Friday, June 17, 2005

"மெட்டி ஒலி" என்றொரு மூணரை வருட அவஸ்த்தை

சனிக்கிழமையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
என்னா விஷேஷம் தெரியுமா?என்னை நொந்த நூலாக்கிய, நாட்டு மக்களை பாடாய்ப் படுத்தி வந்த "மெட்டி ஒலி" மெகா அறுவை முடியப் போகிறது.

இந்த நேரத்தில் இது பற்றி சில கருத்துக்கள்- நம்மகிட்டதான் இதுக்கு பஞ்சமே இல்லயே.

காட்சி -1 நியூ ஜெர்சி, அமெரிக்கா

சமீபத்தில் குழந்தை பெற்ற என் தங்கையை பார்க்க + உதவிக்கு என் அம்மா அமெரிக்கா பயணப் பட்டார்.அச்சரவாக்கம் தாண்டாத அம்மா அமெரிக்கா தனியாக போகிராரே எப்படி சமாளிப்பார் என்று எனக்கு கொஞ்சம் பயம்தான்.ஒரு வழியாக இனிதே போய் சேர்ந்தார்.முதல் தடவையாய் வெளி நாடு போயிருக்கிராரே என்று போனில் அம்மா ..அங்க ஊர், வசதியெல்லாம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.நல்ல வசதியாக இருக்கிறது.டி.வி யில் "மெட்டி ஒலி" யெல்லாம் வருகிறது தெரியுமா என்றார்.அம்மாவின் வயது 65.அமெரிக்காவின் வளர்சி /வசதியே டி.வி யில் "மெட்டி ஒலி"வருவதுவராததை வைத்து எடை போடப் படுவதை நினைத்து நொந்து நூலாகி போனை வைத்தேன்.

காட்சி -2 நியூ டெல்லி, இந்தியா

நல்ல கோடை காலமானதால் இரவு உணவுக்குப் பின் மனைவியுடன் பூங்காவில் சிறிது உலாவப் போவது வழக்கம்.அங்கு சற்றே அறிமுகமான ஒரு தமிழ் மூதாட்டி ஒருவர் இருந்தார்.அருகில் அவர் பேத்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.நாங்கள் பேசிக்கொண்டிருந்த ஐந்து நிமிடத்தில் மூன்று முறை வந்து மணி என்ன, மணி என்ன என்று கேட்டாள்.நான் ஏன் வீட்டில் அப்பா/அம்மா சீக்கிரம் திரும்பி வந்து விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களா எனக் கேட்டேன்.அதற்கு அந்த பாட்டி சீக்கிரம் திரும்பி வர கூடாது என்று அனுப்பினார்கள் என்றார்.ஆச்சரியமாக ஏன் என்றேன். 9 மணிக்கு வீட்டில் இருந்தால் டி.வி போட்டுக் கொண்டு "மெட்டி ஒலி" பார்க்க உட்கார்ந்து விடுகிறாள்.பார்க்க விடா விட்டால் ஒரே அழுகை என்றார்.சின்னக் குழந்தைதானே பார்த்து விட்டு போகட்டுமே என்றேன்.நீங்க வேற வயித்தெறுச்சலை கிளப்பாதீங்க.T.V. முன்னாடி உட்கார்ந்து கொண்டு " என்ன ரவி இன்னக்கி லீலாவ(பெண்டாட்டிய) அடிக்கலையா"என்று கேட்கிறாள் என்று தலையில் அடித்துக் கொண்டார்.பேத்தியின் வயது 4. நொந்து நூலாகி நடையைக் கட்டினேன்.


காட்சி --3 சிங்காரச் சென்னை , தமிழ் நாடு

ரொம்ப நாள் கழித்து சென்னை போயிருந்தேன்.நீண்ட நாளுக்குப் பிறகு நெருங்கிய பள்ளித் தோழன் ஒருவனை சந்தித்தேன்.பள்ளி நாட்களில் ஈருடல் ஓருயிர் போல திரிந்தோம்.பிறகு 15 வருடம் கழித்து இப்போதுதான் சந்திக்கிறோம்.கூட இருந்த மனைவியைஅறிமுகப் படுத்தினார்.பிறகு இளமைக் கால நினைவுகளில் மூழ்கினோம்.நண்பனின் மனைவி அவர் காதில் ஏதோ கிசு கிசுத்தார்.அவரும் தலையாட்டிய படியே என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்.கொஞ்ச நேரத்திற்க்கு பிறகு கடிகாரத்தை பார்த்து விட்டு ஒரு மாதிரியாக நெளிந்தார்.என்ன ஏதாவது அவசர வேலையா என்றார்.இல்ல 9 மணிக்கு TV யில் "மெட்டி ஒலி" வரும்.என் பெண்டாட்டிக்கு அதை கண்டிப்பாய் பார்த்தாக வேண்டும் என்றார்.நண்பனின் மனைவியின் வயது சுமார் 26.நொந்து நூலாகி திரும்பினேன்.


மறுபடியும் முதல் பாராவை படியுங்கள்.

பி.கு : அலுவலகத்திலிருந்து லேட்டாக திரும்பிய ஒரு நாள் வீட்டு ஹாலில் அமர்ந்து காலணிகளை கழட்டிக் கொண்டிருந்த போதுTV யில் "மெட்டி ஒலி" ஓடிக் கொண்டிருந்தது.அனிச்சையாக கண் TV யை பார்க்க இரண்டு வயசானவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

muthiyavar 1 :"அடேடே வாங்க சம்பந்தி"

muthiyavar 2 "என்ன சம்பந்தி எப்படியிருக்கீங்க"

muthiyavar 1: "நல்லா இருக்கேன் சம்பந்தி. நீங்க எப்படி சம்பந்தி இருக்கீங்க?

muthiyavar 2: எனக்கென்ன சம்பந்தி. நானும் நல்லா இருக்கேன். அப்புறம் சம்பந்தி என் பொண்ணு எப்படி சம்பந்தி இருக்கா?

muthiyavar 1: அவளுக்கென்ன சம்பந்தி.ராணி மாதிரி இருக்கா சம்பந்தி. அப்புறம் என்ன சம்பந்தி இந்தப் பக்கம் திடீர்னு?

muthiyavar 2: அது ஒண்ணுமில்லை சம்பந்தி,பெரிய சம்பந்திய பாக்கப் போனேன் சம்பந்தி அப்படியே ஒங்க நியாபகம் வந்தது சம்பந்தி. அதுனால சின்ன சம்பந்தியையும் பாத்துட்டு போகலாமுன்னுட்டு வந்தேன் சம்பந்தி.

muthiyavar 1.அப்பிடியா சம்பந்தி, ரொம்ப சந்தோஷம் சம்பந்தி.


இத்துடன் TV யில் விளம்பர இடைவேளை ஆரம்பித்து விட்டார்கள். நான் கழட்டிய என் ஷ¥வாலேயே தலையில் அடித்துக் கொண்டு ஹாலை விட்டு வெளியே ஓடி விட்டேன்.


அன்புடன் ....ச.சங்கர்

-------------------------------------------------------------------------------------------------------------

Friday, June 10, 2005

நினைவில் நின்ற கதை ---2

சற்றே பெரிய உண்மைச் சம்பவம் கலந்த கதை
தலைப்பும் தமிழாக்கமும் என்னுடயது.


தோட்டாக்களின் பாதையில்
-----------------------------------------

"சார்... நீங்கள் மென்பொருள் துறையில் பணி செய்கிறீர்களா?"

" ஆம்" விவேக் ப்ரதான் தனது லாப் டாப்பிலிருந்து பார்வையை அகற்றி கேட்டவரை பார்த்தான்.

அது ஷதாப்தி எக்ஸ்பிரஸ் இரயிலின் A/c முதல் வகுப்பு பெட்டி.
விவேக் ப்ரதானுக்கு ஒரு பெரிய கணினி நிறுவனத்தில் திறனாய்வு மேலாளராக(Projecr Manager) பணி.விமானத்தில் செல்ல முடியுமானாலும் , பயணத்தின் போது வேலை செய்யகிடைக்கும் நேரம் காரணமாக இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தான்.
கேள்வி கேட்ட பக்கத்து இருக்கை பயணிக்கு சற்றேறக்குறைய முப்பது வயதிருக்கும்.

திடகார்திரமாக பார்க்க விளையாட்டு வீரர் போல இருந்தார்.ஏனோ அவரைப் பார்த்தால் அந்த A/C முதல் வகுப்புக்கு கொஞ்சமும் பொருந்தாமல் இருந்தார்.விளையாட்டு வீரர் யாராவது, பாசில் இலவச பயணம் செய்கிரார் என்று நினைத்தான் விவேக்.

" உங்களைப் போன்றவர்களால் நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது.எல்லாம் கணினி மயமாக்கப் பட்டு வருகிறது" என்றார் சக பயணி.

"நன்றி" என்றான் விவேக் ப்ரதான் சற்றே கர்வத்துடன்.
"உங்களைப் போன்றவர்களை பார்த்து நான் எப்போதுமே அதிசயித்துப் போவேன்" அவர் மேலும் தொடர்ந்தார். "நீங்கள் அறையில் அமர்ந்து கொண்டு கணினியை சொடுக்குகிறீர்கள்.அது பெரிய பெரிய வேலை யெல்லாம் செய்கிறது"

"அது வெறும் சொடுக்கும் விஷயமில்லை நண்பரே! அதன் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது தெரியுமா ?" ஒரு நிமிடம் அவருக்கு கணினியை பற்றி மேலும் விளக்கலாமா என்று யோசித்து பிறகு முடிவை மாற்றிக் கொண்டு "அது மிகவும் சிக்கலான விஷயம்" என்று தோளைக் குலுக்கினான்.

"அப்படித்தான் இருக்க வேண்டும்.அதனால்தான் உங்களுக்கெல்லாம் சம்பளம் மிக மிக அதிகமாக இருக்கிறது " என்றார் அப்பாவியாக.
இது விவேக் ப்ரதானை கொஞ்சம் சுருக் என தைத்தது.மிக மென்மையான கோபம் மேலிடும் குரலில் "எல்லோரும் சம்பளத்தையே பார்க்கிறார்கள்.யாருமே நாங்கள் செய்யும் கடின உழைப்பை பார்ப்பதில்லை.கடின உழைப்பை பற்றி நம் நாட்டவருக்கு மிகக் குறுகிய கண்ணோட்டமே இருக்கிறது. A/C அறையில் இருந்து கொண்டு வேலை செய்வதால் நாங்கள் வியர்வை சிந்துவதில்லை என்று நினைக்கிறீர்களா?உங்களைப் போல் உடலை வருத்தி வேலை செய்தால் மட்டும் கடின உழைப்பு என்று அர்த்தமில்லை. நாங்களும் மூளையை கசக்கித்தான் வேலை செய்கிரோம்.அதுவும் சுளுவானதில்லை தெரிந்து கொள்ளுங்கள்"
விவேக் ப்ரதான் மேலும் அவருக்கு புரிய வைக்க எண்ணி தொடர்ந்தான்
" உதாரணத்திற்க்கு இந்த இரயில்வே துறையை எடுத்துக் கொள்ளுங்கள்.பயணச்சீட்டு முன்பதிவு முழுவதும் கணினி மயுமாக்கப்பட்டுள்ளது.நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கணக்கான கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களில் பயணச்சீட்டை பதிவு செய்கிறார்கள்.ஒரே தகவல் மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பல்லயிரக்கணக்கான தகவல் பரிவர்த்தனைகள்,தகவல் கட்டமைப்பு, தகவல் பாதுகாப்பு,கணக்கு வழக்குகள் பராமரிப்பு என்று எவ்வளவோ இருக்கிறது! இந்த மாதிரி உள்ள ஒன்றை வடிவமைப்பதில் உள்ள நுட்பமும் , சிக்கலும் புரிகிறதா உங்களுக்கு ?? என்றான் விவேக்.

பக்கத்து சீட் பயணி திருவிழாவில் விடப்பட்ட சிறுவன் போல் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனார்.இது அவரது கற்பனைக்கும் அப்பாற்பட்டது."நீங்கள் இதை வடிவமைக்கும் பணியையா செய்கிறீர்கள்"

"முன்னால் செய்து கொண்டு இருந்தேன்" கொஞ்சம் நிறுத்தி "ஆனால் இப்போது திறனாய்வு மேலாளராக(Projecr Manager) இருக்கிறேன்" என்றான்.

பக்கத்து சீட் பயணி "அப்படியானால் இப்போது உங்கள் வேலை சற்று சுளுவானதாக இருக்கும் " என்றார்.

விவேக்கிற்க்கு அழுவதா,சிரிப்பதா என்று தெரியவில்லை.இவருக்கு எப்படியாவது புரிய வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் "ஐயா! வாழ்க்கையில் மேலே உயர உயர வேலை கடினமாகிக்கொண்டே போகும் . அதிக பொறுப்பு அதிக வேலை பளுவை கொண்டு வரும். மென் பொருள் வடிவமைப்பது சுலபமல்ல .அதை இப்போது நான் செய்வதில்லை.ஆனால் அதைவிட அதிக பொருப்புகளை மேலாளர் என்ற முறையில் சுமக்கிறேன்.அது இன்னும் மிக அதிக மன அழுத்தத்தை தரும் வேலை.நான் மற்றவரிடம் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தரமான வேலை வாங்க வேண்டும் . அதில் என்ன கஷ்டம்மென்றால், ஒரு பக்கம் வாடிக்கையாளர் தன் தேவைகளை மாற்றிக்கொண்டே இருப்பார். உபயோகிப்பவரது தேவை வேறொன்றாக இருக்கும். மேலாளர் எல்லா வேலையையும் நேற்றே முடிக்க வேண்டும் என குதிப்பார். இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டும்".
விவேக் நீண்ட உரையை நிறுத்தி அவரை ஒரு கணம் உற்று பார்த்தான்.

"நண்பரே !சுறுக்கமாக சொன்னால் என் வேலை நாலா பக்கமிருந்தும் சீறிப் பறந்து வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது மாதிரி. அது எப்படியிருக்கும் என்பது உங்களுக்குப் புரியாது"
கடைசியில் அவருக்குப் புரிய வைத்துவிட்ட வெற்றிக் களிப்புடன் முறுவலித்தான்.

"நாலா பக்கமிருந்தும் சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது மாதிரி. அது உங்களுக்குப் புரியாது" இதனை ஒரு முறை தனக்குள் சொல்லிப் பார்த்தபடி அந்த மனிதர் எதோ நினைவில் தன்னை இழந்தவராக எங்கோ வெறித்தார்.

திரும்ப அவர் பேச ஆரம்பித்த போது அவர் பேச்சிலிருந்த ஆழ்ந்த அமைதியும் உறுதியும் விவேக்கை ஆச்சரியப்பட வைத்தது.அவர் நினைவு எங்கேயோ யுகங்களைத் தாண்டி கடந்த காலத்தில் சஞ்ஜரித்துக் கொண்டிருந்தது போலிருந்தது.

"ஐயா சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது எப்படியிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும்" அவர் சன்னமான குரலில் பேச ஆரம்பித்தார்

"இருட்டின் போர்வையில் ' Point 4875 ' மலை முகட்டை பிடிக்கச் சொல்லி உத்தரவு வந்த பொழுது நாங்கள் மொத்தம் 30 பேர் இருந்தோம்.எதிரிகள் மலை உச்சியிலிருந்து சுட்டுக் கொண்டிருந்தனர்.எங்கிருந்து யாரிடமிருந்து, எந்தத் திசையிலிருந்து தோட்டாக்கள் பறந்து வருகின்றன என்றே அறிய முடியாத நிலை.மறுநாள் காலையில் மலையுச்சியில் பாரதத்தின் மூவர்ணக் கொடியை பறக்க விட்ட போது உயிரோடு எஞ்சியிருந்தது நாங்கள் நாலே பேர்."

"ஐயா நீங்கள் ஒரு......" என்றான் விவேக்

"நான்.... சுபைதார் சுஷாந்த் சிங்...... ஜம்மு & காஷ்மீர் பதிமூன்றாவது துப்பக்கி படைப்பிரிவிலிருந்து...... கார்கிலில் "Point 4875" மலை முகட்டை காவல் காக்கும் இராணுவப் பணியில் இருக்கிறேன்" வார்தைகள் நிதானமாக வந்தன.

"இப்போது விரும்பினால் எல்லையிலுருந்து திரும்பி உள் நாட்டில் எங்காவது சேவை செய்யலாம் என்று பரிந்துரை வந்திருக்கிறது.ஆனால் நீங்கள் சொல்லுங்கள் !!வாழ்க்கை சுளுவானதாக இருக்கும் என்று கடமையை விட்டு விட முடியுமா?" கேள்வி கேட்டு விட்டு எந்த பதிலையும் எதிர் பார்க்காமல் அவர் மேலும் தொடர்ந்தார்.

"Point 4875" முகட்டை கைப்பற்றிய அந்த காலைப் பொழுதில் நாங்கள் மறைவிடத்தில் பாது காப்பக நின்று கொண்டிருந்த போது என் சக வீரன் ஒருவன் அடி பட்டு எதிரிகளின் தோட்டாக் களுக்கு இலகுவான இலக்காக பனியில் திறந்த வெளியில் விழுந்து கிடந்தான்.அவனை மறைவிடத்தில் பாதுகாப்பக கொண்டு சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.இதற்கான உத்தரவை நான் என் படைப்பிரிவின் மேஜரிடம் கேட்ட போது மறுத்து விட்டு தானே முன் சென்று காப்பற்றுவதில் ஈடுபட்டார்.அதற்க்கு அவர் சொன்ன காரணம் " இராணுவத்தில் பயிற்ச்சிக்காக சேர்ந்த போது எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்தில் --- முதலில் என் தாய் நாட்டின் பாதுகாப்பிற்காக பாடு படுவேன் என்றும் பிறகு எனக்குக் கீழே பணி புரிவோரின் பாதுகாப்பிற்காக பாடு படுவேன் என்றும் சத்தியம் செய்தேன்.எந்த நிலையிலும் என் சொந்தப் பாதுகாப்பு கடைசி முக்கியதுவமே பெறும் எனவே நான் உயிரோடிருக்கும் வரை என் படைப்பிரிவினர் யார் உயிரையும் பணயம் வைக்க மாட்டேன்".

"மேஜர் அடி பட்ட வீரனை தோட்டக்களிடமிருந்து மறைத்து பாதுகாப்பாக கொண்டு வரும்போது எதிரியின் தோட்டக்களால் சல்லடையாக துளைக்கப் பட்டு மடிந்தார்.
இப்பொழுதும் ஒவ்வொரு நாளும் "Point 4875" மலை முகட்டில் காவலுக்கு நிற்க்கும் போதும் இந்தக் காட்சி என் மனத்திரையை வியாபிக்கிறது. அதுவும் அந்த மேஜர் ,என்னைத் துளைக்க வேண்டிய தோட்டாக்களை தன் மேல் வாங்கி மடிந்த காட்சி... அப்பப்பா.... "
"சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது எப்படியிருக்கும் என்பது எனக்கும் கண்டிப்பாக தெரியும் ஐயா" என்று சொல்லி நிறுத்தினார்.

விவேக் ப்ரதான் கலங்கிய கண்களினூடே அவரைப் பார்த்தான்.
பிறகு நினைத்துக் கொண்டவன் போல் தனது லாப் டாப்பை off செய்தான்.

கடைமையும் , வீரசாகசங்களும் தியாகமும் வாழ்க்கையின் சாதாரண அங்கமாக இருப்பவருக்கு முன்னால் எப்படிப்பட்ட முக்கிய வேலையை செய்வதாக காட்டிக் கொண்டாலும் அது ஒரு பகட்டாகவோ அல்லது அவரை இழிவு படுத்தும் செயலாகவே இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

இரயில் வேகமிழந்து மெதுவாக பிளாட்பாரத்தினுள் நுழைந்தது.
சுபைதார் சுஷாந்த் சிங் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானார்.

விவேக்கைப் பார்த்து புன்னகைத்து "உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்சி " என்று கை நீட்டினார்.

விவேக் ப்ரதான் தன் நடுங்கும் கரத்தால் அவர் கைகளைப் பற்றி குலுக்கிய வண்ணம் இந்தக் கைகள்தானே கரடு முரடான மலைகளை ஏறிக்கடக்கிறது,நாட்டை காப்பாற்ற துப்பாக்கி விசையை இழுக்கிறது, இந்தியாவின் மூவர்ணக் கொடியை அயராது பறக்க விட்டு பாதுகாக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.உடனே அனிச்சையாக அவரைப்பார்த்து ஒரு சல்யூட் அடித்தான்.

பின் குறிப்பு : இதில் வர்ணிக்கப் பட்டுள்ள கார்கில் 4875 மலை முகட்டு வெற்றி ஒரு உண்மை சம்பவம்.மேஜர் விக்ரம் Bபத்ரா, வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கையில், தனக்கு கீழ் பணி புரியும் வீரரை காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்தார்.அவருடைய வீர மரணத்திற்குப் பிறகு நமது தேச இராணுவத்தின் மிக உயரிய "பரம வீர் சக்ரா" விருது அவருக்கு வழங்கப்பட்டது.இது போன்ற வீர புருஷர்களால்தான் நாம் சீறி வரும் தோட்டக்களைப் பற்றிய கவலையில்லாமல் நிம்மதியாக தூங்க முடிகிறது.

Virtue does not always demand a heavy sacrifice - only the willingness to make it when necessary. ---------(Frederick Dunn)

பின்... பின் குறிப்பு : இந்தக் கதையை, சம்பவத் நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கலாம் அல்லது படித்திருக்கலாம்.ஆனால் எத்தனை முறை கேட்டாலும், படித்தாலும் அலுக்காது எனக்கு. உங்களுக்கும்தானே.

அன்புடன்......ச.சங்கர்
Sunday, June 05, 2005

படித்ததில் பிடித்ததில் மறக்காதது -- 1

உன் சந்தோஷக் கோட்டையை இடிக்க நினைப்பவன்
-----------------------------------------------------------------------
எதையுமே எதிர் மறையாக சிந்திக்கும் சிலர் உங்கள் சந்தோஷக் கோட்டையை இடிக்க முனைகையில் பின் வரும் சம்பவத்தை நினைவு கொள்ளுங்கள்.

ஒரு நாள் மூர்த்தி கோட்டு தைக்க துணி எடுத்துக் கொண்டு சின்னா டைலரிடம் போனார்.

"என்னா சார்....திடீர்னு கோட்டெல்லாம்"- டெய்லர் கேட்டான்

"Delhi-க்கு போரேம்பா,லீவுக்கு ஜாலியா f·பாமிலியோட" சந்தோஷம் மிளிர சொன்னார்.

"அட என்னா சார் நீ, Delhi போரேன்றியே, கேவலமான ஊரு சார்,செம வெய்யிலு, புழுதி, கூட்டம். அது சரி எப்பிடி போற?

" western Airlines" ல, டிக்கட் cheap-ஆக கிடைச்சுது

"அட போ சார், அத்ல எவனாவது போவானா? எப்ப பாத்தாலும் லேட்டு ,சின்ன flight வேறயாம், சாப்படு,தண்ணியெல்லாம் தர மாட்டாங்கனு வேற சொல்றாங்க.அத்த வுடு,Delhi-ல எங்க தங்க போறீங்க?

"கரோல் பாக்ல சொர்ண விஹார்னு ஹோட்டல்...." முடிக்கும் முன்னாலேயே மறித்து

"மேல சொல்லாத,புரிஞ்சிடிச்சி,ஏன் சார் f·பாமிலியோட போர.அங்க போய் தங்குவேன்றியே..A/c கடியாது.·பேனும் ஓடாது.மூட்டப் பூச்சி வேற. சரி, எங்கெல்லாம் சுத்திப் பாக்கப் போற?"
கொழந்தைகளுக்கு ரொம்ப நாளா குடியரசுத் தலைவர பாக்கணும்னு ஆசை.முடிஞ்சா கூட்டிட்டுப் போயி காட்டலாமுன்னுட்டு...."
"இதப்பார்டா..!! அவரு இன்னா... நீ எப்ப வருனேனுட்டு காத்துகினிருக்காராங்காட்டியும்.அவரப் பாக்க பிரதமர்,மந்திரி இவங்களே தல கீழா நிக்கிறாங்க.ஜோக்கடிக்காத சார்."
மூர்த்தி ஒன்றும் சொல்லவில்லை.
"இன்னாவோ போ, தண்டமா போப் போது பாத்துக்க " சின்னா நக்கலாக சிரித்தான்.
2 மாதம் கழித்து மீண்டும் கடைத்தெருவில் சின்னா மூர்த்தியை பார்த்தான்.
"என்னா சார் Delhi போய் வந்துட்டியா?ஒரே வெயில் தான? "
"இல்லப்பா நா போனப்ப நல்லா மழை பெஞ்சு விட்டதால வெயிலுமில்ல, புழுதியுமில்ல அப்புறம் metro train ஓடுறதால இப்ப Delhi ல traffic jam எல்லாம் கெடையாது.ரொம்ப நல்லா இருந்தது"
சின்னா விடாமல் "Flight எவ்வளவு நேரம் லேட்டு" என்றான்
"அதை ஏன் கேக்குற, அன்னக்கி அந்த air lines ஆரமிச்சு 1 வருஷம் ஆச்சாம்.அதுனால சரியான டயத்துக்கு போனதுமில்லாம flight-ல் எல்லாருக்கும் விருந்தே வச்சிட்டங்க.அது தவிர Delhi ல இறங்கும் போது ஆளுக்கு ஒரு வாச்சு வேற பரிசா குடுத்தாங்க."
"ம்..ம்.. சொர்ண விலாஸ் ஹோட்டல் அதே மூட்டப் பூச்சியோட....." என்று இழுத்தான்.
மூர்த்தி''அதாம்பா இல்ல..இப்ப அத இடிச்சி மூணு நட்சத்திர ஹோட்டலாக்கிட்டான்.நாங்க போகும் போது ஹோட்டல் full. நாங்க அட்வான்சா புக் செஞ்சிருந்ததால் எங்களுக்கு extra காசு வாங்காமல் ஒரு suit குடுத்துட்டான்.காலையில் டிபன் வேற free.பசங்க நல்லா enjoy பண்ணினாங்க" என்றார்.

"குடியரசு தலைவர் மாளிகை பக்கம் கூட விட்டிருக்க மாட்டானே,security அது இதுன்னுட்டு"

"நாங்க அந்தப் பக்கம் போயிட்டிருக்கும் போது security எங்களை கூப்பிட்டு குடியரசு தலைவர் ஒரு சுற்றுலா வந்த குடும்பத்துடன் பேச ஆசைப் படுகிறார்.நீங்க வர முடியுமான்னு கேட்டான்.நான் ம்..ன்னதும் நேர கூட்டிக்கிட்டு போயி அவர் முன்னாடி நிறுத்திட்டான்.எனக்கு கையும் ஓடலை,காலும் ஓடலை.குழந்தைகளுக்கு ஒரே சந்தோஷம் தாங்கல.அவர் கூட போட்டோ வேற எடுத்துக்கிட்டோம்."

சின்னா பிரம்மிப்புடன் "உங்கிட்ட குடியரசுத்தலைவர் என்ன பேசினார்" என்று கேட்டான்.

" யார் உனக்கு இவ்வளவு கேவலமாக கோட்டு தைத்தது ? இனிமேல் வேறு எங்காவது நல்ல டைலரிடம் தைக்கக் கொடு என்று சொன்னார்" மூர்த்தி சிரித்தவாரே சொல்லிவிட்டு நடந்தார்.

சின்னா முகம் கறுத்து நின்றான்.

எனவே நண்பர்களே!! சின்னா போன்று அறிவிலிகள் மற்றும் உங்கள் சந்தோஷத்தில் அக்கறை இல்லாதோர் உங்களை சோகப்படுத்த முயலும் போது மேற்சொன்ன கதையை நினைத்துப் பாருங்கள்.