Saturday, July 02, 2005

நான் தொடங்கிய கதை . முடிவை நீங்கள் சொல்லுங்கள்

ஒரு வித்தியாசமான கதை முயற்சி.

நான் தொடங்கிய கதை . முடிவை நீங்கள் சொல்லுங்கள்.

"கல்பானை சோழிக்கல்"

பொன்னம்மா அந்த கிராமத்தின் கனவு தேவதை என்று சொல்லக்கூடிய மாதிரித்தான் இருந்தாள்.சற்றே கருப்பானாலும் எடுப்பான தேகம்.களையான முகம்.பட்டாம் பூச்சி போல் படபடக்கும் கண்கள்.பொன்னம்மா அழகானவள் மட்டுமல்ல அதற்கேற்றாற் போல் புத்தி சாதுரியம் உள்ளவளும் கூட.

கன்னையனுக்கு அவள் மேல் ரொம்ப நாளாகவே ஒரு கண். கிராமத்திலேயே கொஞ்சம் பணம் காசுடன் வசதியாக வாழ்பவன்.மைனர்தனங்கள் கொஞ்சம் உண்டென்றாலும் ஒரேடியாக கெட்டவன் என்று சொல்லி விட முடியாது.சின்ன சின்ன சபலங்கள் உண்டென்றாலும் பெரிய தப்பெல்லாம் பண்ணும் அளவுக்கு தைரியம் கிடையாது. எவ்வளவோ தடவை பொன்னம்மாவின் தகப்பன் வேலுச்சாமியிடம் பொன்னம்மாவை பெண் கேட்டும் வேலுச்சாமி பிடி கொடுத்தே பேசவில்லை.

காரணம் வேலுச்சாமியின் அக்காள் மகன் அழகேசன்.அவன் கன்னையனைப் போல் பணக்காரன் இல்லை என்றாலும் ஓரளவு நிலம் வைத்து சொந்தமாக விவசாயம் பார்த்து கஷ்டமில்லாமல் ஜீவனம் பண்ணிக் கொண்டிருந்தான். அழகேசன் பொன்னம்மாவிற்க்கு முறைப் பையன் என்பதாலும் பொன்னம்மாவிற்கும் அவன் மேல் கொஞ்சம் அபிமானம் உண்டென்று அரசல் புரசலாக பிறர் சொல்லி கேள்விப்பட்டதாலும் வேலுச்சாமி யோசித்துக் கொண்டிருந்தான்.

பொன்னம்மாவிற்கும் அழகேசனுக்கும் உடனடியாக பரிசம் போட்டு விடலாம் என்றால் அதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. முன்பு வேலுச்சாமி விவசாய நஷ்டம் காரணமாக கன்னையனிடம் பெரும் தொகை கடனாக வாங்கி இருந்தான்.பரிசம் போடவோ அல்லது கடனை அடைக்கவோ அவனிடம் உடனடியாக பணம் இல்லை.

அந்த ஊரில் ஆண் பிள்ளையில்லாத கடனாளியான ஒருவர், தன் மகளுக்கு, கடன் கொடுத்தவர் தவிர வேறு ஒருவருக்கு பரிசம் போட வேண்டும் என்றால் கடன் கொடுத்தவரின் அனுமதி வேண்டும் என்பது கட்டுப்பாடு. கடன் கொடுத்தவர் சம்மதிக்காத பட்சத்திலும் அதே சமயம் அந்தப் பெண் கடன் கொடுத்தவரை மணக்க சம்மதிக்காத பட்சத்திலும் ஒரே ஒரு வழிதான் இருந்தது. அதுதான் "கல் பானை சோழிக்கல் " போடுதல்.

அதாவது ஊர்ப் பஞ்சாயத்து கூடும் இடத்தில் ஒரு கை மட்டுமே உள்ளே நுழையக் கூடிய சின்ன வாயுள்ள ஒரு கல் குடம் இருக்கும். ஊர்ப் பூசாரி கறுப்பு மற்றும் வெளுப்பு கலரில் கோலி அளவுள்ள ரெண்டு கூழாங்கல்லை ( சோழிக்கல்) பூஜையில் வைத்து பெளர்ணமி நாள் நள்ளிரவில் கல் பானையில் போட்டு அதன் வாயை மஞ்சள் துணி போட்டு கட்டி விடுவார்.அடுத்த அம்மாவாசையன்று ஊர் முன்னிலையில் அந்தப் பெண் கல் பானையில் இருந்து ஒரு சோழிக்கல்லை எடுக்க வேண்டும். எடுத்தது கருப்புக் கல்லாயிருந்தால் அந்தப் பெண் வாதியையே (கடன் கொடுத்தவர்) மணக்க வேண்டியது.வெள்ளைக் கல் என்றால் அந்தப் பெண் யாரை வேண்டுமானாலும் மணக்கலாம்.அவள் தகப்பன் கடனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இ.பி.கோ சட்டம், போலிஸ் எல்லாம் எட்டிப் பார்க்காத குக்கிராமமாகையால் இதுவே நடைமுறையாக இருந்தது.இடைப்பட்ட பதினைந்து நாளில் எதாவது சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் "கல் பானை சோழிக்கல்" எடுப்பது தவிர்க்கப் படும்.
இப்படியாகத்தானே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பொன்னம்மா கல்யாணப் பிரச்சனை ஊர்ப் பஞ்சாயத்தின் முன் வந்து ஒரு சமாதானமும் ஆகாமல் " கல் பானை சோழிக்கல்" போட்டு விடுவது என்று முடிவாகியது.ஊர்ப்பூசாரி ஒரு பெளர்ணமி சுப யோக சுப இரவில் கோவிலில் அம்மன் முன் வைத்த சோழிக்கற்களை யாரும் பார்க்காமல் நள்ளிரவில் கல் பானையில் போட்டு மாலை மரியாதைகளோடு மஞ்சள் துணி போட்டு கட்டி வைத்து விட்டார்.
பொன்னம்மா தினமும் வயல்காட்டுக்கு போகும் பொழுது பஞ்சாயது கூடுமிடத்தை கடந்துதான் போக வேண்டும். கல் பானையைப் பார்க்கும் போதே அவளுக்கு தன் மற்றும் அப்பன் தலை எழுத்து பானைக்குள் ஒளிந்து கிடக்கிறதே என்று இருக்கும்.
இப்படியாக பத்து நாட்கள் போயிருக்கும்.
ஒரு நாள் அந்தியில் இருட்டிய பிறகு வயலில் இருந்து வீடு திரும்பும் போது திடீரென்று மழை சட சடத்தது. டக்கென ஒரு மரத்தோரம் ஒதுங்கிய பொன்னம்மாள் மாராப்பால் ஈரம் துடைத்தபடி நின்று இருந்த போது மரத்தின் அந்தப்பக்கமிறுந்து பேச்சரவம் கேட்டு அப்படியே அசயாது நின்றாள்.அந்தப் பேச்சில் பொன்னம்மா என்ற பெயர் அடி படவே உன்னிப்பாய்க் கேட்கலானாள்.கன்னையனும் அவன் கைத்தடிகளில் ஒருவனும் தான் பேசிக் கொண்டிருந்தனர்.
கைத்தடி கேட்டான் "ஏண்ணே பொன்னம்மாவைக் கட்டிக்கிட ரொம்ப இஷ்டம்மாக இருந்தீங்களே.இப்ப கல் பானையிலிருந்து பொன்னம்மா வெள்ளைக்கல் எடுத்துட்டா என்ன செய்வீங்க ? என்றான்.
கன்னையன் ஒரு மாதிரியாக சிரித்து விட்டு "டேய் இது கூடவா நா யோசிக்காம இருந்திருப்பேன், பொன்னம்மா வெள்ளைக் கல்ல எடுக்க மாட்டா. எடுக்கவும் முடியாதுடா" என்றான்.
கைத்தடி ரொம்ப ஆச்சர்யமாக "எப்படிண்ணே இவ்வளவு உறுதியா சொல்றீங்க " என்றான்.
கன்னய்யன் "அடேய் இந்த பூசாரியும் என் கிட்ட கடன் வாங்கினவம்தானடா.ஆனா அது ஊர்ல யாருக்கும் தெரியாது .அதனால அவன மிரட்டி கல்பானைக்குள்ள ரெண்டயுமே கறுப்பு சோழியா போடச் சொல்லிட்டேன்.அப்புறம் எப்படிடா பொன்னம்மா வெள்ளைச் சோழிக்கல் எடுப்பா? என்னயக் கல்யாணம் கட்டாம இருப்பா? " என்று கேட்டான்.
இதைக் கேட்ட பொன்னம்மா அப்படியே விக்கித்துப் போய் நின்றாள்.முதலில் என்ன செய்வது என்றே ஒன்றும் தோன்றவில்லை.பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்த படியே நடக்க லானாள். இந்த விஷயத்தை ஊருக்குள் சொல்வதனால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. பூசாரி தப்பு பண்ணி விட்டான் என்று நிரூபிக்கலாமே தவிர கன்னையன்தான் செய்யச் சொன்னான் என்று நிரூபிக்க முடியாது.அதனால் அவள் அப்பன் கடனுக்கு எந்த விடிவும் கிடையாது. அதனால் பஞ்சாயத்து அடுத்த பெளர்ணமியில் திரும்ப கல்பானை கட்டச் சொல்லும்.அதில் கறுப்புக் கல் எடுத்தாலும் கன்னையனைத்தான் கட்ட வேண்டும்.ஆனால் இந்த தடவை கல் எடுத்தால் கண்டிப்பாக கறுப்புதன் அப்புறம் கன்னையன்தான் கணவன் என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தபடியே நடந்தாள்.
எது செய்தாலும் இன்னும் ஐந்து நாட்கள்தான் பாக்கி..........

இந்தக் கதையை ஆரம்பித்து விட்டேன். முடிக்கத் தெரியவில்லை .

வலைப்பூ வாசகப் பெருமக்களே / குழும நண்பர்களே இதன் முடிவு எப்படி இருக்கலாம் என்று யூகித்து எழுதுங்களேன்.நல்ல கற்பனைக்கு ஆயிரம் பொன் பரிசுன்னுலாம் அறிவிக்க மாட்டேன் . என் கிட்ட கிடையாது.ஒரு சபாஷ் அவ்வளவுதான்.
எழுதப் பட்ட முடிவுகளில் லாஜிக் இருக்க வேண்டும்.அதைப் பற்றி மற்றவர்கள் விமர்சிக்கலாம்.

பின் குறிப்பு : உண்மையில் பொன்னம்மாளுக்கு என்ன ஆயிற்றென்று அடுத்த பதிவில் சாவகாசமாய்.
அதற்குள் உங்களில் ஒருவர் சரியாக ஊகித்தாலும் ஊகிக்கலாம்.
எல்லாம் அவன் செயல்.

அன்புடன் ....ச.சங்கர்

7 comments:

enRenRum-anbudan.BALA said...

nallA irukku !
yOsikkiREn :)

A n& said...

I read something simillar in old "Akbar-Birbal " story.

She will take one stone and swallow it. No one will know what she took. The remaining one will be obviously a black stone. So it has to be assumed that she swalled a white one..and She wins ;)

ச.சங்கர் said...

நன்றி பாலா மற்றும் ஆனந்த்
ஆனந்த்...நீங்கள் சொல்லியிருப்பதும் கதைக்கு புத்திசாலித்தனமான ஒரு முடிவாக இருக்கலாம்.
இந்தக் கதையின் நோக்கமே அதன் எண்ணற்ற முடிவுகளின் சாத்தியக் கூறுகள்தான்.
பொன்னம்மாவிற்க்கு என்ன ஆயிற்று என அடுத்த வாரம் இதே வலை பதிவில் கண்டிப்பாக பார்க்கவும்
அன்புடன்....ச.சங்கர்

NONO said...

யாருக்கும் தெரியாமல் ஒரு நள்ளிரவில் பொன்னம்மா இரண்டு வெள்ளை கல்லை அந்த பாணைக்குள் போட்டுவிடுகிறாள்!!!!

சரிதானே....!!!!!!

enRenRum-anbudan.BALA said...

சங்கர்,
நீங்கள் அதிகம் சன்டிவி தொடர்களை பார்ப்பவர் அல்லர் என்பது உங்கள் 'மெட்டிஒலி' குறித்த முந்தைய விமர்சனப் பதிவிலிருந்து தெரிகிறது !!!! "ராஜராஜேஸ்வரி" என்று ஒரு பக்தி பரவசத்தொடர்(!) சன்டிவியில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிப்பரப்பாகிறது.

அதை (எப்போதாவது!) பார்த்த தாக்கத்தில் பிறந்தது, உங்கள் கதைக்கான இந்த அருமையான முடிவு ;-)

கண்ணம்மா, கோயிலுக்கு சென்று அம்மனை, "நீ உன் பக்தைக்கு காட்டும் கருணை இது தானா ? நீ கல்லா, இல்லை உண்மையிலே நலிந்தவர்க்கு உதவும் தாயா ? உன்னை நம்பிய என்னை மோசம் செய்யலாமா ?" என்று கூக்குரலிட்டும், அம்மனிடமிருந்து மௌனமே பதிலாக கிடைத்தது. இருந்தும், அந்த 5 நாட்களும் அம்மனே கதியென்று கோயிலிலேயே அம்மனை துதித்தபடி பழியாகக் கிடந்தாள்!

கல்பானையிலிருந்து சோழிக்கல் எடுக்கும் திருநாளும் வந்தது ! கிராமமே திரண்டிருந்தது. கன்னையன் உற்சாகமாக காணப்பட்டான். பூசாரி திருட்டு முழி முழித்துக் கொண்டு, சோகமே உருவாக இருந்த கண்ணம்மாவைப் பார்த்து, "அம்மனை நினைச்சுக்கிட்டு, பானையிலிருந்து ஒரு கல் எடு தாயீ!" என்றார்.

கண்ணம்மா பானைக்குள் கையை விட்டவுடன், அம்மனின் கண்ணிலிருந்து (யார் கண்ணுக்கும் புலப்படாத!) புறப்பட்ட ஒளிக்கீற்று பானையைத் தாக்கியது ! கண்ணம்மா எடுத்தது, அம்மன் திருவருளால், வெள்ளைக்கல் தான் !!! பூசாரிக்கு அதிர்ச்சியிலும், கன்னையன் என்ன செய்வானோ என்ற பீதியிலும் மாரடைப்பு ஏற்பட்டு ஸ்பாட்டிலேயே காலி !

ஒரு நல்ல நாளில்,கண்ணம்மாவுக்கும் அழகேசனுக்கும் விமரிசையாகத் திருமணம் நடந்தேறியது and they lived happily ever after !

பி.கு: குடித்து குடித்து கன்னையன், புத்தி பேதலித்தவனானான். சொத்தையும், பணத்தையும் இழந்த அவனுக்கு கண்ணம்மா தான் திண்ணையில் வைத்து சோறு போட்டு வருகிறாள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

ச.சங்கர் said...

Dear Bala,

சினிமா லாஜிக் !!!!,மெகா சீசரியல் லாஜிக்!!!! எல்லாம் பொருந்தி வருகிறது.
ஆனால் யதார்தம் இல்லாததால் கொஞ்சம் உதைக்கிறது.
மற்றபடி சூப்பர் finish-ங்கோவ் . எதுக்கும் copy rights register பண்ணி வைத்து விடுங்கள்.
ஏதாவது சினிமா அல்லது சீரியல் director விலைக்கு கேட்டு வந்தாலும் வரலாம்,
இந்தக் கதையின் நிஜ முடிவு இன்னும் சில நாட்களில் அடுத்த பதிவில்.

நன்றி....அன்புடன்....ச.சங்கர்

சேதுக்கரசி said...

இந்தக் கதையை முதல் முறை வாசித்தபோது தான் சங்கர் என்னும் எழுத்தாளரைக் கண்டேன் :-) மீண்டும் வாசிக்க மகிழ்ச்சி... :-)