Tuesday, December 19, 2006

அம்மா என்றால் அன்பா ?

இந்தப் பதிவு ஜெ பற்றி என்று நினைத்து வந்திருந்தால் ...sorry you have come to a wrong place :)))


பணமா .... பாசமா
....



இன்று காலையில் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பும் போது தொலைக்காட்சியில் தென்கச்சி சுவாமிநாதன் தாயன்பு பற்றி விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தார்.அதில் அவர் உண்மை சம்பவம் என்று சொன்ன ஒரு நிகழ்சி பின்வருமாறு


""ஒரு பெரிய அதிகாரியாக இருப்பவர் தனது வயதான அன்னையை சந்திக்க வந்து ஒரு ஐந்து நிமிடம் பேசி விட்டு பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டு கிளம்பினாராம்.அப்போது அந்த அம்மா அந்த அதிகாரி மகனைப் பார்த்து இந்தப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்ததற்குப் பதில் இன்னும் என்னுடன் அரை மணி நேரம் அதிகம் செலவழித்தால் நான் அதிகம் சந்தோஷப் பட்டிருப்பேன்..வயசான காலத்தில்... என்று சொன்னாளாம்""



இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு இது கொஞ்சம் நாடகத்தனமாக பட்டது.இந்த மெட்டிரியலிஸ்டிக் உலகில் இது போல சொன்ன தாய் பணத்தேவை இல்லாத தன்னிறைவடைந்த வசதி படைத்த அம்மாவாக இருக்கும் என்று தோன்றியது.இதே சோத்துக்கே கஷ்டப்படும் அம்மாவாக இருந்தாலும் உளமார இப்படியே சொல்லியிருப்பாரா ? அல்லது செலவழிச்சு வந்ததுக்கு பதிலா ஒரு 200 ரூபாய் மணி ஆர்டர் பண்ணியிருந்தால் இந்த மாத செலவுக்கு ஆகியிருக்கும் என practical -ஆக சொல்லியிருப்பாரா? அப்படி சொன்னாலும் தப்பில்லை என்பது என் அபிப்ராயம்.


எனது அனுபவத்திலிருந்து என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

நீங்க என்ன நினைக்கிறீங்க ?


அன்புடன்...ச.சங்கர்

Sunday, December 17, 2006

முல்லை பெரியார்- நிரந்தர தீர்வு



முல்லை பெரியார் பற்றி என் முந்தைய பதிவு http://ssankar.blogspot.com/2006/10/blog-post.html


அந்த பதிவிட்ட காலத்திற்கு பிறகு இரு மாநில முதல்வர்களும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு வார்த்தை??!! நடத்தி அது எதிர்பார்த்த மாதிரியே தோல்வியில் முடிந்து , பின் face saving measure ஆக அமைச்சர்கள் மட்டப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற முடிவுடன் முடிந்து...ஆயிற்று.... நாளை சம்பந்தப் பட்ட இரு மாநில அமைச்சர்களும் பொறியாளர்கள் சகிதம் மத்திய அமைச்சர் முன்னிலையில் பேச உள்ளார்கள்.இந்தப் பேச்சு வார்த்தையிலும் பெரிதாக பயனுள்ள எந்த முடிவும் எட்டக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக நான் நம்பவில்லை.


இதன் நடுவில்...பேச்சுவார்த்தையின் போது தமிழக முதல்வர் ஆற்றிய உரையின் பகுதி முதன்மை செய்தித்தாள்களில் அரசு விளம்பரமாக வர , அடுத்த வாரத்தில் கேரள முதல்வரின் உரை அதே மாதிரி விளம்பரமாக வந்தது.அதில் கேரள முதலமைச்சர் அணை உடைந்து விடும் அபாயம் பற்றி பயமுறுத்தியிருந்தார்.இதல்லாமல் அணை உடைவது போல் க்ராபிக்ஸ் வகை படங்கள் கேரளாவில் இடுக்கி பகுதியில் ஒளிபரப்பப்பட்டு """மாஸ் சைக்கிக்கை""" தமிழகத்துக்கு எதிராக தூண்டி விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.இதனை தமிழக முதல்வர் மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் கண்டித்துள்ளனர்.இந்தக் கால கட்டத்தி எந்தக் கலை,இலக்கிய, அரசியல் கூட்டத்திலும் தமிழக முதல்வரிடம் கேட்கப்படும் அல்லது அவர் பேசும் ஒரு விஷயமாகவே முல்லைப்பெரியார் அணை விவகாரம் மாறிவிட்டது.

அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் தோல்வியென்றால் அடுத்த கட்டமாக உச்சநீதி மன்றத்தை நாடப் போவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.ஆனால் கேரள அரசு ஏற்கனவே கொடுக்கப் பட்ட உச்ச நீதி மன்ற தீர்ப்பை எள்ளளவேனும் கூட மதிக்கவில்லை என்பதையும் எக்காரணத்தை கொண்டும் அணை நீர்மட்டத்தை உயர்த்த மாட்டோம் என அறிக்கை விடுவதையும்,புது அணை கட்டலாம் என போகாத ஊருக்கு வழி தேடுவதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

பின் இந்த பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?

போன வாரம் ஆனந்த விகடனில் எழுத்தாளர்.சுஜாதா அவர்கள் குறிப்பிட்டிருந்ததும்,நேற்றைய தினமலரில் முன்னாள் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முக சுந்தரம் என்பவர் கூறியுள்ள கருத்துக்கள் சுவாரஸ்யமானதும் மற்றும் தமிழகத்துக்கு பயனளிக்கக் கூடிய.... அதே நேரத்தில் நடைமுறைப் படுத்தக் கூடியதாகவும் படுகிறது.

திரு.சுஜாதா எழுதுகிறார்:-
பிரச்சனையின் உண்மையான காரணம் நதியோர நகரமயமாக்குதலும்,அதனால் வெட்டப்பட்ட மரங்களும்,அதனால் மழை குறைந்த மைக்ரோ எகனாமிக் மாறுதல்களும்தான் முக்கிய காரணம்.தண்ணீர் தமிழ் நாட்டுக்கு திருப்பி விடப்படுவதால் 1960-ல் அவர்கள் 50 கி.மி.கீழே கட்டிய இடுக்கி ஹைட்ரோ எலெக்ட்ரிக் திட்டத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.(இந்த வருஷம் எல்லோருக்குமே ஏராளமாய் தண்ணீர் கிடைத்தது, பருவ மழை தவறிப் போனால்தான் பிரச்சினை)இதுதான் மெய்ப்பொருள் .25 வருடமாக நீர் மட்டத்தை உயர்த்தாததால் இதுவரை தமிழ் நாட்டில் கணக்கிடப்பட்ட விவசாய நஷ்டம் 400000000000/- ரூபாய்கள். ( நாற்பதாயிரம் கோடி).
அரிசி தருகிறோம் நீர் மட்டத்தை உயர்த்த அனுமதியுங்கள்,உங்கள் பக்கம் வெள்ளம் வராது, இடுக்கிப் பிடிப்புக்கு குறைந்த பட்சம் நீர் தருகிறோம் அல்லது மின்சாரம் தருகிறோம் , உத்தரவாதம் என்று பேப்பர் சத்தியங்கள் ஏதாவது செய்து ஓரொரு அடியாக உயர்த்த வேண்டும்.

திரு.சண்முக சுந்தரம் சொல்கிறார்
கேரளாவில் 1979ம் ஆண்டு இடுக்கி நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்படும் வரை முல்லை பெரியார் பிரச்சினை எழுப்பப்படவில்லை.தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அந்நீர்த்தேக்கம் நிரம்பாததற்க்கு பெரியாறு அணைதான் காரணம் என கேரள மின்வாரிய தலைமை பொறியாளர் பரமேஸ்வரன் நாயர் பிரச்சினை கிளப்பினார்.அன்று முதல் பெரியார் அணையை கைப்பற்றுவதில் கேரள அரசு தீவிரம் காட்டியது.அதன் விளைவாக கேரள அரசு மூன்று ஆண்டுகள் தேடி கண்டுபிடித்த காரணம்தான் பெறியார் அணை பலவீனமாக உள்ளது என்ற வாதம்.கேரளாவில் தொடரும் மின்வெட்டுக்கு பெரியாறு அணைதான் காரணம் என அம்மாநில மக்கள் மத்தியில் அனைத்து கட்சியினரும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிரச்சினையை ஊதி பெரிதாக்கி விட்டனர்.,......அவர் மேலும் சொல்கிறார்.....இப்பிரச்சினைக்கு தீர்வு மிக எளிது.
லோயர் கேம்ப்பில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு 350 மில்லியன் யூனிட்டுகள் வரை கிலோவாட்டிற்கு ரூ.12 வீதம் அதற்கு மேல் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ.18 என பெற்றுக்கொண்டு கேரள அரசிற்கு தமிழக அரசு மின்சாரம் அளித்து வருகிறது.இலவசமாக கொடுக்கும் தண்ணீரை மின்சாரமாக மாற்றி தமிழக அரசு அதிக விலைக்கு விற்பதாக கேரள அமைச்சர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.இவ்விஷயத்தில் தமிழக அரசு பிரச்சினையை உன்னிப்பாக அணுகினால் தீர்வு காணமுடியும்.தமிழகத்தின் ஆண்டு மின் உற்பத்தி திறன் 10,500 மெகா வாட் எனவும் லோயர் கேப் மின் உற்பத்தி நிலையத்தில் பெரியாறு அணையில் 152 அடி கொள்ளளவாக தண்ணீர் இருந்தால் 140 மெகா வாட் எனவும் அதற்கு குறைவாக 136 அடி கொள்ளளவாக இருப்பதால் 100 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாவதாக தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் 100-ல் ஒரு மடங்கு கூட இல்லாத இந்த மின் உற்பத்தி இல்லாவிட்டால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அமைச்சர் உறுதியாக தெரிவித்துள்ளார்.எனவே லோயர் கேம்ப்பில் உற்பத்தியாகும் மின்சாரத்தை இலவசமாக கேரளத்திற்கு கொடுத்துவிட்டால் பெரியாறு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்து விடும்.தமிழக முதல்வர் இதய பூர்வமாக இந்த அடிப்படையில் அணுகினால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் தெரிவிக்கிறார்.

இந்த இருவரும் முன்வைத்துள்ளதின் சாராம்சத்தில் தீர்வு காண விழைந்தால் தீர்வு சாத்தியம்தான் எனப் படுகிறது.

1. நாம் தரும் "இலவசத்தை" மறுக்க முடியாத அரசியல் அழுத்ததில் கேரளா ஒத்துக் கொள்ளலாம்...அப்படி ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் அரசியல் ஆதாயத்துக்காக மக்கள் நலனை மறுக்கும் மக்கள் விரோத கேரள அரசு என நாமே பறை சாற்றலாம்.

2.தமிழகத்தின் மதிப்பு கேரளாவில் உயரும்..அதனால் நமக்கு எதிரான அவதூறு பிரச்சாரம் செல்லுபடியாகமால் போகக்கூடிய வாய்ப்பு.

3.விட்டுக் கொடுக்க முனைவதால் தார்மீக உரிமை அதனால் ஏற்படும் மனவியல் ரீதியான ஆதாயம் நம் பக்கம் இருக்கும்

4.பிரச்சினையை நாம் தீர்வு முறையில் அணுக முற்படுவதால் மத்திய அரசும்,நீதி மன்றங்களும் நம் பக்க நிலை எடுக்கக்கூடிய சாத்தியக் கூறு.

5. எல்லாவற்றிற்கும் மேலாக இதனடிப்படையில் தீர்வென்பதேற்பட்டால் இது இந்தியா போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் நல்ல முன்னுதாரணமாக அமையும்.

இதை செய்து முடிக்கும் எவரும் காலத்தால் அழியாத சரித்திரப் புகழ் பெறுவர் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

(முயற்சியாவது) செய்வார்களா ???!!!...காத்திருப்போம்...காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

அன்புடன்...ச.சங்கர்


Posted by Picasa

வலைப்பதிவர்கள் சந்திப்பு- சுடச் சுட...



இப்பதான் சென்னை வலைப்பதிவர் latest சந்திப்புக்கு (17-12-06) போயிட்டு வந்தேன்.

மத்த (மூத்த) வலைஞர்கள் அது பத்தி கண்டிப்பா எழுதுவாங்க.அதுனால நான் அது பத்தி அதிகம் எழுதப் போவதில்லை.

அங்கு பேசிக் கொண்டிருந்த போது கேள்விப்பட்ட ஒரு விஷயம் கொஞ்சம் "திடுக்" ரகம்.

பொதுவாக இலங்கை பிரச்சினை பற்றி பேச்சும் பிறகு இங்குள்ள அகதிகள் முகாம்களில் வாழும் "அவல" நிலை பற்றியும் பேச்சு வந்தது. அப்போது எனக்கு அறியக்கிடைத்த ஒரு விஷயம்...பொதுவாக நாம் அனாதை ஆசிரமங்களுக்கோ அல்லது இன்ன பிற சேவை நிருவனங்களுக்கோ உதவி செய்வது போல் முகாம்களில் கஷ்டப்படும் அகதிகளுக்கு உதவுவது என்பது அவ்வளவு சுலபமில்லை...ஏன், எதற்கு , எங்கிருந்து உதவி, இதற்கு பணம் எங்கிருந்து வந்தது மாதிரியான ஆயிரத்தெட்டு "சிவப்பு நாடா" கேள்விகள் மற்றும் போலிஸ் பிரச்சனைகளுண்டு என இது பற்றி கொஞ்சம் அனுபவமுள்ள ஓரிரு வலைப்பதிவர்கள் சொன்னார்கள்..அப்படியனால் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி வந்த நாட்டிலும் கஷ்டப் படும் இந்த சனங்களுக்கு "அரசியல் அல்லது அமைப்பு ரீதியாக இல்லாமல்" சக மனிதன், பொது சனம் என்கின்ற ரீதியில் " நேரடியாக " உதவ வழியே இல்லையா?

இதில் நான் அரசாங்க உதவிகள் அல்லது பிற அமைப்பு ரீதியான உதவிகளை குறை சொல்லவில்லை. அல்லது அகதிகளுக்காக மற்றவர் செய்ய விழையும் உதவிகளுள்ள கட்டுப்பாடுகளையும் தவறென்று சொல்லவில்லை..என்ன இருந்தாலும் அடுத்த நாட்டு குடியுரிமை பெற்ற மக்கள் என்பதால் அவர்களுக்கு நேரடியாக உதவுவதில் கட்டுப்பாடுகள் இருக்கும்தான் என்பது புரிகிறது.

ஆனால் இலங்கையில் அமைதிப் பங்கம் ஏற்பட்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் அகதிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் இது போன்ற "காலத்தே செய்த உதவி " மிக மிக அவசியம் என்று நான் கருதுகிறேன்.

தெரிந்தவர்கள் யாராவது இது பற்றி எழுதலாமே.

கூட்டு முயற்சியாக உதவி செய்ய ஆசை.(உணவு, உடை, குழந்தைகள் படிப்பு செலவை ஏற்பது என்பது மாதிரியாக).ஆலோசனைகள் மற்றும் அனுபவங்களை எழுதுங்களேன்.

அன்புடன்...ச.சங்கர்

Tuesday, October 24, 2006

சில மரண தண்டனை செய்திகள்

அப்சலின் தாக்கம்தான் இந்தப் பதிவும்



உலகில் 120 நாடுகளில் மரண தண்டனை அமலில் இல்லை
அமலில் இருக்கும் 76 நாடுகளில் இந்தியாவும் ஒன்று

இந்தியாவில் 1947-ல் இருந்து இதுவரை தோராயமாக 55 மரண தண்டனைகள் நிறைவேற்றப் பட்டிருக்கும் என நம்பப் படுகிறது. ஆனால் உண்மையான எண்ணிக்கை ஆயிரங்களில் இருக்கும் என மனித உரிமைக் குழுக்கள் கணிக்கின்றன.

உச்ச நீதிமன்றம் "அபூர்வத்திலும் அபூர்வமான" வழக்கில் மட்டுமே மரண தண்டனை விதிக்கலாம் என்று குறிப்பிட்டாலும் "அபூர்வத்திலும் அபூர்வமான" என்பதற்கான எந்த ஒரு வரை முறையும் குறிப்பிடப் படவில்லை.

பெரும்பாலும் தூக்கு கயிற்றாலும் சில சமயம் "ஃபையரிங் ஸ்குவாட்" எனப்படும் துப்பாக்கி ஏந்திய காவலர் சுடுவதின் மூலமும் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

1983-ல் தூக்கிலிடுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பெற்றவரை தூக்கிடுவதில் சித்திரவதையோ,காட்டுமிராண்டித்தனமோ,கேவலப்படுத்துதலோ அல்லது கீழ்மைப்படுத்துதலோ இல்லை என குறிப்பிட்டுள்ளது.



இந்தியாவில் கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு தூக்கிலிடப்பட்டவர் தனஜ்சய் சாட்டர்ஜி (படம்) தண்டனை விதிக்கப்பட்டு (ஆகஸ்ட் 1991) 13 வருடங்கள் கழித்து கோல்கத்தா அலிபூர் சிறையில் 2004-ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் காலை 4.30 மணிக்கு தூக்கில் தொங்கவிடப்பட்டார்.

தனஞ்சய் செய்த குற்றம்..கோல்கத்தாவில் சிறு பெண்ணை கற்பழித்து கொன்றது.(நடந்ததாக கூறப்படும் நாள்05-03-1990)


கொசுறு செய்தி : அமெரிக்காவின் உடா(Utah) மாஹாணத்தில் முன்பு "ஃபையரிங் ஸ்குவாட்" எனப்படும் துப்பாக்கி ஏந்திய காவலர் சுடுவதின் மூலமும் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டு வந்தது... 5 காவலர் வரிசையில் நின்று சுடுவர்(படத்தில் 8 பேர் :) )...இதில் ஒருவர் சுடும் துப்பாக்கியில் மட்டும் "Blank" தோட்டாக்கள் இருக்கும்.இந்த முறையில் உயிர் குடித்த தோட்டா எந்தத் துப்பாக்கியில் இருந்து வந்தது என்பது யாருக்கும் தெரியாது என்பதற்காக.
அங்கு இப்போது "ஃபையரிங் ஸ்குவாட்"முறை ஒழிக்கப்பட்டு புதிதாக விதிக்கப்பட்ட எல்லா மரண தண்டனைக்கும் விஷ ஊசிதான் !!!


அன்புடன் ச.சங்கர்

பெரியாரை தடுக்க மறுக்கும் கேரளம்...தவிக்கும் தமிழகம்



முல்லை பெரியார் அணை விவகாரத்தின் பின்னணி


தமிழகத்தின் வறண்ட ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் விவசாயத்தை மேம்படுத்த ஆங்கில அரசால் 1886-ல் திருவிதாங்கூர் மன்னருடன் 999 வருடங்களுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 1895-ல் முல்லை பெரியார் அணை கட்டப்பட்டது.


அணையின் நீர் மட்டம் 156 அடியாக பராமரிக்கவும்,அணை கட்டுவதனால் மூழ்கடிக்கப் படும் 8000 ஏக்கர் நிலத்திற்கு தமிழகம் ஆண்டு தோறும் நிர்ணயிக்கப்பட்ட வாடகை தரவேண்டும் போன்றவை ஒப்பந்தமாகி அதன் படி 60 ஆண்டுகள் எந்த சிக்கலும் இன்றி செயல் பட்டு வந்தது.


1970 ஆம் ஆண்டு மின் உற்பத்திக்காக பெரியார் மின்நிலைய திட்டம் வகுக்கப்பட்டு புதிய ஒப்பந்தமும் போடப்பட்டு , முன்பு கொடுக்கப்பட்டு வந்த நீரில் மூழ்கும் நிலத்திற்கு வாடகை பணம் உயர்த்தப்பட்டு அதன் படி உயர்த்தப்பட்ட தொகையை தமிழகம் கேரள அரசுக்கு கட்டியும் வருகிறது.


ஆனால் கடந்த 27 வருடங்களாக அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்து விட்டது கேரள அரசு.


குறைக்கப்பட்ட அளவினால் நீரில் மூழ்கும் நிலம் 8000 ஏக்கரிலிருந்து 4677 ஏக்கராக குறைந்து விட்டது. இப்படி நீர்மட்டம் குறைத்ததனால் வெளிப்பட்ட நிலத்தில் கேரள அரசு பல்வேறு விதமான சுற்றுலா கேளிக்கை சாதனங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.


அணையின் நீர்மட்டம் 16 அடி குறைக்கப்பட்டதால் தமிழகத்தில் 1,25,000 ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது..அதுவும் தவிர 140 MW உற்பத்தி திறன் கொண்ட பெரியார் மின்நிலையம் 40 சதவிகித உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளது.


இவ்வளவிற்கும் கேரள அரசு நீர்மட்டத்தை குறைத்ததற்கு சொன்ன காரணம் அணை பலவீனமாக இருப்பதாக என்பதன்றி வேறெதுவும் இருப்பதாக தெரியவில்லை.இதில் உச்ச நீதிமன்றத்தால் நிபுணர் குழு அமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு பின் அனை பலப்படுத்தப்பட்ட பின்னும் நீர்மட்டத்தை உயர்த்த கேரளம் தயாராக இல்லை.


இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்திற்கு சென்ற போது ,உச்ச நீதி மன்றம் அமைத்த வல்லுனர் குழு அணையை ஆய்வு செய்து பல சோதனைகள் செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என இறுதி தீர்ப்பளித்தது.



ஆனால் அவசர அவசரமாக சட்ட சபையை கூட்டி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதோடல்லாமல்..மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கில் பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என கேரள அரசு வலியுருத்தியது..அதையும் ஏற்றுக் கொண்ட??!!! உச்ச நீதி மன்றம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணுமாறு தெரிவித்தது.




நேற்று(23-10-06) தமிழக முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ""மத்திய அரசு முன்னிலையில்"" கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


இதன்னடிப்படையில் எழும் சில கேள்விகள்



1) பேச்சுவார்த்தை எந்தப் பலனும் அளிக்காததால்தானே நீதிமன்றத்தை நாடுவதே?அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்காமல் திரும்ப பேச்சுவார்த்தை நடுத்துவதனால் கால விரையம் தவிர வேறேதும் முடிவு பிறக்குமா ?


2) கேரளாவில் ஆட்சியில் மாறி மாறி இருப்பதே மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் அதற்கு துணை நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்தான். இந்த நிலையில் இவர்களது முன்னிலையில் பேச்சுவார்த்தை ஏதாவது பயனளிக்குமா என்பது கேள்விக்குறியே.


3)உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத ஒரு மாநிலம் மத்திய அரசின் முன்பாக பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டும் ஏதேனும் தீர்வுக்கு ஒத்துக் கொள்ளுமா என்பது அடுத்த கேள்வி


3)தங்களை தேசிய அளவிலான கட்சியாக நிறுவிக் கொள்ளும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது மாநில பிரதிநிதிகள் வாயிலாக ""இங்கு ஆதரித்தும்...அங்கு எதிர்த்துமாக"" இரட்டை நிலைபாட்டை எடுத்து இன்னும் எத்தனை காலந்தான் மக்களை ஏமாற்றுவார்கள் ?


4) நெய்வேலி லிக்னைட்டை தனியார் மயமாகுதலை எதிர்த்து "மத்திய அரசில் ஆதரவு வாபஸ்" என்ற பிரம்மாஸ்திரத்தை எடுத்த கருணநிதி அதே போல் இப்போதும் முடிவெடுத்து அல்லது கோடி காட்டி காரியம் சாதிக்க முயல்வாரா ?


5)இந்திய தேசியம் என்பது உண்மையில் வெறும் ஜல்லிதானா?ஏதோ ஒரு காலத்தில் ஆங்கிலேய அரசால் அவர்களது வசதிக்காக ஒரு குடையின் கீழ் கட்டிக்காக்கப் பட்டு, உலகிலேயே பெரிய ஜனநாயகம் என்று பெருமை பேசும் இந்தியா ஒரு உபயோகமில்லாத உளுத்துப் போன, தொட்டால் உதிர்ந்து விடும் எலும்புக்கூடுதானா ? சகிப்புத்தன்மை அறவே இல்லாத நம்மால் அடுத்த மாநிலத்தவருக்காக ஒரு சில டி.எம்.சி தண்ணீர் அதிகம் தர மனதில்லை அல்லது அண்டை மாநிலம் பயன் பெற ஒரு அணையில் சில அடி நீர் மட்டம் உயர்த்த வக்கில்லை. இந்த நிலையில் என்ன சாதிப்பதற்காக இந்த ஜனநாயகமும், தேசியமும், ஒருங்கிணைப்பும் என்ற கேள்வி எழுகிறது.


காத்திருப்போம்....காலம்தான் பதில் சொல்ல வேண்டும்


அன்புடன்...ச.சங்கர்

Friday, August 18, 2006

கேள்வியும் பதிலும்


வலையுலகுல தலைங்களெல்லாம் கோக்கு மாக்கா ஒருத்தரப் பாத்து ஒருத்தர் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்காங்களா

அதான் நாம கேள்வி கேக்குறதப்பத்தி ஒரு பதிவு போடலாமுனுட்டு....

ஊருல எல்லா சனமும் கூடி கருப்புக்கு.... அட """கருப்ப சாமிக்குங்க"" பொங்கல் வச்சுக்கிட்டு இருந்தாக

கோபாலும் கோயிந்தனும் சாமி கும்புடறதுக்காக நின்னுக்கிட்டு இருந்தாங்க..

செம குளுரு...கோயிந்தனுக்கு தம்மு வலிக்கணும் போல இருந்திச்சு....கோபாலு கிட்ட கேட்டான்...

கோவாலு ... "தோ போரார் பார்...ஊர் பெரியவர்...அவரு கிட்ட கேளு " அப்படீன்னான்.....

கோயிந்தனும் போயி "அய்யா ...சாமி கும்பிடும் போது தம் வலிக்கலாமா " அப்படீன்னு கேட்டான்.

பெரியவர் அவன ஒரு மாதிரி பாத்து" தம்பி சாமி கும்புட சொல்ல சிகரெட் புடிக்கிறது தப்பு " அப்பிடீன்னாரு. கோயிந்தன் வெறுத்து போய் திரும்ப வந்தான்...

கோவாலு "என்னா மேட்டரு " அப்படீன்னான்.

"பெருசு கூடாது அப்படீன்னுருச்சுபா " ன்னுட்டு கோயிந்தன் சொன்னான்.

"இதா மேட்டரு..நான் கேக்குறேன் பார்" அப்படீன்னுட்டு பெரியவர் கிட்ட போய் " ஐயா...சிகரெட் பிடிக்கும் போது சாமி கும்புடலாமா" அப்படீன்னு கேட்டான்..

பெரியவரும் சந்தோசமா " கண்டிப்பா.....சாமி கும்பிட நேரம் காலம் பாக்க வேணாம்..எப்ப வேணா சாமி கும்புடலாம்...அதுக்கு தடையே இல்லை" அப்படீன்னார்...

கோவாலு "அது..." அப்படீன்னு சொல்லிக்கிட்டு ஒரு தம்ம பத்த வச்சுக்கிட்டு ஸ்டயிலா நடந்து வந்தான்.

இதுக்கு பேருதான் தலைவா கேள்விய போட்டு பதில வாங்குறது அப்படீங்கரது....

அதுனால இன்னா பதிலு வேணுமோ அதுக்கேத்தா மாதிரி கேள்விய போட்டு பதில வாங்குங்க...
என்னா கரீக்டா....நான் சொல்ரது.....அப்புறமென்ன போட்டு தாக்குங்க.

அன்புடன்...ச.சங்கர்

படித்ததில் பிடித்ததில் ரசித்தது----1

ஒரு I A S அதிகாரியின் அனுபவங்கள் / நினைவுகள்

(ஒரு ஓய்வு பெற்ற அதிகாரியின் நூலிலிருந்து, நான் ரசித்த சில பகுதிகளை என் எழுத்து நடையில் மாற்றி எழுதியுள்ளேன்...நிறைகளிருப்பின் அவருடயது...குறைகள் என் எழுத்து முதிற்சியின்மையால்..அவர் மன்னிப்பார் என்று நம்புகிறேன்)


முன்பெல்லாம் I A S பயிற்சியில் தொன்று தொட்டு கற்றுக் கொடுக்கப்படுவதில் குதிரை ஏற்றமும் ஒன்று.அதன் காரண காரியம் எதாக இருந்தாலும்...பயிற்சியில் வெறும் சவாரி மட்டுமின்றி, அதி வேகமாக நாலு கால் பாய்ச்சலில் சவாரி, கடிவாளமும், சேணமும் இல்லாத குதிரையில் அமர்ந்து வேகமாக பயணித்தல் மற்றும் உச்ச கட்டமாக நான்கடி உயரமுள்ள வேலி அல்லது குட்டி சுவரை தாண்டுதல் போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இவற்றை திருப்திகரமாக செய்து அதற்குண்டான மதிப்பெண்ணை பெறாவிட்டால் பணியில்(IAS) நிரந்தரமாக முடியாது.

பயிற்சிக்காகவென்றிருந்த குதிரைகள் மிக உயர்ந்த சாதியை சார்ந்தவை..அராபிய..பாரசீக இறக்குமதியாக கூட இருக்கலாம் .அவற்றிடம் மிக இலாவகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்..இல்லையேல் மட்டுப்படுத்தி பயணிப்பது குதிரைக்கொம்புதான்..ஆகையால் பயிற்சி ஆரம்பிப்பதே அதனிடம் எப்படி நண்பனை போல் நடந்து கொள்வது என்பதில்தான்...அதாவது ஒவ்வருவருக்கும் ஒரு ப்ரத்தியேக குதிரை தரப்பட்டு அதற்கென்று ஒரு பெயர் மற்றும் எண்(user name/password ?!!) இருக்கும்.

குதிரையை நட்பாக்கி கொள்ள முதலில் கலவரப்படாமல் அதனிடம் நோக்கி இயல்பாக நடக்க வேண்டும்..கையில் கல்கண்டோ...காரட்டோ இருந்தால் இன்னும் நலம்.அந்தக் குதிரை தலையையும் வாலையும் உடம்பையும் ஆட்டிக் கொண்டு , கண்ணில் இருக்கும் வெள்ளை தெரிய ஒரு கோணல் பார்வை பார்த்துக் கொண்டு பதட்டமாக நின்று கொண்டிருக்குமாயின்...நீங்கள் வீட்டில் சொல்லிக்கொண்டு வந்த பிறகுதான் அதன் மேல் ஏற முயற்சிக்க வேண்டும்.அப்படியில்லாமல் அது வழி மேல் விழி வைத்து பரிவுடன் உங்களையே பார்த்துக் கொண்டிருக்குமாயின் அது சாந்தமான குதிரை மற்றும் நீங்கள் """நேரம் நல்ல நேரம்...உன்னை நெறுங்கி பார்த்த நேரம் """" என்று பாடலாம் (மனதுக்குள்தான்...இல்லவிட்டால் பாட்டை கேட்டும் குதிரை மிரளும் சாத்தியக் கூறும் உண்டு)


கிட்ட போனதும் கடிவாளத்தை பிடித்துக் கொண்டு ,குதிரை கன்னத்தை?! செல்லமாக தட்டிக் கொடுத்து அன்போடு அதன் பெயரை அழைக்க வேண்டும்..பண்புள்ள பரியானால் 'பரி'தாபமாக உங்களை பார்த்துக் கொண்டு நிற்கும்...கற்கண்டோ காரட்டோ கொடுத்ததை உதட்டு முனையால் வாங்கி கரக்...முரக் என சாப்பிடும்...அதுவே பொல்லாத பரியானால் கிட்டே போகப்போக பின்னால் நகர்ந்து கொண்டே போகும்..கடிவாளம் பிடித்து கன்னத்தை தட்டப் போனால் சிலிர்து உக்ரமாகவும்...ஆங்காரமாகவும் கனைத்து கொண்டு கையை கடிக்கப் பார்க்கும்..வேண்டா வெறுப்பாக காரட்டை கவ்வும் போது கொஞ்சம் கை விரலையும் சேர்த்து பதம் பார்க்கும்.ஆக மொத்தம் அதன் மேலேரி பயிற்சி செய்ய அலாதி சூரத்தனம் வேண்டும்.


ஆரம்பமே இப்படியானால் இப்படிப் பட்ட குதிரை மேல் ஏறுவதெப்போது,சவாரி,நாலு கால் பாய்சல் ஓட்டம்,கடிவாளம்,சேணமில்லாமல் ஓட்டம் மற்றும் குட்டை சுவர் மற்றும் வேலி தாண்டுவதெல்லாம் எப்போது?!!இந்தப் பீதியிலேயே முதல் நாளே பாதிப் பேர்களுக்கு பேதியாகும்.

பயிற்சி நடை பெறும் போது பல அறிய காட்சிகளும் காணக்கிடைக்கும்...

ஒருவர் குதிரை மேலேரி நாலு கால் பாய்சலில் போகிறாரே என்று பார்த்தால்...வேறொன்றுமில்லை...எப்படியோ தட்டு தடுமாறி குதிரையில் ஏறி விட்டார்...குதிரை பாட்டுக்கு பிய்த்து கொண்டு அதனிஷ்டம் போல் பறக்கிறது...இவர் கட்டுப் படுத்த வழி வகை தெரியாமல் அதிர்ச்சியில் கல்லாய் சமைந்தமர்ந்திறுக்கிறார்..இனி குதிரையாக பார்த்து அவரை கீழே இறக்கி / தள்ளி விட்டால்தான் உண்டு.

இதோ ஒருவர் குதிரை மேல் இருக்க குதிரை முன் கால்களில் நின்று கொண்டு பின் கால்களை தூக்கி மற்றும் தட்டாமலை சுற்றி வித்தை காட்டுகிறதே..அது வேறு ஒன்றுமில்லை.பாய்ந்து சென்று கொண்டிருந்த குதிரையை நிறுத்த இவர் ஏதோ செய்யப் போக அது இப்படியான வித்தைகள் காட்ட ஆரம்பித்து விட்டது.இப்போது அவர் குடிரையின் முதுகிலிறுந்து கழுத்துக்கு வழுக்கி வந்து,இறுக் கட்டிக் கொண்டு, என்ன செய்வது என பரிதாபமாக யோசித்து கொண்டிருக்கிறார்.

இன்னொருவர் குதிரை மேல் ஒய்யாரமாய் பவனி வருவார்...ஒன்றுமில்லை பீதி நடுக்கத்தில் அவர் பட்ட / படுத்திய பாட்டைக் கண்டு பயிற்சியாளரே இருப்பதிலேயே தொத்தலான நோஞ்சான் குதிரையை அவருக்கு அளித்திருப்பார்..னது முடிந்தும் முடியாமலும் சாதுவாக போய்க் கொண்டிருக்க இவர் அதன் மோல் கலையாத பயத்துடன் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்..அவ்வளவே. சில சமயம் குதிரைகள் மேலமர்ந்து பயிற்சி செய்பவரை தூக்கிக் கொண்டு ஊருக்குள் எங்காவது ஓடி விடும்.பிற்பாடு ஒரு மணியோ..இரண்டு மணியோ கழித்து குதிரை தனியாகவும் பயிற்சி செய்தவர் தனியாகவும் சண்டை போட்டுக் கொண்ட நண்பர்கள் போல் அவரவர் இல்லம் சென்றடைவர்.

சில குதிரைகள் பேசாமல் கோயில் சிலை போல் நின்று கொண்டிருக்கும்..திடீரென்று படீர்...படீர் என்று இரண்டு மூன்று "அபான வாயுவை" பிரித்து விட்டு அதனால் மிரண்டு சரேலன ஜெட் விமானம் போல் கிளம்பும்.குதிரையின் மோல் அமர்ந்திருந்தவர் பின்பக்கமாக குட்டிக்கரணம் போட்டு குதிரை வால் பக்கம் வழுக்கி தரையில் விழுந்து கிடப்பார்.விழுந்த அதிர்சியில் அவருக்கு இரண்டு மூன்று நாட்கள் "அபான வாயு" சீராக பிரிப்பது கஷ்டமாகி விடும்.

நான்கடி உயர குட்டை/புல் சுவரை சேணமும் ..கடிவாளமும் இன்றி தாண்ட வேண்டிய நாளில் குதிரையும் ,பயிற்சியாளரும் சேர்ந்தாற் போல் தாண்டுவதென்பது மிகவும் அபூர்வம்...சுவருக்கு சற்று முன்னால்வரை நாலு கால் பாய்சலில் வந்து கொண்டிருக்கும் குதிரை கிட்டே வந்ததும் எச்சரிக்கை ஏதுமின்றி சடக்கென்று நின்று விடும்...பயிற்சியாளர் மட்டும் அனுமார் இலங்கை நோக்கி பாய்ந்தது போல் ஆகாயத்தில் எழும்பி நூரடி தாண்டிப் போய் விழுவார்.....அல்லது குதிரை ஒரு பக்கமும் பயிற்சியாளர் இன்னொரு பக்கமும் தாண்டுவர்.

இப்படிப் பட்ட பல சுவாரஸ்யங்கள் நிறைந்த குதிரையேற்ற பயிற்சியை 1980 ஆம் ஆண்டிலிறுந்து IAS பயிற்சியிலிருந்து அகற்றி விட்டார்களாம்.

விடுதலை??!!!! குதிரைகளுக்கா...பயிற்சியாளர்களுக்கா ??

அன்புடன்...ச.சங்கர்

Sunday, July 16, 2006

கேரக்டர்......லாஜிக் ரமேசு


நம்ப லாஜிக் ரமேசு படிச்சது பத்தாங்கிளாசுதான்...ஆனா ஆளு படு சாமர்த்தியம்.....லாஜிக்கா பேசுவான்....அதே போல லாஜிக் இல்லாத எந்த காரியத்திலும் எறங்க மாட்டான்....எது செய்தாலும் லாஜிக் பார்த்துதான் செய்வான்...


ரமேசு சொன்ன லாஜிக் முத்துக்கள் சில கீழே....உங்களுக்கு உதவட்டுமேன்னு குடுத்திருக்கேன்.

" உங்க அப்பாரு ஏழையா இருந்தா உங்க விதி... ஆனா உங்க மாமனாரு ஏழைன்னா அது உங்க முட்டாள்தனம்.."

" நா புத்திசாலியாதான் பொறந்தேன்...ஆனா படிச்சு பாழாயிட்டேன் "

" நாம அடுத்த மனுசாளுக்கு உதவி செய்ய இருக்கோம்..கரீட்டுதான்...அப்படீன்னா அடுத்த மனுசாள்லாம் என்னாத்துக்கு இருக்காங்க ?"

" உலகத்துல துட்டுதான் எல்லாம் அப்படீன்னுட்டு இல்ல...இப்பல்லாம் கிரெடிட் கார்டெல்லாம் இருக்குது "

"அல்லாரும் கண்ணாலம் கட்டிக்கணும்...ஏன்னா சந்தோசம் மட்டுமே வாழ்க்கை இல்லீங்கோ "

"உங்க எதிர்காலம் நீங்க காண்ற கனவுல இருக்கு...அதுனால சீக்கிரம் தூங்க போயிடுங்க "

"கடின உழைப்பு யாரையும் கொல்லாதுதான்...ஆனாலும் ரிஸ்க்கு எடுக்க முடியுமா ?"

" நெறைய படிச்சா நெறையா தெரிஞ்சுக்கலாம்...நெறைய தெரிஞ்சுகிட்டா நெறைய மறந்து பூடும்...நெறைய மறந்து பூடிச்சின்னா கொஞ்சமாதான் தெரிஞ்சிருக்கும்..பின்ன இன்னாத்துக்கு படிக்கிறது "


இதெல்லாம் படிச்சப்புறம் எனக்கு புரிஞ்ச ஒரு லாஜிக்

" பஸ் ஸ்டேசன்ல பஸ் நிப்பாட்டுவாங்க...ரயில்வே ஸ்டேசன்ல ரயிலு நிப்பாட்டுவாங்க..நம்மகிட்ட ஒரு ஒர்க் ஸ்டேசன் இருக்குதுங்கோ... அதுல....."

உங்களுக்கு எதுனா புரியுதா ?

அன்புடன்...ச.சங்கர்

Thursday, June 15, 2006


கனவுலகம் ???

Friday, May 12, 2006

தேர்தல் 2006 ....எனது பார்வையில்


தேர்தல் 2006 ....எனது பார்வையில்

2006 சட்டசபை தேர்தல் முடிந்து....முடிவுகள் அறிவிக்கப் பட்டு நாளை கருணாநிதி 5ஆம் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

இந்த நிலையில் நடந்த சட்டமன்ற தேர்தல் சில புள்ளி விவரங்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறாது.

மொத்தம் பதிவான வாக்குகளில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம்....சென்ற முறையும் இந்த முறையும்
..................... 2006 ................. 2001

அதிமுக ............. 32.52 ............................ 31.44
திமுக ...................26.4 ............................ 30.92
பமக ................... 5.55 .............................. 5.56
காங்கிரஸ் .......... 8.38 ............................. 2.48
இடது கம்.......... .2.64 ............................. 1.68
வலது கம்யூ .....1.6 .............................. 1.59
மதிமுக ...............5.97 ............................. 4.65
தேமுதிக(விஜயகாந்த்)....... 8.32 .......... -------



1. அதிமுக சென்ற முறயை விட அதிக சதவிகித ஓட்டு வாங்கியும் தோற்றதும் , திமுக குறைந்த சதவிகித ஓட்டு வாங்கியும் வெற்றி பெற்றதும்
ஆச்சரியமில்லை....அது அவர்கள் போன முறை போட்டியிட்ட மொத்த இடங்கள் மற்றும் இந்த முறை போட்டியிட்ட மொத்த இடங்களைப் பொருத்து மாறியிருக்கிறது . அதாவது இந்த தேர்தலில் எந்த அலையோ அல்லது மக்களுக்கு கடந்த ஆட்சியாளர் மீது ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பது போன்ற வெறுப்போ இல்லை.....இது ஜெயலலிதாவைப் பொருத்த மட்டில் மிகப் பெரிய வெற்றியே !!!

2.ஆயிரம் பேசினாலும் கருணாநிதிக்கு இது தெரிந்தே இருந்ததால்தான் கூட்டணிக் கட்சிகளை தன்னுடன் இருத்திக் கொள்ள தாராளமாக சீட்டுகளை வாரி இறைத்து இன்று 1957 க்கு பிறகு முதல் முறையாக வெற்றி பெற்ற கட்சி தனிப் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிக் கட்சிகளின் பலத்தையும் நாட வேண்டிய நிலைமை ( இது திமுக-வின் பலகீனமே)தனிப் பெரும்பான்மை இல்லாதது ஒரு வகையில் நல்லதே...அதிகம் ஆட மாட்டார்கள் என்று நம்புவோம்.

3.நான் மேற்குறிப்பிட்ட கருத்து(கூட்டணிக் கட்சிகளை தன்னுடன் இருத்திக் கொள்ள தாராளமாக சீட்டுகளை வாரி இறைத்து ) மதிமுக வைப் பொறுத்த மட்டில் முரணாக இருக்கும்...அதாவது ஒரு சீட் குறைவாக கிடைத்ததால் வைகோ பிரிந்தது போனது ...பிரச்சினை ஒரு சீட் அல்ல....வைகோ வளர்வதை கருணநிதி விரும்பவில்லை...அது அவருக்கு பிறகு ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு முட்டுக் கட்டையாகி விடும் என்பதால்.ஏனெனில் கருணநிதிக்கு பிறகு திமுகவை பிளக்கும் சக்தி வைகோவிற்கு உண்டு...அதை தடுக்கும் திறன் ஸ்டாலினுக்கு இல்லை...காரணம் தென் மாவட்டங்களில் வைகோவிற்கு உள்ள செல்வாக்கு மற்றும் திமுகவில் தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் ஒத்துப் போகாதது?!!!!

4.ஜாதீய அரசியல் பண்ணித் திரியும் பாமக போன்ற மற்றும் மத அரசியல் செய்யும் பிஜேபி போன்ற கட்சிகளை விட .... கட்சி அமைத்த 6 மாதத்தில் அதிக சதவிகித வாக்குகள் (8.32 %) பெற்ற விஜயகாந்த் பாராட்டுக்குறியவர்....உண்மையில் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி அவருக்குதான்....அதாவது பாசாங்கில்லாமல் நேர்மையாக திராவிட கட்சிகளுக்கு மாற்று அமக்கப் பாடு படுகிறேன் என்று சொன்னதை மக்கள் ஏற்று மதித்திருக்கிறார்கள் / நம்புகிறார்கள் என்பதே....

உதாரணம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும்...மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்து கூட இன்றும் தமிழகத்தில் திராவிட கட்சிகளை அண்டிப் பிழைக்கும் நிலையில் உள்ள காங்கிரஸுக்கு இணையாக ஓட்டு சதவிகிதம் பெற்றிருப்பது சாதனைதான் ( இங்கு தேமுதிக நின்ற தொகுதிகள் காங்கிரசை விட மிக அதிகம் எனவே ஓட்டு சதவிகிதத்தை ஒப்பிடக்கூடாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும்...கூட்டணி எதுவுமில்லாமல்...ஜெயிக்கும் வாய்ப்பும் குறைவாய் இருந்த...6 மாதமே ஆன கட்சிக்கு இந்த ஓட்டு சதவிகிதம் மிகப் பெரிய வலிமையே..காங்கிரஸ் அனைத்து தொகுதியிலும் தனியாக நின்றாலும் இந்த சதவிகித வாக்கு பெருவது சந்தேகமே)

5.தமிழக மக்கள் ஜாதி , மத அரசியலை ஒரு அளவுக்கு மேல் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது திண்ணமாகிறது....நேர்மையான அணுகுமுறை உள்ளவர்களை நம்புகிறார்கள்.....தைரியமில்லாத ரஜினிக்கு இது நல்ல பாடம்...I wonder he missed the bus already......

6.மேலும் சில விவரங்கள்

ஒரு பேச்சுக்கு தேமுதிக....அதிமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் ....இதே ஓட்டுகளை அந்தந்த கட்சிகள் பெற்றிருந்தால் அதிமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கக் கூடிய மொத்த இடங்கள் 144 !!!

அதேபோல்

ஒரு பேச்சுக்கு தேமுதிக....திமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் ....இதே ஓட்டுகளை அந்தந்த கட்சிகள் பெற்றிருந்தால் திமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கக் கூடிய மொத்த இடங்கள் 197 !!!

ஆட்சி மாற்றம் மக்களாலா...விஜயகாந்தாலா ?????????!!!!!!!

எப்படிப் பார்த்தாலும் மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களித்திருப்பதாகவே நான் கருதுகிறேன்....ஆனால் ஆட்சி மாற்றத்தை மக்கள் விருப்பினார்கள் அதுவும் அதிமுகவை கவிழ்த்து திமுகவை கொண்டு வர விருப்பப் பட்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இந்த தேர்தலில் எனக்கு தென்படவில்லை!!!


அன்புடன்....ச.சங்கர்