திருமாலிருஞ்சோலை என்று போற்றப்படும் அழகர் மலை திருமாலின் மற்றொரு பாடல் பெற்ற தலமும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றும் ஆகும். அழகர் கோவிலுள்ள அழகர் மலையில்தான் பழமுதிர் சோலை அமைந்துள்ளது. மதுரையில் நடக்கும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணம் காணத்தான் இந்தக் கோவிலில் இருக்கும் அழகர் சித்திரை மாதம் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி பின் வருவதற்குள் திருமணம் முடிந்து விட்ட கோபத்தில் திரும்பச் செல்கிரார் என ஐதீகம்.
நான் போன போது உற்ச்சவர் கள்ளழகர் மதுரை போயிருந்தார்,மூலவருக்கு எண்ணைக் காப்பு சாத்தியிருந்தது, கோபுரத் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தது, யானைக்கு உடல் நிலை சரியில்லாததால் யாரும் போக முடியா வண்ணம் கொட்டடியில் அடைத்து வைத்திருந்தனர் :)
சரி..அழகரை காணஅடுத்த தடவைதான் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும் போல :)
கோவில் கோபுர படம் என்னிடம் இல்லாததால் ப்ரசன்னா அவர்களது வலையிலிருந்து ஒரு படம் மட்டும் சுட்டு போட்டிருக்கிறேன்
எனக்கு கிடைத்த கோபுர தரிசனம் :)
இந்தக் கோவில் தூண்களில் உள்ள சிலைகள் மிகவும் கலை அழகுடனும் நுட்பமாகவும் செதுக்கப் பட்டவை.கீழ்க்காணும் படங்களை நீங்களே பாருங்களேன்.
ஆனால் இதில் சில சிலைகளின் கைகள் முதலானவை சேதப் பட்டிருப்பது பல படையெடுப்புகளின் போதா இல்லை பராமரிப்பின்மையாலா தெரியவில்லை..எதாக இருந்தாலும் மிக துரதிர்ஷ்ட வசமானது :)
திருவிக்ரமர்
கருட வாகனத்தில் விஷ்ணு பகவான்
வராக மூர்த்தி
ஹிரண்யனுடன் சண்டையிடும் நரசிம்ஹ மூர்த்தி
ஹிரண்ய வதம் முடிந்ததும் குடலை மாலையாக சூடும் நரசிம்ஹர்
இந்த இரு நரசிம்ஹ அவதார சிற்பன்களிலும் சண்டையிடும் ஹிரண்யன் உயிரோட்டமாகவும்(முதல் படம்) வதம் செய்யப்பட்ட பிறகு உடல் தொய்ந்து தலை தொங்கி(இரண்டாம் படம்) தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
அன்புடன்...ச.சங்கர்
8 comments:
சோதனைப் பின்னூட்டம்
என்ன சங்கர்...சோதனைப் பின்னூட்டமெல்லாம் பலமா இருக்கே. ;)
இந்த அழகர் கெளம்பி மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பார்க்க வர்ரது திருமலை நாயக்கர் காலத்துல இருந்து நடக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். சைவ-வைணவச் சண்டையைக் குறைக்க அவர் அப்படிச் செய்தார் என்று கேள்வி. இருந்தாலும் இத்தனை பேர் கூடும் அழகிய திருவிழா சித்திரைத் திருவிழா.
அழகர்கோயிலில் இரண்டு சிறப்புகள் உண்டு. ஒன்று நீர். அங்கு கிடைக்கும் நீரின் சுவை மிகச் சிறப்பு. அத்தோடு பிரசாதமாக ரவைத்தோசை போடுவார்கள். மெல்லிசாக இல்லாமல் மொந்தையாக மொத்தையாக இருக்கும். அதிலிருக்கும் எண்ணெய்யின் அளவு அச்சமூட்டினாலும் ஒருமுறை முயற்சிக்கலாம்.
அத்தோடு கீழிருந்து பழமுதிர்ச்சோலைக்கும் சிலம்பாற்றுக்கும் வாகனத்தில் செல்லாமல் நடந்து செல்வது நல்ல அனுபவமாக இருக்கும். வழியில் முந்திரிப் பழங்களெல்லாம் விற்கக் கிடைக்கும்.
அழகர் கோவிலில் திருப்பணி நடந்து கொண்டிருக்கிறதா? விரைவில் அழகனைத் தரிசிக்கும் பேறு கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
சிறு வயதில் குடும்பத்தோடு அழகர் கோவிலில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி வருவோம். அப்போதெல்லாம் இந்த மண்டபத்தில் இருக்கும் அழகிய சிற்பங்களைக் கண்டு இரசித்திருக்கிறேன். சரியான பராமரிப்பு இல்லாததால் தான் அவை சிதைந்திருக்கும் என்று நினைக்கிறேன். சிறு வயதில் நான் பார்த்த போது எந்த சிற்பமும் சிதைந்திருந்ததாக நினைவில்லை.
மீனாட்சி திருமணத்திற்காக அழகர் வருகிறார் என்பது மக்கள் நடுவில் இருக்கும் பிரபலமான கூற்று மட்டுமே. மாசி மாதத்தில் நடந்து கொண்டிருந்த மீனாட்சி அம்மன் திருவிழாவின் போது திருத்தேரை இழுக்க மக்கள் கூட்டம் குறைவாக இருப்பதும் சித்திரையில் அழகர் ஆற்றில் இறங்கும் போது சுற்று வட்டார மக்கள் எல்லோரும் வருவதும் கண்ட திருமலை நாயக்கர் அம்மன் கோவில் திருவிழாவையும் சித்திரைக்கு மாற்றினார் என்பது வரலாறு. மதுரையில் ஒவ்வொரு நாற்புறத் திருவீதிக்கும் அம்மன் எந்த மாதத்தில் திருவிழா கண்டு வலம் வருகிறாளோ அந்த மாதத்தின் பெயர் தான் கொடுத்திருக்கிறார்கள். சித்திரைத் திருவிழாவின் போது அம்மனும் ஐயனும் மாசி வீதிகளில் வலம் வருவது முன்பு மாசி மாதத்தில் நடந்த திருவிழாவின் எச்சமே.
வைணவரான திருமலை நாயக்கர் சைவத்திருத்தலமான மதுரையில் ஆட்சி செய்யும் போது வைணவ சைவச் சண்டைகள் அவரது ஆட்சிக்கு இடர்பாடாக அமையாமல் இருக்க இந்த ஏற்பாட்டைச் செய்தார் என்றும் சிலர் சொல்வதுண்டு. அதில் உண்மையும் இருக்கலாம்.
மெல்லிசாக இல்லாமல் மொந்தையாக மொத்தையாக இருக்கும். அதிலிருக்கும் எண்ணெய்யின் அளவ
அதானா? எல்லா சிலைகளின் வாய் பக்கம் ஒரே எண்ணை?
ராகவன்
தகவல்களுக்கு நன்றி ..அங்கு அடை ப்ரசாதம் ரொம்ப பிரசித்தம் என்று சொல்லிக் கொடுத்தார்கள்..ஜயன்ட் சைஸ் வடை போல இருந்தது...சுவையும் நன்றாக இருந்தது...நீங்கள் சொல்லும் ரவாதோசை?!!யும் இதுவும் ஒன்றா தெரியவில்லை.:)
குமரன்
பகிர்தலுக்கு நன்றி...எப்ப வர்ரீங்க ?:)
குமார்,
:))))
சங்கர், மிகவும் அருமையான பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி.
விஜய்
www.poetryinstone.in
Post a Comment