கல் பானை சோழிக்கல் --
முடிவு பகுதி -
கடைசியில் பொன்னம்மாவிற்கு என்ன ஆச்சு ?
இந்தப் பதிவிற்கு முன் என்னுடைய போன பதிவைப் போய் ஒரு எட்டு படித்து விட்டு வந்துஇதைத் தொடருங்கள்....அந்தக் கதையின் முடிவுப் பகுதிதான் இது. நன்றி.
வேலைப் பளுவில் பொன்னம்மாவை மறந்தே போனேன்.இன்று காலை திடிரென்று ஞாபகம் வந்தது.அடடா பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லி மூன்று நாளாயிருக்குமே என்ன ஆயிற்றோ என்று அரக்கப் பரக்க அந்த கிராமத்திற்க்கு ஓடினேன்.வழியில் ஆற்றங்கரையிலேயே பொன்னம்மாவை பார்த்து விட்டேன்.ஓட்டமும் நடையுமாக அவள் அருகில்சென்றேன்.
பொன்னம்மா என்னை கவனிக்கவில்லை.கவனமாக பானையை துலக்குவதில் ஈடுபட்டிருந்தாள்.கழுத்தில் புதிதாக ஏறிய தாலி மஞ்சள் பளபளப்புடன் சிரித்துக் கொண்டே பொன்னம்மாவிற்கு கல்யாணம் ஆகிவிட்டதை அறிவித்தது.
நான் "பொன்னம்மா " என்று கூப்பிட்டேன்.
பொன்னம்மா திரும்பிப் பார்த்து "ஐயா நீங்களா?வாங்க "என்றாள்
"பஞ்சாயாத்தில் என்ன நடந்தது? சோழிக்கல் எடுத்தியா?என்ன கல்? ... "என்று மூச்சு விடாமல் சராமாரியாகக் கேட்டேன்.
என்ன நடந்தது....இனி பொன்னம்மா வார்த்தைகளில்
"கன்னய்யனும் அவன் ஆளும் பேசுனதக் கேட்ட அன்னையிலிருந்து யோசிச்சு யோசிச்சு பைத்தியமே பிடிச்சிடும் போல ஆயிடுச்சு.அப்பதான் ஆனந்து,நோநோ யெல்லாம் வலைப்பூவுல பின்னூட்டமா சொல்லியிருந்த முடிவெல்லாம் படிச்சேன்.அதுல ஏதாவது யோசனைய செயல் படுத்தலாம்னு இருந்தேன்.ஆனா நோநோ அவுக சொன்ன மாதிரி என்னால ரெண்டு வெள்ளைக் கல்லை பானைக்குள்ள யாருக்கும் தெரியாம போட முடியல.இப்படியே அமாவசையும் வந்துடிச்சு.பஞ்சாயத்துக்கு போறதுக்கு முன்னாடி ஆனந்து அவக எளுதுனது படிச்சேன்.ஒரு கல்ல எடுத்து முளுங்கிட்டு பானையிலிருக்கும் அடுத்த கல்ல வச்சு நான் எடுத்த கல்ல முடிவு பண்ணிக்கங்க அப்படின்னு சொல்ல சொல்லியிருந்தாரு.நானும் அடடா இதுல்ல நல்ல யோசனை...அப்படின்னு நெனச்சு அப்படியே செய்யலாமுன்னுட்டு முடிவெடுத்துட்டு போனேன்.
பஞ்சாயத்துல கூட்டமான கூட்டம்.எல்லா சனமும் வேடிக்கை பார்க்க வந்துருச்சுங்க.
பூசாரி பூசை போட்டுட்டு "ஆத்தாள மனசுல நெனச்சுக்கிட்டு தைரியமா ஒரு கல்ல எடு தாயி...எல்லாம் நல்லதே நடக்கும்" அப்படின்னு சொல்லிக்கிட்டே என்ன உத்துப் பாத்தாரு.
நானும் ஒரு கல்ல எடுத்து வாயில போட்டு முளுங்கிட்டேன்.
அப்ப பஞ்சாயத்து பெரியவரு கல்லக் காட்டு பொன்னம்மான்னு சொன்னாரு.நானு ஆனந்து எளுதுனது மாதிரியே " பானையிலிருக்கிற கல்லைப் பாத்து னான் எடுத்த கல்லை முடிவு பண்ணிக்கங்க" அப்படீன்னு சொன்னேன்.
பூசாரியும் கன்னையனும் தேள் கொட்டுன திருடங்க மாதிரி முளிச்சாங்க.
கன்னைய்யன் பூசாரிய "இரு ஒன்னிய கவனுச்சிக்குறேன்" அப்படீங்கற மாதிரி ஒரு மொர மொரச்சாரு.
பூசாரி பதறியடுச்சுக்கிட்டு எங்கிட்ட வந்து "அதல்லாம் பானைக்குள்ளார இருக்குற கல்லைப் பாக்கக் கூடாது.வழக்கமில்லை சொன்னாக் கேளு...ஆத்தாவா வந்து அருள் வாக்கு சொல்ரேன்."அப்படீன்னாரு.
ஊருல எல்லாம் பூசாரி சொல்ரதுக்கு தலையாட்ட அரமிச்சாங்க.
பஞ்சாயத்து பெரியவரு "இப்ப என்ன செய்யிறது.அவ சொன்ன மாதிரியே அடுத்த கல்லை எடுத்து பார்த்துர வேண்டியதுதான்..பூசாரி நீரே அடுத்த கல்லை எடுத்து சபையில காட்டும்" அப்படீன்னு சொன்னாங்க.
எனக்கு மனசுக்குள்ள ஒரே சந்தோசம்..ஆஹா..யோசனை பலன் கொடுத்துடிச்சு ...அப்படீன்னு நெனைச்சேன்.கன்னையன் முகத்தை தொங்கப் போட்டுக் கிட்டு சோகமா நின்னாங்க.நான் மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டே தலைய குனுஞ்சிக்கிட்டுநின்னேன்.
பூசாரி...பாவி ...பாவி.. அப்படீன்னு சொல்லிக்கிட்டே பானைகுள்ள கைய விட்டு அடுத்த கல்லை எடுத்தாரு.கண்ணுலருந்து தாரை தாரையாதண்ணி ஊத்துது.
ஊர்ப் பெரியவரு "பூசாரி சீக்கிரம் கல்லைக் காட்டுவே" அப்படீன்னு அதட்டினாரு.
பூசாரி கைய நீட்டினாரு.
"கருப்புக் கல்லுதான இருந்தது " நான் சிரித்துக் கொண்டே பொன்னம்மாவை கேட்டேன்.
பொன்னம்மா ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்து விட்டு "இல்லிங்க...வந்தது வெள்ளைக் கல்.... என்றாள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.ஒரு நிமிடம் தலை சுற்றியது."என்னது...வெள்லைக் கல்லா?" என்றேன்.
" இப்படித்தாங்க ...ஊர்க் காரவுகளெல்லாம் கல்லைப் பாத்துட்டு ...வெள்ளைக் கல் .... வெள்ளைக் கல்... அப்படினுட்டு கத்துன போது ஒரு நிமிடம் எனக்கும் ஒண்ணுமே புரியல".கன்னையனும் வாயடச்சுப் போய் நின்னுட்டாக.நா கூட என்றென்றும் அன்புடன் பாலா அவுக சொன்ன மாதிரிஆத்தாதான் வந்து கல்லை மாத்திடிச்சோன்னு நெனைச்சேன்"
பஞ்சாயத்து பெரியவரு "அப்படீன்ன்னா பொன்னம்ம எடுத்தது கருப்புக் கல்லு...அதனால ஆத்தா மனசுப் படி பொன்னம்மா கன்னையனகட்ட வேண்டியது. கல்யாணம் நாளைக்கு கோயில்ல நடக்கும் .வீரய்யன் மாமனாராயிட்டதால கடன கன்னையன் திரும்ப கேக்கக் கூடாது "அப்படின்னு தீர்ப்பு சொல்லிட்டாரு.
தீர்ப்பக் கேட்டு நான் மயக்கமா சாஞ்சுட்டேன்.என்ன பக்கத்துலருந்த வீட்டுல போட்டுட்டு பூசாரிய விட்டு (அவர்தான ஊர் வைத்தியரு)பார்க்கச் சொன்னாங்க.நான் கண்ணு முளிச்சப்ப பூசாரி என் பக்கத்துல சோகமா நின்னுக்கிட்டு இருந்தாரு.அறைல வேற யாரும் இல்ல.நான் "பூசாரி,கன்னையன் சொன்னானுட்டு பானையில ரெண்டும் கருப்பு கல்லுதான போட்டீங்க..பின்ன எப்படி? என்று கேட்டேன்.
பூசாரி"பாவி மகளே ...கன்னையன் பானையில ரெண்டும் கருப்பு கல்லு போடச் சொன்னது வாஸ்தவம்தான்.ஆனா நான் என் கடனுக்காகஒன்னோட வாள்க்கைய நாசம் பண்ணக் கூடாது அப்படீன்னுட்டு ரெண்டயுமே வெள்ளைக் கல்லாப் போட்டு வச்சேன்.அளவுக்கு மீறி யோசிச்சு காரியத்தை கெடுத்திட்டயே..நான் நல்லதுதான் நடக்கும் அப்படீன்னு சூசகமா சொன்னேனே..கேக்காம போயிட்டியே பாவீன்னாரு.
கொஞ்ச நேரம் சும்மா இருந்த பொன்னம்மா மெதுவாக "நா கன்னையனுக்கு வாக்கப் படணுமின்னுட்டு இருக்கு.என்ன செய்ய" என்றாள்.
நான் மௌனமாக அவளைப் பார்த்துக் கொண்டே நின்றேன்.அப்போது அங்கு வந்த கன்னையன் "என்ன புள்ள..போகலாமா" என்றான்
"இதோ வந்துட்டேன்...மச்சான் " என்றவாரே என்னைப் பார்த்து முறுவலித்தாள்.போகிற போக்கில் "ஆனா ஒண்ணுங்கையா...நாம ஆசைப் படரவன விட நம்ம மேல ஆசை வக்கிரவன கட்டிக்கிட்டா வாழ்க்கை நல்லாதான் இருக்கும் " என்று சொல்லி விட்டு கன்னையனுடன் நடக்கலானாள்.
இதை உண்மையாக உணர்ந்து சொன்னாளா இல்லை சமாதானத்திற்காக சொன்னாளா என்று புரியாதவனாக நெடு நேரம் சிலையாக நின்றேன்.
அன்புடன்....ச.சங்கர்