Wednesday, May 16, 2007

வீனஸ் Vs மோஹினி

அழகின் தேவதைகள்

கிரேக்க புராணங்களில் அழகின் தேவதையாக சித்தரிக்கப்படுவது "வீனஸ்"தான்.வீனஸின் சிற்பங்கள் புராண காலந்தொட்டே பல பெரிய கலைஞர்களால் கற்பனை செய்யப்பட்டு, வடிக்கப் பட்டு என்று வரலாறு முழுவதும் காணப்படுகிறது.அந்த அழகின் தேவதையின் இரண்டு உலகப் புகழ் பெற்ற சிற்பங்கள் கீழே.
இந்தியாவில் தென்னாட்டு சிற்பக்கலையும் இதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்பதற்கான பல எடுத்துக்காட்டுகள் நமது கோவில்களில் காணப்படுகின்றன.ஹிந்து புராணங்களில் அழகுக்கு உதாரணமாக சொல்லப்படுவது மஹாவிஷ்ணு எடுத்ததாக சொல்லப்படும் "மோஹினி" அவதாரம்தான்.அழகிய மோஹினி அவதார சிற்பங்களை பல கோவில்களில் நாம் காண முடியும்.சமீபத்தில் குடுமியன் மலை சென்ற போது அங்கிருந்த மோஹினி அவதார சிலைகள் வடிவமைக்கப் பட்டிருந்தது தத்ரூபமாகவும் கலை நயத்துடன் காணப்பட்டது.அந்தப் படங்கள் கீழே.

Tail Piece :
1.குடுமியன் மலை தமிழ் நாட்டில் புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது

2.குடைவரை குகைக் கோவில் வகையை சேர்ந்த இது 7 ஆம் நூற்றாண்டு காலத்தையது என்றும் அன்று தொடங்கி பல்லவர்,பாண்டியர்,சோழர்,விஜயநகர,ஹோய்சாள,நாயக்கர், சேதுபதி எனப் பல மன்னர்களாலும் பல நூற்றாண்டுகளாக புனரமைத்து வடிவம் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

3.இங்குள்ள அனைத்து சிற்பங்களிலும் ஏதேனும் ஒரு பாகம்( முக்கியமாக மூக்கு) பின்னப்படுத்த /சேதப்படுத்தப் பட்டிருப்பது மாலிக்காபூர் படையெடுப்பின் போது என்று சொல்லப்பட்டாலும் இதற்கான சரித்திர ஆதாரம் எதுவும் ஆவணங்களில் இல்லை என்றும் சொல்லப் படுகிறது.(மேலே உள்ள மோஹினி சிற்பங்களின் மூக்கும் சிதைந்திருப்பதை பார்க்கலாம்)

4.மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு மோஹினி சிலைகளும் எதிரெதிர் தூண்களில் அமைக்கப் பட்டிருக்கிறது.இரண்டு சிலைகளுக்கும் உள்ள உடற்கூறு மற்றும் உருவ வேறுபாடுகள் துல்லியமாக வடிக்கப் பட்டிருப்பதை பார்க்கலாம்.ஒரு சிலை ஒல்லியாகவும்(இடது) சற்று உயரமாகவும் மற்றது சற்றே குட்டையாகவும் பருமனாகவும்(வலது)

5.இது என்னைப் பொருத்த வரை இரண்டு (மாடல் அழகிகள்) ஆடல் அணங்குகளை மாடலாக வைத்து செதுக்கப் பட்டிருக்கவேண்டும் என்று லாஜிக்கலாக தோன்றினாலும் கைடு சொன்ன தகவல் சற்று சுவாரசியமானது....அதாவது மஹாவிஷ்ணு இரண்டுமுறை மோஹினி அவதாரம் எடுத்தாரம்...பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது அசுரர்களை மயக்க ஒரு முறையும், மகிஷனை வதம் செய்த ஐயப்பனை உலகுக்கு தர ஒரு முறையும். அந்த வேறுபாடுகளே இந்த சிலை உறுவங்களில் துல்லியமாக வேறு படுத்திக் காட்டியிருப்பதாக...உண்மையா தெரியாது ஆனால் இது போன்ற லோக்கல் கதைகள் நமது புராணங்களுக்கு மேலும் சுவை கூட்டத்தான் செய்கின்றன.

6.வீனஸ் சிலையின் வயிற்று மடிப்புகள் போன்றவை துல்லியமாக சித்தரிக்கப் பட்டிருப்பது போலவே மோஹினியின் வயிற்று மடிப்பு, கை நரம்புகள்,கையிலுள்ள / மற்ற ஆபரணங்கள் போன்றவற்றை துல்லியமாக வடிவமைத்திருப்பது அந்தக் காலத்தைய நமது சிற்பக்கலை தேர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.


இதைப்போல் முருகன்,விநாயகர்,திருவிக்ரமர்,ரதி, மன்மதன்,பத்துத் தலையுடன் கூடிய ராவணன், வாலி, சுக்ரீவன், அனுமன் ,காளி என ஏகப்பட்ட சிற்பங்கள் மற்றும் குடுமியன் மலை என்ற பெயர்க்காரணம்,கர்நாடக சங்கீதத்தின் மூலம் (basic rules) பற்றியதான விரிவான கல்வெட்டுக்கள் (இது வரை குடுமியன் மலை கல்வெட்டுக்கள் மட்டுமே கர்நாடக இசைக்கு மூலாதாரமாக கிடைத்த பழமையான எழுத்து வழி வரலாற்று ஆவணங்கள் என்று கூறப்படுகிறது),இந்தக் கோவில் கஷ்டத்தில் இருக்கும் போது ஒரு தாசி இதை விலைக்கு வாங்கி பின் ஊருக்கு தானமளித்தது, கோவிலில் தாசி கட்டிய மண்டபம், மலையின் மேல் உயரத்தில் உமையாள் சகித ரிஷப வாகனத்தில் சிவன் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் சேர்ந்தார் போல் சிலையாக செதுக்கப்பட்டிருக்கும் ஆச்சரியங்கள் என பல சுவையான விஷயங்கள்,தகவல்கள்,வரலாறுகள் குடுமியன்மலைக்கு உண்டு.

அவை பற்றி புகைப் படங்களுடன் விரிவாக மற்றொரு பதிவில் :)

அன்புடன்...ச.சங்கர்

5 comments:

ச.சங்கர் said...

டெஸ்ட்

Anonymous said...

ஏன் இந்த மோகினிங்களுக்கு ட்ரெஸ் இல்லை ? :)))

ச.சங்கர் said...

படைத்தவனிடம்தான் (சிலையை) போய் கேக்கணும் :) அது சரி..ரவி..கலைக் கண்ணோடுதான பார்த்தீங்க ? :)

சிறில் அலெக்ஸ் said...

அந்தக் காலத்துல வீனஸ் தன் நிர்வானத்தை (கைகளால்) மறைத்தும் நம்ம ஊர் மோகினி முழுவதும் நிர்வானமாயும் நிற்கிறார்கள்.

இப்ப நம்ம 'கலாச்சாரம்' நேரெதிரா மாறிடுச்சுல்ல?

ச.சங்கர் said...

வாங்க சிறில் அலெக்ஸ்

ஆமாம்..காலம் மாறிப் போச்சு :))