Sunday, June 06, 2010

சீவகன் கதை - " பினாத்தலின்" முதல் நாவல்

தமிழில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான "சீவக சிந்தாமணி " நாவல் வடிவில் எழுதப் பட்டு வெளிவந்திருக்கிறது.நாவலாக எழுதியுள்ளவர் தமிழ்ப் பதிவுலகில் "பினாத்தல் சுரேஷ் " என்று அறியப்படும் பிரபல:) பதிவர்-ராம்சுரேஷ் என்ற பெயரில் எழுதியுள்ளார். வெளியிட்டிருப்பது - கிழக்கு பதிப்பகம்

கடினமான கவிதை அல்லது செய்யுள் வடிவிலுல்ள தமிழ்க்காப்பியங்களை அனைவரும் படிக்கும் எளியதமிழில் நாவல் வடிவில் தரவேண்டும் என்ற எண்ணத்துக்கு கிழக்கு பதிப்பகத்தாருக்கு பாராட்டுக்கள்.காப்பியங்களில் முழுமையாகக் கிடைக்கப் பெற்றுள்ள சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவக சிந்தாமணி என்ற மூன்றையும் நாவல் வடிவில் கொண்டு வந்துள்ளார்கள்.இது முதன் முதலில் தமிழில் செய்யப்படும் புதுமையான முயற்சி இல்லை..ஏற்கனவே தேவாரப் பாடல்களும், பெரிய புராணமும் கதை வடிவங்களாக வெளியிடப் பட்டிருக்கிறது.ஆனாலும் இத்தகைய முயற்சிகள் ஒவ்வொரு கால கட்டத்தில் நடந்து கொண்டே இருப்பதன் மூலம் இந்தக்காவியங்கள் /காப்பியங்கள் அந்தந்த தலைமுறை மக்களுக்கு அவர்களது பயன் படு மொழியிலேயே சென்று சேர்வதால் நமது இலக்கியக் களஞ்சியமான இவற்றை அழியாமல் காப்பதிலும் அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்லவும், இது பற்றி மேலும் அறிந்து கொள்ள மூல நூல்களைத் தேடிச் செல்லும் அவர்களது ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தூண்டு கோலாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதையே புத்தகங்களின் முன்னுரையிலே பதிப்பகத்தாரும் தங்கள் குறிக்கோளாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.அந்த வகையிலே பதிப்பகத்தாரும் மூன்று ஆசிரியர்களும் தங்களுடைய நோக்கத்திலே வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும் .பாராட்டுகள்.

மூன்று புத்தகங்களையும் படித்து விட்டாலும் "சீவக சிந்தாமணி " பற்றி முதலில் எனது எண்ணங்கள் பதியக் காரணம் படிப்பதற்கு முன் இந்த மூன்று காப்பியங்களில் நான் அதிகம் அறிந்திராதது சீவக சிந்தாமணிதான் என்பதாலும், எழுதிய ராம் சுரேஷுக்கு இது முதல் நாவல் என்பதாலும் அன்றி அவர் எனக்குத் தெரிந்தவர் மற்றும் நண்பர் என்பதாலல்ல :)

தான் எழுதிய முதல் நாவல் என்று வாசகனுக்கு தெரியாத அளவிலே சீவகனின் கதையை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் தேர்ந்த எழுத்தாளர் போல் சொல்லியிருக்கிறார் ராம் சுரேஷ்.புத்தகத்தைக் கீழே வைக்காமல் படித்து முடிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தும்படி எழுதியிருப்பது எழுத்தாளரின் வெற்றியே .

இந்தக் கதையைப் படித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது தமிழில் அனேகமாக முதலில் தோன்றிய ஹீரோ சீவகந்தான் என்று .இன்றைய தமிழ் ஹீரோவை மையப்படுத்தி வரும் படங்களில் வாடிக்கையாக ஹீரோக்கள் செய்யும் / வரும் காதல், மோதல், சொத்தை இழத்தல், அனாதை,தாய்ப்பாசம், பிரிவு, மாற்றாந்தாய்,சூழ்ச்சி,பழிவாங்கல்,சபதம்,பழி தீர்த்தல்...அத்தனையும் சீவகன் கதையில் நீக்கமற நிறைந்திருக்கிறது.அதுவுமில்லாமல் சீவகனுக்கு 8 ஹீரோயின்கள்:). போதாக்குறைக்கு தன்னைக் காதலிக்கும் மற்றும் இரண்டு பெண்களை அறிவுரை சொல்லித் திருத்தி விடுகிறான் (எம்ஜியார் பாணி தங்கச்சி சென்டிமென்ட் சீவகனுக்கு எப்படித் தெரிந்தது:) ) இன்றளவும் தமிழ்ப்படங்களுக்கு கதைக்கரு தரும் வற்றாத அட்சய பாத்திரம் "சீவகசிந்தாமணி"தான் என்று சொல்லலாம் போல் இருக்கிறது.அதே நேரத்தில் கதை படித்தால் மஹாபாரதத்தையும், கிருஷ்ணன் கதையையும் , அர்சுனன் கதையையும் கலந்து அதில் சமண மத எஸன்ஸையும் சேர்த்து தயார்க்கப் பட்ட மிக்ஸட் ஃப்ருட் ஜாம் இந்த சீவக சிந்தாமணி என்ற எண்ணமும் வருகிறது.எப்படியிருப்பினும் சீவக சிந்தாமணி படிக்கச் சுவை குன்றாத ஒரு அழகிய காப்பியம் என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாக பண்டைக் காவியங்களை நாவலாக்கும் முயற்சியில் அல்லது சரித்திரக் கதைகளை எழுதும் போது எழுத்தாளர்கள் வருணனைகளில் அதிகம் புகுந்து விடுவது உண்டு.அப்படிப் பட்ட வருணனைகள் கதையின் ஓட்டத்தை மட்டுப்படுத்தக் கூடிய அபாயமும் நேர்ந்து விடுவதுண்டு.அதற்கு நேர் மாறாக சிலர் கதையை நேரடியாக வெட்டொன்று துண்டு இரண்டு என்னும் படியாக எழுதி விடும் போது அதில் கதை ஓட்டம் நன்றாக இருந்தாலும் படித்து முடிக்கையில் ஊட்டியின் இயற்கையான குளு குளு எஃபெக்ட் இல்லாமல் செயற்கையான ஏசி ரூமின் குளு குளு எஃபெக்ட் மட்டுமே கிடைகும். இது இரண்டுமில்லாது வர்ணனைகளை சரியான அளவிலும் ,தேவையான இடங்களிலும் கொடுத்து படிப்பதை சுவாரசியமாக ஆக்கியிருக்கிறார் ராம் சுரேஷ்.

கதையில் மொத்தம் 65 கதாபாத்திரங்களுக்கும் மேல்.அதுவும் உருத்திரதத்தன்,கந்துக்கடன், காந்தர்வதத்தை, அனங்கமாலை, கலுழுவேகன், அசனிவேகம்,அநங்கமாவீணை, அசலகீர்த்தி, அநங்கவிலாசினி, பவணமாதேவன் என்று பல் சுளுக்கும் பழந்தமிழ்ப் பெயர்களோடு. ஆனால் நாவல் படித்து முடித்தது கதா பாத்திரங்களை நினைவில் நிறுத்தும் வகையில் கதை சுவாரசியமாக சொல்லப்பட்டிருப்பது மூலத்தை வடித்த திருத்தக்கத் தேவரின் திறமையாகவும் இருக்கலாம் அல்லது நாவலாக்கிய ராம்சுரேஷின் திறமையா தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பாராட்டுக்கள்.

கிழக்கு பதிப்பகமும் நாவலை தரமான முறையிலே அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். நான் படித்த வரை மொத்த 253 பக்க கதையில் மூன்று இடங்களில் எழுத்துப் பிழை தவிர ( ஒரு இடத்தில் சீவகன் சேவகன் ஆகிவிட்டான் :) ) வேறு குறை கண்ணில் படவில்லை.

மொத்தம் 12 பாகங்களில் 80 பிரிவுகளாக பிரித்துக் கதை அமைத்திருக்கிறது. நிறைய பிரிவுகளின் தலைப்புகள் சுமார் ரகம். பொதுவாக கல்கி ,சாண்டில்யன் சரித்திரக் கதைகளில் பிரிவுகளின் தலைப்புகளே படிக்கும் ஆர்வத்தை தூண்டும் படி இருக்கும்.அடுத்தடுத்து எழுதும் கதைகளில் எழுத்தாளர் இதில் கவனம் செலுத்துவது நலம்.
பினாத்தல் சுரேஷாக எழுதும் போது எழுத்தில் இழையோடும் நகச்சுவை முத்திரை ராம் சுரேஷின் நாவலில் சில இடங்களில் மட்டுமே காண முடிந்தது.சரித்திர / இலக்கிய களம் என்ற தயக்கமோ அல்லது டெபுடன்ட் நாவல் எழுத்தாளர் என்ற பயமாக கூட இருக்கலாம். இனி வரும் காலங்களில் இயல்பாக அடித்து ஆடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

மொத்தத்தில் இந்தக் கதை படித்ததால் திருத்தக்கத் தேவரின் "சீவக சிந்தாமணி " நூலைப் படிக்கும் ஆவல் எழுந்துள்ளது என்பது உண்மை.அதை முழுதும் படித்த பின் ராம்சுரேஷின் நாவல் மீதான என் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டாலும், ஒரு தனி நாவலாக,தமிழின் ஒரு பெரும் காப்பியக் கதையை எளிய முறையில் அறிமுகப் படுத்தும் ஒரு நூலாக இந்தப் படைப்பு வெற்றி பெற்றுள்ளது.மேலும் இது ஒவ்வொரு உப பிரிவாக நம் குழந்தைகளுக்கு கதை போல் படித்துக்காட்டும் எளிமையான முறையிலும் அமைந்திருக்கிறது. இதை தமிழ் இலக்கிய ஆர்வலர்களும், நாவல் விரும்பிகளும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று தைரியமாக பரிந்துரைக்கிறேன்.

வாழ்த்துக்கள் ராம் சுரேஷ் (அ) சுரேஷ் பாபு (அ) பினாத்தல் சுரேஷ்

அன்புடன்...ச.சங்கர்

22 comments:

M.G.ரவிக்குமார்™..., said...

போலவே சிலப்பதிகாரத்தை நம் இன்னொரு பதிவர் நண்பர் திரு.ஜவ(க)ர்லால் அவர்கள் எழுதி இருக்கிறார்.கிழக்கு பதிப்பகமே இதையும் வெளியிட்டிருக்கிறது!
http://kgjawarlal.wordpress.com/

Anonymous said...

நல்ல விமர்சனம் நன்றி பத்ரி.

கோயிஞ்சாமி குரூப் துபாய் கிளை

ச.சங்கர் said...

///நேசன்..., said...
போலவே சிலப்பதிகாரத்தை நம் இன்னொரு பதிவர் நண்பர் திரு.ஜவ(க)ர்லால் அவர்கள் எழுதி இருக்கிறார்.கிழக்கு பதிப்பகமே இதையும் வெளியிட்டிருக்கிறது!http://kgjawarlal.wordpress.com////

நேசன்..நன்றி..அதுமட்டுமல்ல..மணிமேகலையை நாவல் வடிவில் என். சொக்கன் எழுதி அதுவும் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளி வந்துள்ளது. நான் மூன்று புத்தகங்களையும் படித்து விட்டேன். பதிவில் சொல்லியிருக்கிறேனே :)

ச.சங்கர் said...

நன்றி அனானி

ஏதோ சொல்ல வரீங்க..என்னன்னுதான் புரியலை :(

ஆயில்யன் said...

//இது பற்றி மேலும் அறிந்து கொள்ள மூல நூல்களைத் தேடிச் செல்லும் அவர்களது ஆர்வத்தைத் தூண்டும் ஒரு தூண்டு கோலாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை///

வெளியிடப்பட்டிருக்கும் நூல்களின் மூலம், மேல் குறிப்பிட்ட விசயங்கள் சாத்தியமாகுமெனில் நன்மை தமிழுக்கே!

வாழ்த்துக்கள் ராம் சுரேஷ் aka பெனாத்தலார் :)

சுடச்சுட புத்தக விமரிசனம் அளித்தமைக்கும் நன்றிகள் !

சென்ஷி said...

:)

வாழ்த்துகள் சொல்லிக்கறேன். நாவலை வாங்கி படிச்சிடறோம் :)

இலவசக்கொத்தனார் said...

நபநப

பினாத்தல் சுரேஷ் said...

நல்லதொரு அறிமுகத்துக்கு நன்றி சங்கர். நீங்கள் புத்தகம் வாங்க பட்ட பாட்டையும் எழுதி இருக்கலாம் :-)

Anonymous said...

நல்ல விமர்சனம் நன்றி பத்ரி

கோயிஞ்சாமி குரூப் அமெரிக்க வகிமா கிளை

Sridhar Narayanan said...

//நான் படித்த வரை மொத்த 253 பக்க கதையில் மூன்று இடங்களில் எழுத்துப் பிழை தவிர ( ஒரு இடத்தில் சீவகன் சேவகன் ஆகிவிட்டான் :) ) வேறு குறை கண்ணில் படவில்லை.//

உங்களை ப்ரூஃப் ரீடிங் திறமை அசத்த வைக்கிறது சங்கர்ஜி :)

//ஒரு தனி நாவலாக,தமிழின் ஒரு பெரும் காப்பியக் கதையை எளிய முறையில் அறிமுகப் படுத்தும் ஒரு நூலாக இந்தப் படைப்பு வெற்றி பெற்றுள்ளது.//

வாழ்த்துகள் ராம்பாபு... சாரி... ராம்சுரேஷ் என்னும் சுரேஷ்பாபு :))

Jawahar said...

///நேசன்..., said...
போலவே சிலப்பதிகாரத்தை நம் இன்னொரு பதிவர் நண்பர் திரு.ஜவ(க)ர்லால் அவர்கள் எழுதி இருக்கிறார்.கிழக்கு பதிப்பகமே இதையும் வெளியிட்டிருக்கிறது!http://kgjawarlal.wordpress.com////

நேசன்..நன்றி..அதுமட்டுமல்ல..மணிமேகலையை நாவல் வடிவில் என். சொக்கன் எழுதி அதுவும் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளி வந்துள்ளது. நான் மூன்று புத்தகங்களையும் படித்து விட்டேன். பதிவில் சொல்லியிருக்கிறேனே :)

நன்றி நேசன் மற்றும் சுரேஷ்...

http://kgjawarlal.wordpress.com

Geetha Sambasivam said...

சிலப்பதிகாரத்தை மட்டுமே மூலத்தில் படிக்க நேர்ந்திருக்கிறது. மூன்றுமே நாவல் வடிவில் வந்துவிட்ட செய்தி புதிய தகவல். பெனாத்தல் தான் முதலில் முயற்சித்திருக்கிறார் என எண்ணினேன். அனைவருக்கும் என் வாழ்த்துகள். மூன்றையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் ஆகிறது. அருமையான விமரிசனம் என்றாலும் நானும் படிச்சுப் பார்க்கணுமே! :))))))

Jazeela said...

நல்ல விமர்சனம். மூன்றையுமே படிக்க வேண்டும். முதலில் புத்தகத்தை வாங்க வேண்டும் ;-). வாழ்த்துகள் பினாத்தலாரே!

துளசி கோபால் said...

பினாத்தலாரின் புத்தகத்தைக் கட்டாயம் வாங்கிக்கணும்போல இருக்கே!

ஆவலைத் தூண்டி விட்டுருக்கீங்க:-))))

ச.சங்கர் said...

நன்றி ஆயில்யன், சென்ஷி, இலவசக்கொத்தனார்

ச.சங்கர் said...

//ராம்சுரேஷ் said...
நல்லதொரு அறிமுகத்துக்கு நன்றி சங்கர். நீங்கள் புத்தகம் வாங்க பட்ட பாட்டையும் எழுதி இருக்கலாம் :-)//

அதை அடுத்த பதிவில் சொல்லலாம் என்றிருக்கிறேன் :)

ச.சங்கர் said...

அனானி

நன்றி ..துபாய் கிளைக்கான பதிலைப் பார்க்கவும் :)

ச.சங்கர் said...

//உங்களை ப்ரூஃப் ரீடிங் திறமை அசத்த வைக்கிறது சங்கர்ஜி :)//

ஸ்ரீதர் நாராயணன்

இப்படியெல்லாம் ஒண்ணு ரெண்டு பாயின்ட் போட்டாத்தான புத்தகத்தை கவனமாக முழுமையாக படித்தேன் அப்படீன்னு நம்புவீங்க :)

ச.சங்கர் said...

ஜவஹர்

உங்கள் சிலப்பதிகாரத்திற்கும் வாழ்த்துக்கள். ஒட்டு மொத்தத்தில் சிறப்பதிகாரமாக வந்திருக்கிறது.

சிலம்பும் மேகலையும் பற்றி அடுத்த பதிவில்:)

Jawahar said...

நன்றி சங்கர்ஜி, இடுகை போடும்போது ஒரு அலர்ட் குடுங்க.

http://kgjawarlal.wordpress.com

ச.சங்கர் said...

நன்றி கீதா மேடம், ஜெஸிலா மேடம் மற்றும் துளசி டீச்சர்

கெக்கே பிக்குணி அவர்களுக்கும் நன்றி.இங்கு பின்னூட்டம் இடவில்லை என்றாலும் ராம்சுரேஷ் (அதாம்பா பினாத்தலு)பதிவில் விமர்சனம் படித்ததாக எழுதியிருந்தார் :)

ILA (a) இளா said...

சிபஎபா உங்கள் பதிவை நான் இணைத்திருக்கிறேன்