்திருந்த கதவு வழியாக
"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதை
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்தடுத்துக் கொண்டே இருக்குது,
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
திருடாதே... பாப்பா ... திருடாதே "
பட்டுக்கோட்டையின் பாட்டு மிதந்து வந்து அவரை புன்னகைக்க வைத்தது.
கதை முற்றும்.
By அன்புடன்...ச.சங்கர்
Friday, July 22, 2005
இரண்டு கோப்பை தேநீர்
அப்ப மேல படியுங்க.
ஒரு தத்துவ பேராசிரியரிடம் மாணவர்கள் சொன்னார்கள்"ஐயா,நேரமின்மையே மிகப் பெரிய பாரமாக எங்களை அழுத்துகிறது. ஒரு நாளின் 24 மணி நேரமும் போதாமல் ஓயாமல் உழைத்து யந்திரம் போலாகி விட்டோம்.சொந்த வேலைகலையோ குடும்பத்தையோ கவனிக்க நேரம் கிடைப்பதே இல்லை.இதுவே பெரும்பாலானோரின் தலையாய பிரச்சினை"என்று கூறினர்.
Thursday, July 21, 2005
பாலியல் பலாத்காரமும் பத்திரிகைகளின் பங்கும்
நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.
இதை பற்றி எழுதும் பத்திரிக்கைகள் ஒரு சில நாட்களுக்கு ஆஹா ஓஹோ என கூக்குரலிடுவதும் சில நாட்களில் வேறு நிகழ்வு கிடைத்தவுடன் இந்த விஷயத்தை அம்போ என விட்டு விட்டு அடுத்ததற்கு தாவி விடுவதும் எந்த விதத்தில் இவர்களது பத்திரிக்கை தர்மத்தையும், நியாயமாக இருக்க வேண்டிய சமூக பொருப்புணர்சியையும் நியாயப் படுத்த முடியும்?
Monday, July 18, 2005
படிச்சிட்டு சிரிங்க....காசா? பணமா?-------2
--------------------------------------------------------
அனைத்து மேலதிகாரி விசுவாசிகளுக்கும் சமர்ப்பணம்
ஒரு கம்பனியில் வேலை பார்ப்பவர் தனது மேலதிகாரியின் வீட்டுக்கு போன் செய்தார்.ஆனால் எடுத்ததோ மேலதிகாரியின் மனைவி "ஐயோ , அவர் போன வாரமே இறந்து விட்டாரே" என்றார்
மறுநாளும் அவர் மேலதிகாரியின் வீட்டுக்கு போன் செய்து அதிகாரியிடம் பேச வேண்டும் என்றார்.அதற்கு மேலதிகாரியின் மனைவி " நேற்றே சொன்னேனே... அவர் போன வாரம் இறந்து விட்டாரென்று" என்றார்
மூன்றாவது நாளும் அந்த ஆள் மேலதிகாரியின் வீட்டுக்கு போன் செய்து அதிகாரியிடம் பேச வேண்டும் என்றார்.கடுப்பாகிப் போன மேலதிகாரியின் மனைவி "யோவ், நான் ஏற்கனவே ரெண்டு தடவை உனக்கு சொல்லி விட்டேன்.என் கணவர் அதாவது உன் மேலதிகாரி போன வாரமே இறந்து விட்டாரென்று? பிறகு தினமும் ஏன் போன் செய்து கேட்கிறாய்?ஏன்... .. ஏன் .....ஏன்....? என்று கத்தினார்.
அவன் சிரித்துக் கொண்டே "ஏனென்றால் நீங்கள் சொல்லும் விஷயம்(பதில்) எனக்கு அவ்வளவு சந்தோஷத்தை தருகிறது?! "என்றான்.
படிச்சுட்டு சிரிங்க...காசா?பணமா?
ஒரு நாள் திடீரென்று படியாலா ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது சர்தார்ஜீக்கள் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர். அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜீக்களும் இறந்து விட்டனர் என்று.
Saturday, July 09, 2005
அவள் கேட்ட மூன்று வரங்கள்
ஒரு ஊர்ல ஒரு மாது (அதாங்க லேடி )இருந்தாங்களாம்.ஒரு நா காட்டு வழியா போய்க்கிட்டு இருக்கும் போது (ஏம்போனாங்கன்னு கேட்காதீங்க) ஒரு தவளை கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்டு இருக்கிறத பார்த்தாங்க.அந்த தவளை ஒரு மந்திரவாதி தவளையாம்.
"என்னய இந்தக் கூண்டுலேர்ந்து வெளியேத்தி காப்பாத்துனீன்னா ஒனக்கு மூணு வரம் தருவேன்" அப்படீன்னுச்சாம்.அந்த மாதுவும் சரின்னுட்டு அதை கூண்டுலேர்ந்து காப்பாத்தினாங்களாம்.
தவளையும் "ரொம்ப டாங்சு... ஆனா வரத்துல ஒரு கண்டிசன் இருக்கு,அவசரத்துல சொல்ல விட்டுட்டேன் " அப்படீன்னுச்சாம்.அந்த அம்மாவும் இது என்னடா கெரகம் புடிச்சதா இருக்குன்னு நெனச்சுக்கிடே"சரி,சொல்லித் தொலை" அப்படீன்னாங்களாம்.
"நீங்க எது கேட்டாலும் ஒங்க புருஷனுக்கு அது பத்து மடங்கா கிடைக்கும் அதான் கண்டிசன் " அப்படீன்னுச்சாம்."சீ...இவ்வளவுதானா ஜுஜூபி "அப்படீன்னுட்டு அந்த அம்மா வரம் கேட்க ஆரமிச்சாங்களாம்.
""வரம் நம்பர் ஒன்"" " நான் ஒலகத்திலேயே ரொம்ப பேரழகியா ஆயிடணும்" அப்படீன்னாங்களாம்.
தவளை "ஒம்பாட்டுக்கு கேக்குரயே...ஒம் புருசன் ஒன்னய விட பத்து மடங்கு பேரழகனா ஆயிருவான்,அப்புறம் ஒலகத்துல மத்த எல்லா பொண்ணுன்களும் அவனத்தான் சுத்துவாங்க " அப்பிடீன்னுச்சாம்.
அதுக்கு அந்த பொம்பளை"பரவால்லியே. யாரு அவரை சுத்தினாலும் ஒலகத்துலியே ரொம்ப அளகான பொண்ணா நாந்தான இருப்பேன். அதுனால அவரு என்னியதா சுத்துவாரு " அப்படீன்னாக.
"புத்திசாலி பொண்ணா இருக்கியே " அப்படீன்னுட்டு தவளையும் வரத்த தந்திருச்சு.
"" வரம் நம்பர் ரெண்டு""" நா ஒலகத்திலேயே பெரிய பணக்காரியா ஆயிடணும் " அப்படீன்னாங்களாம்.
ஒடனே தவளை ஏதோ சொல்ல ஆரம்பிக்க " தெரியும்,தெரியும், எம் புருசன் என்னய விட பத்து மடங்கு பணக்காரனாயிருவாரு.அதத்தான சொல்லப் போர ? புருசம் பொண்டாட்டிக்குள்ள யாருக்கிட்ட அதிகமா பணம் இருந்தா இன்னா?அவரு பணம் என்னுது...எம் பணம் அவருது " அப்படீன்னுச்சாம். வரம் கெடச்சது.
"" வரம் நம்பர் மூணு""" எனக்கு லேசா நெஞ்சடைப்பு (அதாங்க ஹார்ட்டு அட்டாக்கு) வரணும்" அப்படீன்னு கேட்டுட்டு சிரிச்சிச்சாம் அந்த பொம்பள.
தவளை " ஆஹா...கிளம்பிட்டாய்ங்கய்யா ...கிளம்பிட்டாய்ங்கய்யா ...பயங்கர வெவரமால்ல இருக்காங்க அப்படீன்னு வடிவேலு ஸ்டயிலில நெனச்சிச்சாம்.
இந்தக் கதையிலேருந்து இன்னா தெரியுது :"பொம்பளைங்க பயங்கர புத்திசாலிங்க...அவங்கோ கிட்ட வம்பு தும்பு வச்சுக்காதிங்கோஓஒ...
இத்தப் படிக்கும் பெண்மணிகளே...தாய்மார்களே..இந்த லட்டரை படிக்கிறதை இத்தோட நிப்பாடிட்டு சந்தோசமா போய்ட்டு வாங்க.
இத்தப் படிக்கும் ஆண்களே ...அப்பாவிகளே .... அப்டீக்கா கீழ போய் தொடர்ந்து படிங்க.
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
மூணாவது வரத்துனால அந்தம்மா புருசனுக்கு அந்த்ம்மாவுக்கு வந்த லேசான ஹர்ட் அட்டக்க விட பத்து மடங்கு லேச ஹார்ட் அட்டாக் வந்திச்சாம்.
இதுலேர்ந்து இன்னா தெரியுது :பொம்பளைங்க உண்மையிலேயே புத்திசாலிங்க இல்லை. ஆனா அப்படி நெனைச்சிக்கிட்டு இருக்காங்க,..... அவங்க பாட்டுக்கு அப்படியே நெனைச்சுக்கிட்டு இருக்கட்டும்.
எம்மா..இதப்படிக்கிற நீங்க ஒரு பொண்ணுன்னா .... சொல்லச் சொல்ல கேக்காம இதுவரைக்கும் படிச்சிட்டு வந்திருக்கியளே.
இதுலேந்து இன்னா தெரியுது.....பொம்பளைங்க எப்பவுமே சொன்ன பேச்ச கேக்கவே மாட்டாங்க அப்படீன்னு நிரூபணம் ஆவுதில்ல....
ஐய்யயோ...பொம்பளைங்கள்ளாம் ஒண்ணா சேர்ந்து அடிக்க வாராங்களே....விடு ஜூட்...
அன்புடன்....ச.சங்கர்
Friday, July 08, 2005
இதப் படிங்க மொதல்ல...முற்றிலும் உண்மை
___________________________________________________________________________________
மாதாந்திர சம்பளம் : ரூபாய் 12,000
தொகுதிக்கான மாதாந்திர செலவுத்தொகை : ரூபாய் 10,000
அலுவலக மாதாந்திர செலவினங்களுக்காக : ரூபய் 14,000
பயண சலுகை (கி.மி க்கு ரூ 8/- வீதம்) : ரூபய் 48,000
(ஒரு முறை தில்லி சென்று திரும்ப 6000 கி.மி க்கு)
பாராளுமன்றம் கூடும் நாட்களில் தினப்படி : ரூபய் 500
வீட்டில் மின்சாரக் கட்டணம் : 50,000 யூனிட்டுகள் வரை கட்டணமில்லை
உள்ளூர் தொலைபேசி வசதி : 1,70,000 கால்களுக்கு(calls) கட்டணமில்லை
இரயிலில் முதல் வகுப்பு குளிர் சாதன வசதி : கட்டணமில்லை
(இந்தியா முழுக்க) எத்தனை முறை பயணித்தாலும்)
ஆகாய விமானத்தில் (business class) உயர் வகுப்பு பயணம் : இலவசம்(வருடத்திற்கு 40 முறை)(துணைவியாரோ அல்லது உதவியாளரோ உடன் செல்லலாம்)
டெல்லியில் பாரளுமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கும் வசதி : இலவசம்
ஆக மொத்தம் ஒரு உறுப்பினருக்கான வருடாந்திர செலவு : ரூபாய் .32,00,000
5 வருடத்திற்கான செலவு : ரூபாய் .1,60,00,000
534 உருப்பினர்களுக்கான 5 வருடத்திற்கான செலவு : ரூபாய் : 8,54,40,00,000
அதாவது கிட்டத்தட்ட 855 கோடி ரூபாய்.
(அல்லாம் நாம குடுக்கற வரிப் பணம்தானுங்கோவ்)
இவர்கள் அனைவரும் தங்களது சொந்த தகுதியின் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு போனவர்கள் அல்ல.இந்திய மக்களால்,உலகிலேயே மிகப் பெரியது என போற்றப் படும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.
போய் என்ன செய்கிறார்கள் ????
போகும் அவர்களுக்கும் ...படைத்த ஆண்டவனுக்குமே வெளிச்சம்.
அன்புடன் ....ச.சங்கர்
நான் தொடங்கிய கதையின் முடிவுப் பகுதி
கடைசியில் பொன்னம்மாவிற்கு என்ன ஆச்சு ?
அன்புடன்....ச.சங்கர்
Saturday, July 02, 2005
நான் தொடங்கிய கதை . முடிவை நீங்கள் சொல்லுங்கள்
நான் தொடங்கிய கதை . முடிவை நீங்கள் சொல்லுங்கள்.
"கல்பானை சோழிக்கல்"
பொன்னம்மா அந்த கிராமத்தின் கனவு தேவதை என்று சொல்லக்கூடிய மாதிரித்தான் இருந்தாள்.சற்றே கருப்பானாலும் எடுப்பான தேகம்.களையான முகம்.பட்டாம் பூச்சி போல் படபடக்கும் கண்கள்.பொன்னம்மா அழகானவள் மட்டுமல்ல அதற்கேற்றாற் போல் புத்தி சாதுரியம் உள்ளவளும் கூட.
கன்னையனுக்கு அவள் மேல் ரொம்ப நாளாகவே ஒரு கண். கிராமத்திலேயே கொஞ்சம் பணம் காசுடன் வசதியாக வாழ்பவன்.மைனர்தனங்கள் கொஞ்சம் உண்டென்றாலும் ஒரேடியாக கெட்டவன் என்று சொல்லி விட முடியாது.சின்ன சின்ன சபலங்கள் உண்டென்றாலும் பெரிய தப்பெல்லாம் பண்ணும் அளவுக்கு தைரியம் கிடையாது. எவ்வளவோ தடவை பொன்னம்மாவின் தகப்பன் வேலுச்சாமியிடம் பொன்னம்மாவை பெண் கேட்டும் வேலுச்சாமி பிடி கொடுத்தே பேசவில்லை.
காரணம் வேலுச்சாமியின் அக்காள் மகன் அழகேசன்.அவன் கன்னையனைப் போல் பணக்காரன் இல்லை என்றாலும் ஓரளவு நிலம் வைத்து சொந்தமாக விவசாயம் பார்த்து கஷ்டமில்லாமல் ஜீவனம் பண்ணிக் கொண்டிருந்தான். அழகேசன் பொன்னம்மாவிற்க்கு முறைப் பையன் என்பதாலும் பொன்னம்மாவிற்கும் அவன் மேல் கொஞ்சம் அபிமானம் உண்டென்று அரசல் புரசலாக பிறர் சொல்லி கேள்விப்பட்டதாலும் வேலுச்சாமி யோசித்துக் கொண்டிருந்தான்.
பொன்னம்மாவிற்கும் அழகேசனுக்கும் உடனடியாக பரிசம் போட்டு விடலாம் என்றால் அதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. முன்பு வேலுச்சாமி விவசாய நஷ்டம் காரணமாக கன்னையனிடம் பெரும் தொகை கடனாக வாங்கி இருந்தான்.பரிசம் போடவோ அல்லது கடனை அடைக்கவோ அவனிடம் உடனடியாக பணம் இல்லை.
அந்த ஊரில் ஆண் பிள்ளையில்லாத கடனாளியான ஒருவர், தன் மகளுக்கு, கடன் கொடுத்தவர் தவிர வேறு ஒருவருக்கு பரிசம் போட வேண்டும் என்றால் கடன் கொடுத்தவரின் அனுமதி வேண்டும் என்பது கட்டுப்பாடு. கடன் கொடுத்தவர் சம்மதிக்காத பட்சத்திலும் அதே சமயம் அந்தப் பெண் கடன் கொடுத்தவரை மணக்க சம்மதிக்காத பட்சத்திலும் ஒரே ஒரு வழிதான் இருந்தது. அதுதான் "கல் பானை சோழிக்கல் " போடுதல்.
அதாவது ஊர்ப் பஞ்சாயத்து கூடும் இடத்தில் ஒரு கை மட்டுமே உள்ளே நுழையக் கூடிய சின்ன வாயுள்ள ஒரு கல் குடம் இருக்கும். ஊர்ப் பூசாரி கறுப்பு மற்றும் வெளுப்பு கலரில் கோலி அளவுள்ள ரெண்டு கூழாங்கல்லை ( சோழிக்கல்) பூஜையில் வைத்து பெளர்ணமி நாள் நள்ளிரவில் கல் பானையில் போட்டு அதன் வாயை மஞ்சள் துணி போட்டு கட்டி விடுவார்.அடுத்த அம்மாவாசையன்று ஊர் முன்னிலையில் அந்தப் பெண் கல் பானையில் இருந்து ஒரு சோழிக்கல்லை எடுக்க வேண்டும். எடுத்தது கருப்புக் கல்லாயிருந்தால் அந்தப் பெண் வாதியையே (கடன் கொடுத்தவர்) மணக்க வேண்டியது.வெள்ளைக் கல் என்றால் அந்தப் பெண் யாரை வேண்டுமானாலும் மணக்கலாம்.அவள் தகப்பன் கடனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இ.பி.கோ சட்டம், போலிஸ் எல்லாம் எட்டிப் பார்க்காத குக்கிராமமாகையால் இதுவே நடைமுறையாக இருந்தது.இடைப்பட்ட பதினைந்து நாளில் எதாவது சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் "கல் பானை சோழிக்கல்" எடுப்பது தவிர்க்கப் படும்.
இப்படியாகத்தானே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பொன்னம்மா கல்யாணப் பிரச்சனை ஊர்ப் பஞ்சாயத்தின் முன் வந்து ஒரு சமாதானமும் ஆகாமல் " கல் பானை சோழிக்கல்" போட்டு விடுவது என்று முடிவாகியது.ஊர்ப்பூசாரி ஒரு பெளர்ணமி சுப யோக சுப இரவில் கோவிலில் அம்மன் முன் வைத்த சோழிக்கற்களை யாரும் பார்க்காமல் நள்ளிரவில் கல் பானையில் போட்டு மாலை மரியாதைகளோடு மஞ்சள் துணி போட்டு கட்டி வைத்து விட்டார்.
இந்தக் கதையை ஆரம்பித்து விட்டேன். முடிக்கத் தெரியவில்லை .
வலைப்பூ வாசகப் பெருமக்களே / குழும நண்பர்களே இதன் முடிவு எப்படி இருக்கலாம் என்று யூகித்து எழுதுங்களேன்.நல்ல கற்பனைக்கு ஆயிரம் பொன் பரிசுன்னுலாம் அறிவிக்க மாட்டேன் . என் கிட்ட கிடையாது.ஒரு சபாஷ் அவ்வளவுதான்.
பின் குறிப்பு : உண்மையில் பொன்னம்மாளுக்கு என்ன ஆயிற்றென்று அடுத்த பதிவில் சாவகாசமாய்.
அன்புடன் ....ச.சங்கர்
Friday, June 17, 2005
"மெட்டி ஒலி" என்றொரு மூணரை வருட அவஸ்த்தை
இந்த நேரத்தில் இது பற்றி சில கருத்துக்கள்- நம்மகிட்டதான் இதுக்கு பஞ்சமே இல்லயே.
காட்சி -1 நியூ ஜெர்சி, அமெரிக்கா
சமீபத்தில் குழந்தை பெற்ற என் தங்கையை பார்க்க + உதவிக்கு என் அம்மா அமெரிக்கா பயணப் பட்டார்.அச்சரவாக்கம் தாண்டாத அம்மா அமெரிக்கா தனியாக போகிராரே எப்படி சமாளிப்பார் என்று எனக்கு கொஞ்சம் பயம்தான்.ஒரு வழியாக இனிதே போய் சேர்ந்தார்.முதல் தடவையாய் வெளி நாடு போயிருக்கிராரே என்று போனில் அம்மா ..அங்க ஊர், வசதியெல்லாம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.நல்ல வசதியாக இருக்கிறது.டி.வி யில் "மெட்டி ஒலி" யெல்லாம் வருகிறது தெரியுமா என்றார்.அம்மாவின் வயது 65.அமெரிக்காவின் வளர்சி /வசதியே டி.வி யில் "மெட்டி ஒலி"வருவதுவராததை வைத்து எடை போடப் படுவதை நினைத்து நொந்து நூலாகி போனை வைத்தேன்.
காட்சி -2 நியூ டெல்லி, இந்தியா
நல்ல கோடை காலமானதால் இரவு உணவுக்குப் பின் மனைவியுடன் பூங்காவில் சிறிது உலாவப் போவது வழக்கம்.அங்கு சற்றே அறிமுகமான ஒரு தமிழ் மூதாட்டி ஒருவர் இருந்தார்.அருகில் அவர் பேத்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.நாங்கள் பேசிக்கொண்டிருந்த ஐந்து நிமிடத்தில் மூன்று முறை வந்து மணி என்ன, மணி என்ன என்று கேட்டாள்.நான் ஏன் வீட்டில் அப்பா/அம்மா சீக்கிரம் திரும்பி வந்து விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களா எனக் கேட்டேன்.அதற்கு அந்த பாட்டி சீக்கிரம் திரும்பி வர கூடாது என்று அனுப்பினார்கள் என்றார்.ஆச்சரியமாக ஏன் என்றேன். 9 மணிக்கு வீட்டில் இருந்தால் டி.வி போட்டுக் கொண்டு "மெட்டி ஒலி" பார்க்க உட்கார்ந்து விடுகிறாள்.பார்க்க விடா விட்டால் ஒரே அழுகை என்றார்.சின்னக் குழந்தைதானே பார்த்து விட்டு போகட்டுமே என்றேன்.நீங்க வேற வயித்தெறுச்சலை கிளப்பாதீங்க.T.V. முன்னாடி உட்கார்ந்து கொண்டு " என்ன ரவி இன்னக்கி லீலாவ(பெண்டாட்டிய) அடிக்கலையா"என்று கேட்கிறாள் என்று தலையில் அடித்துக் கொண்டார்.பேத்தியின் வயது 4. நொந்து நூலாகி நடையைக் கட்டினேன்.
காட்சி --3 சிங்காரச் சென்னை , தமிழ் நாடு
ரொம்ப நாள் கழித்து சென்னை போயிருந்தேன்.நீண்ட நாளுக்குப் பிறகு நெருங்கிய பள்ளித் தோழன் ஒருவனை சந்தித்தேன்.பள்ளி நாட்களில் ஈருடல் ஓருயிர் போல திரிந்தோம்.பிறகு 15 வருடம் கழித்து இப்போதுதான் சந்திக்கிறோம்.கூட இருந்த மனைவியைஅறிமுகப் படுத்தினார்.பிறகு இளமைக் கால நினைவுகளில் மூழ்கினோம்.நண்பனின் மனைவி அவர் காதில் ஏதோ கிசு கிசுத்தார்.அவரும் தலையாட்டிய படியே என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்.கொஞ்ச நேரத்திற்க்கு பிறகு கடிகாரத்தை பார்த்து விட்டு ஒரு மாதிரியாக நெளிந்தார்.என்ன ஏதாவது அவசர வேலையா என்றார்.இல்ல 9 மணிக்கு TV யில் "மெட்டி ஒலி" வரும்.என் பெண்டாட்டிக்கு அதை கண்டிப்பாய் பார்த்தாக வேண்டும் என்றார்.நண்பனின் மனைவியின் வயது சுமார் 26.நொந்து நூலாகி திரும்பினேன்.
பி.கு : அலுவலகத்திலிருந்து லேட்டாக திரும்பிய ஒரு நாள் வீட்டு ஹாலில் அமர்ந்து காலணிகளை கழட்டிக் கொண்டிருந்த போதுTV யில் "மெட்டி ஒலி" ஓடிக் கொண்டிருந்தது.அனிச்சையாக கண் TV யை பார்க்க இரண்டு வயசானவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
muthiyavar 1 :"அடேடே வாங்க சம்பந்தி"
muthiyavar 2 "என்ன சம்பந்தி எப்படியிருக்கீங்க"
muthiyavar 1: "நல்லா இருக்கேன் சம்பந்தி. நீங்க எப்படி சம்பந்தி இருக்கீங்க?
muthiyavar 2: எனக்கென்ன சம்பந்தி. நானும் நல்லா இருக்கேன். அப்புறம் சம்பந்தி என் பொண்ணு எப்படி சம்பந்தி இருக்கா?
muthiyavar 1: அவளுக்கென்ன சம்பந்தி.ராணி மாதிரி இருக்கா சம்பந்தி. அப்புறம் என்ன சம்பந்தி இந்தப் பக்கம் திடீர்னு?
muthiyavar 2: அது ஒண்ணுமில்லை சம்பந்தி,பெரிய சம்பந்திய பாக்கப் போனேன் சம்பந்தி அப்படியே ஒங்க நியாபகம் வந்தது சம்பந்தி. அதுனால சின்ன சம்பந்தியையும் பாத்துட்டு போகலாமுன்னுட்டு வந்தேன் சம்பந்தி.
muthiyavar 1.அப்பிடியா சம்பந்தி, ரொம்ப சந்தோஷம் சம்பந்தி.
இத்துடன் TV யில் விளம்பர இடைவேளை ஆரம்பித்து விட்டார்கள். நான் கழட்டிய என் ஷ¥வாலேயே தலையில் அடித்துக் கொண்டு ஹாலை விட்டு வெளியே ஓடி விட்டேன்.
அன்புடன் ....ச.சங்கர்
-------------------------------------------------------------------------------------------------------------
Friday, June 10, 2005
நினைவில் நின்ற கதை ---2
தலைப்பும் தமிழாக்கமும் என்னுடயது.
தோட்டாக்களின் பாதையில்
-----------------------------------------
"சார்... நீங்கள் மென்பொருள் துறையில் பணி செய்கிறீர்களா?"
" ஆம்" விவேக் ப்ரதான் தனது லாப் டாப்பிலிருந்து பார்வையை அகற்றி கேட்டவரை பார்த்தான்.
அது ஷதாப்தி எக்ஸ்பிரஸ் இரயிலின் A/c முதல் வகுப்பு பெட்டி.
விவேக் ப்ரதானுக்கு ஒரு பெரிய கணினி நிறுவனத்தில் திறனாய்வு மேலாளராக(Projecr Manager) பணி.விமானத்தில் செல்ல முடியுமானாலும் , பயணத்தின் போது வேலை செய்யகிடைக்கும் நேரம் காரணமாக இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தான்.
கேள்வி கேட்ட பக்கத்து இருக்கை பயணிக்கு சற்றேறக்குறைய முப்பது வயதிருக்கும்.
திடகார்திரமாக பார்க்க விளையாட்டு வீரர் போல இருந்தார்.ஏனோ அவரைப் பார்த்தால் அந்த A/C முதல் வகுப்புக்கு கொஞ்சமும் பொருந்தாமல் இருந்தார்.விளையாட்டு வீரர் யாராவது, பாசில் இலவச பயணம் செய்கிரார் என்று நினைத்தான் விவேக்.
" உங்களைப் போன்றவர்களால் நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது.எல்லாம் கணினி மயமாக்கப் பட்டு வருகிறது" என்றார் சக பயணி.
"நன்றி" என்றான் விவேக் ப்ரதான் சற்றே கர்வத்துடன்.
"உங்களைப் போன்றவர்களை பார்த்து நான் எப்போதுமே அதிசயித்துப் போவேன்" அவர் மேலும் தொடர்ந்தார். "நீங்கள் அறையில் அமர்ந்து கொண்டு கணினியை சொடுக்குகிறீர்கள்.அது பெரிய பெரிய வேலை யெல்லாம் செய்கிறது"
"அது வெறும் சொடுக்கும் விஷயமில்லை நண்பரே! அதன் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது தெரியுமா ?" ஒரு நிமிடம் அவருக்கு கணினியை பற்றி மேலும் விளக்கலாமா என்று யோசித்து பிறகு முடிவை மாற்றிக் கொண்டு "அது மிகவும் சிக்கலான விஷயம்" என்று தோளைக் குலுக்கினான்.
"அப்படித்தான் இருக்க வேண்டும்.அதனால்தான் உங்களுக்கெல்லாம் சம்பளம் மிக மிக அதிகமாக இருக்கிறது " என்றார் அப்பாவியாக.
இது விவேக் ப்ரதானை கொஞ்சம் சுருக் என தைத்தது.மிக மென்மையான கோபம் மேலிடும் குரலில் "எல்லோரும் சம்பளத்தையே பார்க்கிறார்கள்.யாருமே நாங்கள் செய்யும் கடின உழைப்பை பார்ப்பதில்லை.கடின உழைப்பை பற்றி நம் நாட்டவருக்கு மிகக் குறுகிய கண்ணோட்டமே இருக்கிறது. A/C அறையில் இருந்து கொண்டு வேலை செய்வதால் நாங்கள் வியர்வை சிந்துவதில்லை என்று நினைக்கிறீர்களா?உங்களைப் போல் உடலை வருத்தி வேலை செய்தால் மட்டும் கடின உழைப்பு என்று அர்த்தமில்லை. நாங்களும் மூளையை கசக்கித்தான் வேலை செய்கிரோம்.அதுவும் சுளுவானதில்லை தெரிந்து கொள்ளுங்கள்"
விவேக் ப்ரதான் மேலும் அவருக்கு புரிய வைக்க எண்ணி தொடர்ந்தான்
" உதாரணத்திற்க்கு இந்த இரயில்வே துறையை எடுத்துக் கொள்ளுங்கள்.பயணச்சீட்டு முன்பதிவு முழுவதும் கணினி மயுமாக்கப்பட்டுள்ளது.நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கணக்கான கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களில் பயணச்சீட்டை பதிவு செய்கிறார்கள்.ஒரே தகவல் மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பல்லயிரக்கணக்கான தகவல் பரிவர்த்தனைகள்,தகவல் கட்டமைப்பு, தகவல் பாதுகாப்பு,கணக்கு வழக்குகள் பராமரிப்பு என்று எவ்வளவோ இருக்கிறது! இந்த மாதிரி உள்ள ஒன்றை வடிவமைப்பதில் உள்ள நுட்பமும் , சிக்கலும் புரிகிறதா உங்களுக்கு ?? என்றான் விவேக்.
பக்கத்து சீட் பயணி திருவிழாவில் விடப்பட்ட சிறுவன் போல் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனார்.இது அவரது கற்பனைக்கும் அப்பாற்பட்டது."நீங்கள் இதை வடிவமைக்கும் பணியையா செய்கிறீர்கள்"
"முன்னால் செய்து கொண்டு இருந்தேன்" கொஞ்சம் நிறுத்தி "ஆனால் இப்போது திறனாய்வு மேலாளராக(Projecr Manager) இருக்கிறேன்" என்றான்.
பக்கத்து சீட் பயணி "அப்படியானால் இப்போது உங்கள் வேலை சற்று சுளுவானதாக இருக்கும் " என்றார்.
விவேக்கிற்க்கு அழுவதா,சிரிப்பதா என்று தெரியவில்லை.இவருக்கு எப்படியாவது புரிய வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் "ஐயா! வாழ்க்கையில் மேலே உயர உயர வேலை கடினமாகிக்கொண்டே போகும் . அதிக பொறுப்பு அதிக வேலை பளுவை கொண்டு வரும். மென் பொருள் வடிவமைப்பது சுலபமல்ல .அதை இப்போது நான் செய்வதில்லை.ஆனால் அதைவிட அதிக பொருப்புகளை மேலாளர் என்ற முறையில் சுமக்கிறேன்.அது இன்னும் மிக அதிக மன அழுத்தத்தை தரும் வேலை.நான் மற்றவரிடம் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தரமான வேலை வாங்க வேண்டும் . அதில் என்ன கஷ்டம்மென்றால், ஒரு பக்கம் வாடிக்கையாளர் தன் தேவைகளை மாற்றிக்கொண்டே இருப்பார். உபயோகிப்பவரது தேவை வேறொன்றாக இருக்கும். மேலாளர் எல்லா வேலையையும் நேற்றே முடிக்க வேண்டும் என குதிப்பார். இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டும்".
விவேக் நீண்ட உரையை நிறுத்தி அவரை ஒரு கணம் உற்று பார்த்தான்.
"நண்பரே !சுறுக்கமாக சொன்னால் என் வேலை நாலா பக்கமிருந்தும் சீறிப் பறந்து வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது மாதிரி. அது எப்படியிருக்கும் என்பது உங்களுக்குப் புரியாது"
கடைசியில் அவருக்குப் புரிய வைத்துவிட்ட வெற்றிக் களிப்புடன் முறுவலித்தான்.
"நாலா பக்கமிருந்தும் சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது மாதிரி. அது உங்களுக்குப் புரியாது" இதனை ஒரு முறை தனக்குள் சொல்லிப் பார்த்தபடி அந்த மனிதர் எதோ நினைவில் தன்னை இழந்தவராக எங்கோ வெறித்தார்.
திரும்ப அவர் பேச ஆரம்பித்த போது அவர் பேச்சிலிருந்த ஆழ்ந்த அமைதியும் உறுதியும் விவேக்கை ஆச்சரியப்பட வைத்தது.அவர் நினைவு எங்கேயோ யுகங்களைத் தாண்டி கடந்த காலத்தில் சஞ்ஜரித்துக் கொண்டிருந்தது போலிருந்தது.
"ஐயா சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது எப்படியிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்" அவர் சன்னமான குரலில் பேச ஆரம்பித்தார்
"இருட்டின் போர்வையில் ' Point 4875 ' மலை முகட்டை பிடிக்கச் சொல்லி உத்தரவு வந்த பொழுது நாங்கள் மொத்தம் 30 பேர் இருந்தோம்.எதிரிகள் மலை உச்சியிலிருந்து சுட்டுக் கொண்டிருந்தனர்.எங்கிருந்து யாரிடமிருந்து, எந்தத் திசையிலிருந்து தோட்டாக்கள் பறந்து வருகின்றன என்றே அறிய முடியாத நிலை.மறுநாள் காலையில் மலையுச்சியில் பாரதத்தின் மூவர்ணக் கொடியை பறக்க விட்ட போது உயிரோடு எஞ்சியிருந்தது நாங்கள் நாலே பேர்."
"ஐயா நீங்கள் ஒரு......" என்றான் விவேக்
"நான்.... சுபைதார் சுஷாந்த் சிங்...... ஜம்மு & காஷ்மீர் பதிமூன்றாவது துப்பக்கி படைப்பிரிவிலிருந்து...... கார்கிலில் "Point 4875" மலை முகட்டை காவல் காக்கும் இராணுவப் பணியில் இருக்கிறேன்" வார்தைகள் நிதானமாக வந்தன.
"இப்போது விரும்பினால் எல்லையிலுருந்து திரும்பி உள் நாட்டில் எங்காவது சேவை செய்யலாம் என்று பரிந்துரை வந்திருக்கிறது.ஆனால் நீங்கள் சொல்லுங்கள் !!வாழ்க்கை சுளுவானதாக இருக்கும் என்று கடமையை விட்டு விட முடியுமா?" கேள்வி கேட்டு விட்டு எந்த பதிலையும் எதிர் பார்க்காமல் அவர் மேலும் தொடர்ந்தார்.
"Point 4875" முகட்டை கைப்பற்றிய அந்த காலைப் பொழுதில் நாங்கள் மறைவிடத்தில் பாது காப்பக நின்று கொண்டிருந்த போது என் சக வீரன் ஒருவன் அடி பட்டு எதிரிகளின் தோட்டாக் களுக்கு இலகுவான இலக்காக பனியில் திறந்த வெளியில் விழுந்து கிடந்தான்.அவனை மறைவிடத்தில் பாதுகாப்பக கொண்டு சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.இதற்கான உத்தரவை நான் என் படைப்பிரிவின் மேஜரிடம் கேட்ட போது மறுத்து விட்டு தானே முன் சென்று காப்பற்றுவதில் ஈடுபட்டார்.அதற்க்கு அவர் சொன்ன காரணம் " இராணுவத்தில் பயிற்ச்சிக்காக சேர்ந்த போது எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்தில் --- முதலில் என் தாய் நாட்டின் பாதுகாப்பிற்காக பாடு படுவேன் என்றும் பிறகு எனக்குக் கீழே பணி புரிவோரின் பாதுகாப்பிற்காக பாடு படுவேன் என்றும் சத்தியம் செய்தேன்.எந்த நிலையிலும் என் சொந்தப் பாதுகாப்பு கடைசி முக்கியதுவமே பெறும் எனவே நான் உயிரோடிருக்கும் வரை என் படைப்பிரிவினர் யார் உயிரையும் பணயம் வைக்க மாட்டேன்".
"மேஜர் அடி பட்ட வீரனை தோட்டக்களிடமிருந்து மறைத்து பாதுகாப்பாக கொண்டு வரும்போது எதிரியின் தோட்டக்களால் சல்லடையாக துளைக்கப் பட்டு மடிந்தார்.இப்பொழுதும் ஒவ்வொரு நாளும் "Point 4875" மலை முகட்டில் காவலுக்கு நிற்க்கும் போதும் இந்தக் காட்சி என் மனத்திரையை வியாபிக்கிறது. அதுவும் அந்த மேஜர் ,என்னைத் துளைக்க வேண்டிய தோட்டாக்களை தன் மேல் வாங்கி மடிந்த காட்சி... அப்பப்பா.... "
விவேக் ப்ரதான் கலங்கிய கண்களினூடே அவரைப் பார்த்தான்.
பிறகு நினைத்துக் கொண்டவன் போல் தனது லாப் டாப்பை off செய்தான்.
கடைமையும் , வீரசாகசங்களும் தியாகமும் வாழ்க்கையின் சாதாரண அங்கமாக இருப்பவருக்கு முன்னால் எப்படிப்பட்ட முக்கிய வேலையை செய்வதாக காட்டிக் கொண்டாலும் அது ஒரு பகட்டாகவோ அல்லது அவரை இழிவு படுத்தும் செயலாகவே இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.
இரயில் வேகமிழந்து மெதுவாக பிளாட்பாரத்தினுள் நுழைந்தது.
சுபைதார் சுஷாந்த் சிங் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானார்.
விவேக்கைப் பார்த்து புன்னகைத்து "உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்சி " என்று கை நீட்டினார்.
விவேக் ப்ரதான் தன் நடுங்கும் கரத்தால் அவர் கைகளைப் பற்றி குலுக்கிய வண்ணம் இந்தக் கைகள்தானே கரடு முரடான மலைகளை ஏறிக்கடக்கிறது,நாட்டை காப்பாற்ற துப்பாக்கி விசையை இழுக்கிறது, இந்தியாவின் மூவர்ணக் கொடியை அயராது பறக்க விட்டு பாதுகாக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.உடனே அனிச்சையாக அவரைப்பார்த்து ஒரு சல்யூட் அடித்தான்.
பின் குறிப்பு : இதில் வர்ணிக்கப் பட்டுள்ள கார்கில் 4875 மலை முகட்டு வெற்றி ஒரு உண்மை சம்பவம்.மேஜர் விக்ரம் Bபத்ரா, வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கையில், தனக்கு கீழ் பணி புரியும் வீரரை காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்தார்.அவருடைய வீர மரணத்திற்குப் பிறகு நமது தேச இராணுவத்தின் மிக உயரிய "பரம வீர் சக்ரா" விருது அவருக்கு வழங்கப்பட்டது.இது போன்ற வீர புருஷர்களால்தான் நாம் சீறி வரும் தோட்டக்களைப் பற்றிய கவலையில்லாமல் நிம்மதியாக தூங்க முடிகிறது.
Virtue does not always demand a heavy sacrifice - only the willingness to make it when necessary. ---------(Frederick Dunn)
பின்... பின் குறிப்பு : இந்தக் கதையை, சம்பவத் நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கலாம் அல்லது படித்திருக்கலாம்.ஆனால் எத்தனை முறை கேட்டாலும், படித்தாலும் அலுக்காது எனக்கு. உங்களுக்கும்தானே.
அன்புடன்......ச.சங்கர்
Sunday, June 05, 2005
படித்ததில் பிடித்ததில் மறக்காதது -- 1
எதையுமே எதிர் மறையாக சிந்திக்கும் சிலர் உங்கள் சந்தோஷக் கோட்டையை இடிக்க முனைகையில் பின் வரும் சம்பவத்தை நினைவு கொள்ளுங்கள்.
ஒரு நாள் மூர்த்தி கோட்டு தைக்க துணி எடுத்துக் கொண்டு சின்னா டைலரிடம் போனார்.
"என்னா சார்....திடீர்னு கோட்டெல்லாம்"- டெய்லர் கேட்டான்
"Delhi-க்கு போரேம்பா,லீவுக்கு ஜாலியா f·பாமிலியோட" சந்தோஷம் மிளிர சொன்னார்.
"அட என்னா சார் நீ, Delhi போரேன்றியே, கேவலமான ஊரு சார்,செம வெய்யிலு, புழுதி, கூட்டம். அது சரி எப்பிடி போற?
" western Airlines" ல, டிக்கட் cheap-ஆக கிடைச்சுது
"அட போ சார், அத்ல எவனாவது போவானா? எப்ப பாத்தாலும் லேட்டு ,சின்ன flight வேறயாம், சாப்படு,தண்ணியெல்லாம் தர மாட்டாங்கனு வேற சொல்றாங்க.அத்த வுடு,Delhi-ல எங்க தங்க போறீங்க?
"கரோல் பாக்ல சொர்ண விஹார்னு ஹோட்டல்...." முடிக்கும் முன்னாலேயே மறித்து
"மேல சொல்லாத,புரிஞ்சிடிச்சி,ஏன் சார் f·பாமிலியோட போர.அங்க போய் தங்குவேன்றியே..A/c கடியாது.·பேனும் ஓடாது.மூட்டப் பூச்சி வேற. சரி, எங்கெல்லாம் சுத்திப் பாக்கப் போற?"
"குடியரசு தலைவர் மாளிகை பக்கம் கூட விட்டிருக்க மாட்டானே,security அது இதுன்னுட்டு"
"நாங்க அந்தப் பக்கம் போயிட்டிருக்கும் போது security எங்களை கூப்பிட்டு குடியரசு தலைவர் ஒரு சுற்றுலா வந்த குடும்பத்துடன் பேச ஆசைப் படுகிறார்.நீங்க வர முடியுமான்னு கேட்டான்.நான் ம்..ன்னதும் நேர கூட்டிக்கிட்டு போயி அவர் முன்னாடி நிறுத்திட்டான்.எனக்கு கையும் ஓடலை,காலும் ஓடலை.குழந்தைகளுக்கு ஒரே சந்தோஷம் தாங்கல.அவர் கூட போட்டோ வேற எடுத்துக்கிட்டோம்."
சின்னா பிரம்மிப்புடன் "உங்கிட்ட குடியரசுத்தலைவர் என்ன பேசினார்" என்று கேட்டான்.
" யார் உனக்கு இவ்வளவு கேவலமாக கோட்டு தைத்தது ? இனிமேல் வேறு எங்காவது நல்ல டைலரிடம் தைக்கக் கொடு என்று சொன்னார்" மூர்த்தி சிரித்தவாரே சொல்லிவிட்டு நடந்தார்.
சின்னா முகம் கறுத்து நின்றான்.
எனவே நண்பர்களே!! சின்னா போன்று அறிவிலிகள் மற்றும் உங்கள் சந்தோஷத்தில் அக்கறை இல்லாதோர் உங்களை சோகப்படுத்த முயலும் போது மேற்சொன்ன கதையை நினைத்துப் பாருங்கள்.