Friday, June 17, 2005

"மெட்டி ஒலி" என்றொரு மூணரை வருட அவஸ்த்தை

சனிக்கிழமையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
என்னா விஷேஷம் தெரியுமா?என்னை நொந்த நூலாக்கிய, நாட்டு மக்களை பாடாய்ப் படுத்தி வந்த "மெட்டி ஒலி" மெகா அறுவை முடியப் போகிறது.

இந்த நேரத்தில் இது பற்றி சில கருத்துக்கள்- நம்மகிட்டதான் இதுக்கு பஞ்சமே இல்லயே.

காட்சி -1 நியூ ஜெர்சி, அமெரிக்கா

சமீபத்தில் குழந்தை பெற்ற என் தங்கையை பார்க்க + உதவிக்கு என் அம்மா அமெரிக்கா பயணப் பட்டார்.அச்சரவாக்கம் தாண்டாத அம்மா அமெரிக்கா தனியாக போகிராரே எப்படி சமாளிப்பார் என்று எனக்கு கொஞ்சம் பயம்தான்.ஒரு வழியாக இனிதே போய் சேர்ந்தார்.முதல் தடவையாய் வெளி நாடு போயிருக்கிராரே என்று போனில் அம்மா ..அங்க ஊர், வசதியெல்லாம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.நல்ல வசதியாக இருக்கிறது.டி.வி யில் "மெட்டி ஒலி" யெல்லாம் வருகிறது தெரியுமா என்றார்.அம்மாவின் வயது 65.அமெரிக்காவின் வளர்சி /வசதியே டி.வி யில் "மெட்டி ஒலி"வருவதுவராததை வைத்து எடை போடப் படுவதை நினைத்து நொந்து நூலாகி போனை வைத்தேன்.

காட்சி -2 நியூ டெல்லி, இந்தியா

நல்ல கோடை காலமானதால் இரவு உணவுக்குப் பின் மனைவியுடன் பூங்காவில் சிறிது உலாவப் போவது வழக்கம்.அங்கு சற்றே அறிமுகமான ஒரு தமிழ் மூதாட்டி ஒருவர் இருந்தார்.அருகில் அவர் பேத்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.நாங்கள் பேசிக்கொண்டிருந்த ஐந்து நிமிடத்தில் மூன்று முறை வந்து மணி என்ன, மணி என்ன என்று கேட்டாள்.நான் ஏன் வீட்டில் அப்பா/அம்மா சீக்கிரம் திரும்பி வந்து விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களா எனக் கேட்டேன்.அதற்கு அந்த பாட்டி சீக்கிரம் திரும்பி வர கூடாது என்று அனுப்பினார்கள் என்றார்.ஆச்சரியமாக ஏன் என்றேன். 9 மணிக்கு வீட்டில் இருந்தால் டி.வி போட்டுக் கொண்டு "மெட்டி ஒலி" பார்க்க உட்கார்ந்து விடுகிறாள்.பார்க்க விடா விட்டால் ஒரே அழுகை என்றார்.சின்னக் குழந்தைதானே பார்த்து விட்டு போகட்டுமே என்றேன்.நீங்க வேற வயித்தெறுச்சலை கிளப்பாதீங்க.T.V. முன்னாடி உட்கார்ந்து கொண்டு " என்ன ரவி இன்னக்கி லீலாவ(பெண்டாட்டிய) அடிக்கலையா"என்று கேட்கிறாள் என்று தலையில் அடித்துக் கொண்டார்.பேத்தியின் வயது 4. நொந்து நூலாகி நடையைக் கட்டினேன்.


காட்சி --3 சிங்காரச் சென்னை , தமிழ் நாடு

ரொம்ப நாள் கழித்து சென்னை போயிருந்தேன்.நீண்ட நாளுக்குப் பிறகு நெருங்கிய பள்ளித் தோழன் ஒருவனை சந்தித்தேன்.பள்ளி நாட்களில் ஈருடல் ஓருயிர் போல திரிந்தோம்.பிறகு 15 வருடம் கழித்து இப்போதுதான் சந்திக்கிறோம்.கூட இருந்த மனைவியைஅறிமுகப் படுத்தினார்.பிறகு இளமைக் கால நினைவுகளில் மூழ்கினோம்.நண்பனின் மனைவி அவர் காதில் ஏதோ கிசு கிசுத்தார்.அவரும் தலையாட்டிய படியே என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்.கொஞ்ச நேரத்திற்க்கு பிறகு கடிகாரத்தை பார்த்து விட்டு ஒரு மாதிரியாக நெளிந்தார்.என்ன ஏதாவது அவசர வேலையா என்றார்.இல்ல 9 மணிக்கு TV யில் "மெட்டி ஒலி" வரும்.என் பெண்டாட்டிக்கு அதை கண்டிப்பாய் பார்த்தாக வேண்டும் என்றார்.நண்பனின் மனைவியின் வயது சுமார் 26.நொந்து நூலாகி திரும்பினேன்.


மறுபடியும் முதல் பாராவை படியுங்கள்.

பி.கு : அலுவலகத்திலிருந்து லேட்டாக திரும்பிய ஒரு நாள் வீட்டு ஹாலில் அமர்ந்து காலணிகளை கழட்டிக் கொண்டிருந்த போதுTV யில் "மெட்டி ஒலி" ஓடிக் கொண்டிருந்தது.அனிச்சையாக கண் TV யை பார்க்க இரண்டு வயசானவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

muthiyavar 1 :"அடேடே வாங்க சம்பந்தி"

muthiyavar 2 "என்ன சம்பந்தி எப்படியிருக்கீங்க"

muthiyavar 1: "நல்லா இருக்கேன் சம்பந்தி. நீங்க எப்படி சம்பந்தி இருக்கீங்க?

muthiyavar 2: எனக்கென்ன சம்பந்தி. நானும் நல்லா இருக்கேன். அப்புறம் சம்பந்தி என் பொண்ணு எப்படி சம்பந்தி இருக்கா?

muthiyavar 1: அவளுக்கென்ன சம்பந்தி.ராணி மாதிரி இருக்கா சம்பந்தி. அப்புறம் என்ன சம்பந்தி இந்தப் பக்கம் திடீர்னு?

muthiyavar 2: அது ஒண்ணுமில்லை சம்பந்தி,பெரிய சம்பந்திய பாக்கப் போனேன் சம்பந்தி அப்படியே ஒங்க நியாபகம் வந்தது சம்பந்தி. அதுனால சின்ன சம்பந்தியையும் பாத்துட்டு போகலாமுன்னுட்டு வந்தேன் சம்பந்தி.

muthiyavar 1.அப்பிடியா சம்பந்தி, ரொம்ப சந்தோஷம் சம்பந்தி.


இத்துடன் TV யில் விளம்பர இடைவேளை ஆரம்பித்து விட்டார்கள். நான் கழட்டிய என் ஷ¥வாலேயே தலையில் அடித்துக் கொண்டு ஹாலை விட்டு வெளியே ஓடி விட்டேன்.


அன்புடன் ....ச.சங்கர்

-------------------------------------------------------------------------------------------------------------

24 comments:

துளசி கோபால் said...

:-)))))))

PositiveRAMA said...

சரியாகத்தான் சொன்னீர்கள் போங்கள்.

கயல்விழி said...

சும்மா சொல்லக்கூடாது றொம்பத்தான் நொந்திருக்கிறியள். இனி என்ன தொடரப்போகுதோ.? எதுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் வரப்போற அல்லலை சமாளிக்க. :)))

ச.சங்கர் said...

ÅÕ¨¸ ¾ó¾¾¢üÌõ À¾¢Å¢üÌõ ¿ýÈ¢
ÐǺ¢ §¸¡À¡ø,À¡º¢Êù áÁ¡ & ¸ÂøŢƢ.

¸ÂøŢƢ, §¿üÚ '¦ÁðÊ ´Ä¢" º¢ÈôÒ ¦¸¡ñ¼¡ð¼õ ¿¼ó¾Ð.«¾¢ø «Îò¾ ¦Á¸¡ ¦¾¡¼÷ 'ÓÜ÷ò¾õ' ±ýÚ ´ýÚ ¦¾¡¼í¸Å¢ÕôÀ¾¡¸ ¦º¡ýÉ¡÷¸û....

«ýÒ¼ý....º.ºí¸÷.

Alex Pandian said...

சங்கர் - அருமையாக எழுதுகிறீர்கள். அடிக்கடி எழுதவும். புதுடில்லியிலிருந்து எழுதும் முதல் நபர் (தமிழ்மணம் வலைப்பதிவு உலகில்) நீங்கள் தான் என நினைக்கிறேன். இந்த சீரியல் தொல்லையிலிருந்து விடுபட சிறந்த வழி - அந்த நேரங்களில் வீட்டாரை வேறு முக்கிய, சிறந்த பணிகளில் ஈடுபடுத்துவதுதான் அல்லது நாம் ரிமோட்டைவைத்துக்கொண்டு நேஷனல் ஜியாகிரபிக் அல்லது டிஸ்கவரி சேனல் பார்ப்பது. அதுவும் 7.30 மணிமுதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களிலும் இந்த அறைதல், திட்டுதல், குயுக்திகள், பழிவாங்கும் கதாபாத்திரங்கள்
எல்லாம் மூளையை மழுங்கடிக்கின்றன


- அலெக்ஸ் பாண்டியன்

dondu(#4800161) said...

"இந்த சீரியல் தொல்லையிலிருந்து விடுபட சிறந்த வழி - அந்த நேரங்களில் வீட்டாரை வேறு முக்கிய, சிறந்த பணிகளில் ஈடுபடுத்துவதுதான் அல்லது நாம் ரிமோட்டைவைத்துக்கொண்டு நேஷனல் ஜியாகிரபிக் அல்லது டிஸ்கவரி சேனல் பார்ப்பது. அதுவும் 7.30 மணிமுதல் 10.30 மணி வரை ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களிலும் இந்த அறைதல், திட்டுதல், குயுக்திகள், பழிவாங்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் மூளையை மழுங்கடிக்கின்றன"

ஏன் சார் சங்கர் அவர்கள் மேல் என்ன கோபம்? அவ்வாறு செய்ய முயற்சித்தால் அவர் 7.30 மணிமுதல் 10.30 மணி வரை வீட்டிற்குள் செல்ல முடியாது என்பது தெரியாதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

ச.சங்கர் said...

நன்றி Alex pandiyan,டோண்டு ராகவன்
டோண்டு சார்,உங்க comment படித்து விட்டு
நமுட்டு சிரிப்பு சிரித்த என்னை
என் மனைவி " நான் என்ன அப்படியா
சீரியல் பயித்தியம் பிடித்து அலைகிறேன்" என்று
டோஸ் விட்டது தனிக் கதை.

ச.சங்கர் said...
This comment has been removed by a blog administrator.
Andhimazhai said...

Dear Sankar,
Best Wishes..Some thing interesting about in the following link..
Web Address of Tamils
Write More and more..

Moorthi said...

ரசிக்கவைத்த பதிவு சங்கர்.

Ramya Nageswaran said...

கவலை தரக் கூடிய ஒரு கலாச்சார போக்கை நகைச்சுவையோட, நல்லா சொல்லியிருக்கீங்க. எந்த ஒரு டைட்டில் சாங்கில் யாரும் யாரையும் கன்னத்தில் 'பளார்'ரென்று அடிக்காம இருக்காங்களோ அந்த சீரியல் பார்க்கலாம்னு நானும் சில வருடமா முயற்சி செஞ்சு பாக்கறேன். இதுவரை ஒண்ணு கூட கிடைக்கலை!!:-)

பாண்டி said...

கடந்த கோடையில், நயாகராவில் ஒரு மாலைப்பொழுதில் ஒட்டு கேட்ட உரையாடல். நயாகராவில் அருவிக்கரையில் என்னிலிருந்து கூப்பிடு தூரத்திலிருக்கும் ஒரு தமிழ் குடும்பத்தின் உரையாடல்.

மகன்: கரைக்கு அந்த பக்கம் இருக்கிறதுதான் கனடா. அங்கேயிருந்து அருவிய பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.. இன்னிக்கு வானவேடிக்கை(fireworks) இருக்குன்னு போட்டிருக்கான்.9:30 க்கு ஆரம்பிக்கும். பாக்கிறதுக்கு நல்லா இருக்கும்.

அம்மா: இன்னேரம் மெட்டி ஒலி போட்டிருப்பான். மகேசு(மகன்), மெட்டி ஒலி போட்டியா?

மகன் : அடடே மறந்துட்டேனே அம்மா... (அம்மா மிகவும் விசனப்படுகிறார்).

சிறிது நேரத்தில் வான வேடிக்கை ஆரம்பிக்கிறது.

அம்மா : மகேசு, உன் பிரண்டு கிட்ட சொல்லி நம்ம வீட்டுக்கு போயி ரெcஒர்டிங் போட முடியுமான்னு பாக்கிறயா?

மகன் : பாக்க்லாம்மா.. இப்பொ வானவேடிக்கை பாருங்க.

அம்மா : இதென்ன நம்ம ஊருல இல்லாத வெடியா.. இன்னிக்கு ரொம்ப முக்கியமான சீன். இப்பவே கூப்பிட்டு போட சொல்லு.

அதன்பின் அந்த மகன் தன்னுடைய நண்பனுக்கு தொலைபேசி ஆவன செய்கிறார்... :(

ச.சங்கர் said...

மூர்த்தி ,ரம்யா நாகேஸ்வரன் மற்றும் பாண்டி கருத்துக்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ச.சங்கர் said...

மன்னிக்கவும்...ப்ளாகர் பீட்டா மார்ரம் செய்த பின் தமிழ்மணம் சேர்ப்பு பட்டையை சரி செய்து கொண்டிருந்த போது பழைய பதிவு மீள்பதிவாகி விட்டது....அதனால் என்ன...எந்த தமிழ் சீரியலுக்கும் எப்போதும் பொருந்தும் :)

மஞ்சூர் ராசா said...

மீள் பதிவு போட்டா என்ன? நான் எழுதிய மீள் பதிவையும் சேத்து படிச்சிகட்டும்:

மூன்றரை வருட அவஸ்தை
நேற்று பயங்கர வெயிலில் ஒரு முக்கியமான வேலையாக அலைந்துவிட்டு(காரில்தான்) (வெயில் மட்டுமல்ல, சூடான மணல் தூசியும் சுமார் 55 டிகிரிஇருக்கலாம்). மனைவியையும் அவங்க அலுவலகத்திலிருந்து பிக்கப் செய்துக்கொண்டு, இனி எங்கே வீட்டுக்கு போய் சமையல் செய்து சாப்பிடமுடியும் (2 மணி) என்று ஓட்டலில் சாப்ப்ட்டுவிட்டு கிளம்பும் போது,

மனைவி: நீங்க போங்க, நா இங்கே இருக்கற தோழியைப் பார்த்துவிட்டு(தோழியிடமிருந்து இரண்டு முறை தொல்லைப்பேசி வந்துவிட்டது) அப்படியே உங்க தம்பி வீட்டுக்கு போய் மெட்டி ஒலி பார்த்துட்டு வந்து விடுகிறேன். நம்ம வீட்லெ வர்றதில்லெ
மறுத்துப் பேச முடியுமா நான். சரி, சீக்கிரம் வந்துரு.

தோழியின் வீட்டில் மனைவியை இறக்கிவிட்டு, வீட்டிற்கு வந்து அப்பாடா கொஞ்ச நேரம் படுக்கலாமேன்னு கண்ணெ மூடி ஒரு அஞ்சி நிமிசம் இருக்கும்,
வீட்டு தொல்லைபேசி கிணுகிணுத்தது
ஹலோ, அண்ணா, நா சந்திரசெகரண்ணா,
ஒரு முக்கியமான விசய்மண்ணா,
நீங்க வீட்லெதானெ இருக்கீங்க
ஆமா என்ன விசயம்?
இல்லெண்ணா நா நேரில் வந்து பேசறேன்!
சரி வா.
பேசியை வைத்துவிட்டு மறுபடியும் படுத்தேன்.
லேசாக கண்ணயர்ந்து பத்துநிமிடம் கழித்து மறுபடியும் தொல்லைபேசி
அண்ணா நாந்தான் சந்திரசேகர்,
அண்ணா உங்க வீட்டிலெ மெட்டி ஒலி வருதா அண்ணா?
இல்லெ
அப்படியா, அக்கா எங்கே?
தம்பி வீட்டுக்கு போயிருக்கா, ஆமா நீ ஏதோ விசயம் பேச வர்றேன்னுசொன்னியே?
அது ஒண்ணுமில்லெண்ணா, மெட்டிஒலி பாக்கணும்னுதான்!
பேசி வைக்கப்பட்டது.
(என்னுடைய நிலைமெ எப்படி இருக்கும்)

மறுபடியும் 10 நிமிடம் கழித்து,
கதவு தட்டும் சத்தம்.
எரிச்சலுடன் தூக்கக்கலக்கத்தில் கதவைத் திறந்தால்,
வீட்டுகாரியும், தோழியும்.
அவங்க வீட்லெ வரலீங்க, நம்ம வீட்லெவர்தா?
டிவியை ஆன் செய்தாள்.
என் துரதிர்ஸ்டம் இரண்டுநாள் வராத சன் டிவி வந்தேவிட்டது.
என்ன செய்ய, ஹாலை விட்டு பேசாமல் உள்ளே போய் படுத்தேன். தூக்கம்வந்தால்தானே!?
கொடுமை...

கொஞ்ச நேரம் புரண்டு புரண்டுப் படுத்துவிட்டு, முடியாமல் எழுந்து முகம் கழுவிவிட்டு, மனைவியிடம் டீ போட சொன்னா கோவிச்சுக்குவாளெ என்று
நைசா, என்ன ஆச்சு என்றுக் கேட்டால்,
க்ளைமாக்ஸ் சரியில்லெ என்றாள்.
பிறகு ஒரு வழியா அவளே எழுந்து டீ போட்டுக் கொடுத்துவிட்டாள்
பின்குறிப்பு: மெட்டி ஒலி முடிந்த கையோடு புது தொடர் ஆரம்பிக்கிறார்களாம் (செத்தோமடா சாமி)
இதுக்கு வைரமுத்து, கலைஞர், மனோரமா இவர்களின் தலைமையில் விழாவேறெ!.

ஐய்யயோ என்ன ஒரே கூட்டமா வருது....
கையில் என்னன்னமோ இருக்குதே,?
அட நம்மளெத்தான் மொத்த வர்றாங்க டோய்!..
விடு ஜூட்.....

Anonymous said...

என்ன மெட்டி ஒலி இப்பொழுதுதானா முடிந்தது என்று பார்த்தேன்.நீங்கள் இதை எழுதிப் பல மாதங்கள் ஆயிற்று என்று இப்பொழுதுதான் கவனித்தேன்.மெட்டி ஒலிக்குப் பதிலாக சங்கு ஒலி என்று ஏதாச்சும் வந்து இருக்கனுமே?ஒரு துக்க காரியம் நடந்த வீடு அது.நிறைய பேர் இருந்தார்கள்.ஆனால் 9 மணிக்கு மூக்கால்வாசி பேரைக் காணோம்.என்னடான்னு பார்த்தால் எல்லாரும் டிவியின் முன்பு அமர்ந்துவிட்டார்கள்.அங்கே ஒருத்தர் செத்ததுக் கூட கவலை இல்லை.நாடகம் முக்கியமாகப் போய் விட்டது.ஒரு மெகா தொடர் முடிந்தால் உடனே இன்னொரு மெகா தொடர் வந்து உயிரை எடுக்கனுமே?எங்கே பார்த்தாலும் எல்லாரும் திட்டிக் கொண்டும்,அழுதுக் கொண்டும் இருக்கின்றார்கள்.இப்பொழுது என்னவென்றால் ஆண்களும் கூட சேர்ந்து விட்டார்கள்.

ச.சங்கர் said...

நன்றி மஞ்சூர் ராஜா மற்றும் துர்கா.

துர்கா சொல்வது சரிதான் :)

நாமக்கல் சிபி said...

அட! என்னங்க இது?

மெட்டி ஒலி சிதம்பரம் மாமா செத்ததுக்கு எங்க ஊர்ப்பக்கம் இருந்து ஒரு குரூப்பா கெளம்பி மெட்ராஸுக்கு போனாங்களே துக்கம் விசாரிக்க!

ச.சங்கர் said...

"""நாமக்கல் சிபி said...
அட! என்னங்க இது?

மெட்டி ஒலி சிதம்பரம் மாமா செத்ததுக்கு எங்க ஊர்ப்பக்கம் இருந்து ஒரு குரூப்பா கெளம்பி மெட்ராஸுக்கு போனாங்களே துக்கம் விசாரிக்க! """"

அது சரி :))

வல்லிசிம்ஹன் said...

தந்தையர் தின மீள்பதிவா...

மெட்டி ஒலிசித்தி எல்லாம் போயி இப்போது வேற வேற நிறைய அர்த்தமுள்ள(!!!) தொடர்கள் வந்துவிட்டன.
நம் மக்களும் நாளொரு மெனி பொழுதொருவண்ணம்
மனவளம் பெற்றுச் சிந்தைச் சிற்பிகளாக மாறி வருகிறார்கள்.:((((

ச.சங்கர் said...

ஏற்கனவே அவஸ்தை " இதுல மீள் பதிவு வேறையா?:)))

நான் மீள் பதியவில்லை...நீங்க லேட்டா படிக்கிறீங்க வல்லி சிம்ஹன் :))

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
suratha said...

வணக்கம்
உங்களது இந்தப் பதிவு இந்த வார பூங்கா இதழுக்கான தமிழ்மண வாசிப்பில் என்னை கவர்ந்த பதிவுகளில் ஒன்றாக தெரிவுசெய்துள்ளேன்.
பாராட்டுக்களுடன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.

ச.சங்கர் said...

நன்றி திரு சுரதா அவர்களே