உண்மைச் சம்பவம் கலந்த கதை.
" உங்களைப் போன்றவர்களால் நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது.எல்லாம் கணினி மயமாகிக் கொண்டு வருகிறது" என்றார் சக பயணி.
"நன்றி" என்றான் விவேக் ப்ரதான் கொஞ்சம் கர்வத்துடன்.
"உங்களைப் போன்றவர்களை பார்த்து நான் எப்போதுமே அதிசயித்துப் போவேன்" அவர் மேலும் தொடர்ந்தார். "நீங்கள் அறையில் அமர்ந்து கொண்டு கணினியை சொடுக்குகிறீர்கள்.அது ஆச்சரியகரமான பெரிய பெரிய வேலை யெல்லாம் செய்கிறது" குழந்தையைப் போல் அதிசயித்தார்.
விவேக் மேலும் கர்வமாக "அது வெறும் சொடுக்கும் விஷயமில்லை நண்பரே! அதன் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது தெரியுமா ?" என்று கேட்டுவிட்டு ஒரு நிமிடம் அவருக்கு கணினியை பற்றி மேலும் விளக்கலாமா என்று யோசித்து பிறகு முடிவை மாற்றிக் கொண்டு "அது மிகவும் சிக்கலான விஷயம்" என்று தோளைக் குலுக்கினான்.
அவரும் விடாமல் "அப்படித்தான் இருக்க வேண்டும்.அதனால்தான் உங்களுக்கெல்லாம் சம்பளம் மிக மிக அதிகமாக இருக்கிறது " என்றார் அப்பாவியாக.
இது விவேக் ப்ரதானை கொஞ்சம் சுருக் என தைத்தது.மிக மென்மையான கோபம் மேலிடும் குரலில் "எல்லோரும் சம்பளத்தையே பார்க்கிறார்கள்.யாருமே நாங்கள் செய்யும் கடின உழைப்பை பார்ப்பதில்லை.கடின உழைப்பை பற்றி நம் நாட்டவருக்கு மிகக் குறுகிய கண்ணோட்டமே இருக்கிறது. A/C அறையில் இருந்து கொண்டு வேலை செய்வதால் நாங்கள் வியர்வை சிந்துவதில்லை என்று நினைக்கிறீர்களா?உங்களைப் போல் உடலை வருத்தி வேலை செய்தால் மட்டும் கடின உழைப்பு என்று அர்த்தமில்லை. நாங்களும் மூளையை கசக்கித்தான் வேலை செய்கிரோம்.அதுவும் சுளுவானதில்லை.. தெரிந்து கொள்ளுங்கள்"
விவேக் ப்ரதான் மேலும் அவருக்கு புரிய வைக்க எண்ணி தொடர்ந்தான்
" உதாரணத்திற்க்கு இந்த இரயில்வே துறையை எடுத்துக் கொள்ளுங்கள்.பயணச்சீட்டு முன்பதிவு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கணக்கான கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களில் மற்றும் இணைய தளங்கள் மூலமாக பயணச்சீட்டை பதிவு செய்கிறார்கள்.ஒரே தகவல் மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பல்லயிரக்கணக்கான தகவல் பரிவர்த்தனைகள்,தகவல் கட்டமைப்பு, தகவல் பாதுகாப்பு,கணக்கு வழக்குகள் பராமரிப்பு என்று எவ்வளவோ இருக்கிறது! இந்த மாதிரி உள்ள ஒன்றை வடிவமைப்பதில் உள்ள நுட்பமும் , சிக்கலும் புரிகிறதா உங்களுக்கு ?? என்றான் விவேக்.
பக்கத்து சீட் பயணி திருவிழாவில் விடப்பட்ட சிறுவன் போல் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போனார்.இது அவரது கற்பனைக்கும் அப்பாற்பட்டது."நீங்கள் இதை போன்றவற்றை வடிவமைக்கும் பணியையா செய்கிறீர்கள்" என்று அப்பாவியாய்க் கேட்டார்.
"முன்னால் செய்து கொண்டு இருந்தேன்" கொஞ்சம் நிறுத்தி "ஆனால் இப்போது இது போன்றவற்றை வடிவமைக்கும் பலருக்கு மேலாளராக இருக்கிறேன்" என்றான்.
பக்கத்து சீட் பயணி "அப்படியானால் இப்போது உங்கள் வேலை சற்று சுளுவானதாக இருக்கும் " என்றார்.
அரசாங்கத்தில் மேலாளராகி விட்ட அதிகாரியைப் போல தன்னை எண்ணி விட்டாரே என்ற நினைப்பில் விவேக்கிற்க்கு அழுவதா,சிரிப்பதா என்று தெரியவில்லை.இவருக்கு எப்படியாவது புரிய வைத்து விட வேண்டும் என்ற நோக்கில் "ஐயா! மென் பொருள் துறையில் மேலே உயர உயர வேலை கடினமாகிக்கொண்டே போகும் . அதிக பொறுப்பு , அதிக வேலை பளுவை கொண்டு வரும். மென் பொருள் வடிவமைப்பது சுலபமல்ல .அதை இப்போது நான் செய்வதில்லை.ஆனால் அதைவிட அதிக பொருப்புகளை மேலாளர் என்ற முறையில் சுமக்கிறேன்.அது இன்னும் மிக அதிக மன அழுத்தத்தை தரும் வேலை.நான் மற்றவரிடம் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தரமான வேலை வாங்க வேண்டும் . அதில் என்ன கஷ்டம்மென்றால், ஒரு பக்கம் வாடிக்கையாளர் தன் தேவைகளை மாற்றிக்கொண்டே இருப்பார். உபயோகிப்பவரது தேவை வேறொன்றாக இருக்கும். மேலாளர் எல்லா வேலையையும் நேற்றே முடிக்க வேண்டும் என குதிப்பார். இவை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சமாளிக்க வேண்டும்". விவேக் நீண்ட உரையை நிறுத்தி அவரை ஒரு கணம் உற்று பார்த்தான்.
"நண்பரே !சுருக்கமாக சொன்னால் என் வேலை நாலா பக்கமிருந்தும் சீறிப் பறந்து வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது மாதிரி. அது எப்படியிருக்கும் என்பது உங்களுக்குப் புரியாது" என்று சொல்லி கடைசியில் அவருக்குப் புரிய வைத்துவிட்ட வெற்றிக் களிப்புடன் முறுவலித்தான்.
"நாலா பக்கமிருந்தும் சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது மாதிரி... நாலா பக்கமிருந்தும் சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது மாதிரி... அது " இதனை இரு முறை தனக்குள் சொல்லிப் பார்த்தபடி அந்த மனிதர் எதோ நினைவில் தன்னை இழந்தவராக எங்கோ வெறித்தார்.
திரும்ப அவர் பேச ஆரம்பித்த போது அவர் பேச்சிலிருந்த ஆழ்ந்த அமைதியும் உறுதியும் விவேக்கை துணுக்குறவும் ஆச்சரியப்படவும் வைத்தது. அவர் நினைவு எங்கேயோ யுகங்களைத் தாண்டி கடந்த காலத்தில் சஞ்ஜரித்துக் கொண்டிருந்தது போலிருந்தது.
"ஐயா சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது எப்படியிருக்கும் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடியும்" அவர் சன்னமான குரலில் பேச ஆரம்பித்தார்
"இருட்டின் போர்வையில் ' Point 4875 ' மலை முகட்டை பிடிக்கச் சொல்லி உத்தரவு வந்த பொழுது நாங்கள் மொத்தம் 30 பேர் இருந்தோம்.எதிரிகள் மலை உச்சியிலிருந்து சுட்டுக் கொண்டிருந்தனர்.எங்கிருந்து யாரிடமிருந்து, எந்தத் திசையிலிருந்து தோட்டாக்கள் பறந்து வருகின்றன என்றே அறிய முடியாத நிலை. மறுநாள் காலையில் மலையுச்சியில் பாரதத்தின் மூவர்ணக் கொடியை பறக்க விட்ட போது உயிரோடு எஞ்சியிருந்தது நாங்கள் நாலே பேர்." சொல்லிவிட்டு நிறுத்தினார்
"ஐயா நீங்கள் ஒரு......" என்றான் விவேக்
"நான்... ஜம்மு - காஷ்மீர் பதிமூன்றாவது துப்பக்கி படைப்பிரிவிலிருந்து.......... சுபைதார் சுஷாந்த் சிங்..... கார்கிலில் "Point 4875" என்றழைக்கப் படும் மலையுச்சியைக் காவல் காக்கும் இராணுவப் பணியில் இருக்கிறேன்" வார்தைகள் நிதானமாக வந்தன.
"கார்கில் போர் முடிந்த போது , விரும்பினால் எல்லையிலுருந்து திரும்பி உள் நாட்டில் எங்காவது வேலை செய்யலாம் என்று பரிந்துரை வந்தது. ஆனால் நீங்கள் சொல்லுங்கள் !!வாழ்க்கை சுளுவானதாக இருக்கும் என்று நம் கடமையை விட்டு விட முடியுமா?" கேள்வி கேட்டு விட்டு எந்த பதிலையும் எதிர் பார்க்காமல் அவர் மேலும் தொடர்ந்தார்.
"Point 4875" முகட்டை கைப்பற்றிய அந்த காலைப் பொழுதில் நாங்கள் மறைவிடத்தில் பாது காப்பக நின்று கொண்டிருந்த போதுதான் எங்களது சக வீரன் ஒருவன் அடி பட்டு எதிரிகளின் தோட்டாக்களுக்கு இலகுவான இலக்காக பனியில் திறந்த வெளியில் விழுந்து கிடப்பதைப் பர்த்தோம். காலில் குண்டு பாய்ந்து அவனால் நடக்க முடியவில்லை.அவனை மறைவிடத்தில் பாதுகாப்பக கொண்டு சேர்க்க வேண்டியது என் பொறுப்பு . ஏனென்றால் அவன் எனது படைப் பிரிவில் எனது ஜோடி வீரன்.
அவனைக் காப்பாறப் போவதற்கு மறைவிடத்தை விட்டு வெளியே வந்து சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும். தனியாக இருந்திருந்தால் யோசிக்காமல் செய்திருப்பேன்.ஆனால் இப்போதோ என் படைப்பிரிவின் மேஜர் என்னருகே நிற்கிறார், எனவே அவரது உத்தரவை அவசரமாய் நாடினேன்...அனால் மேஜரிடம் எவ்வளவோ கெஞ்சிய போதும் மறுத்து விட்டார். யாரும் மறைவிடத்தை விட்டு எக்காரணம் கொண்டும் வெளியே வரக் கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டார். எனக்கோ ஆத்திரம் தாளவில்லை..என் தோழன் அங்கே அடி பட்டுப் பனியில் புழுவாகத் துடித்துக் கொண்டிருக்கிறான் . மேஜரோ யாரும் காப்பாற்றப் போகக் கூடாதென்கிறார். ஆத்திரத்தின் எல்லைக்கே போன என்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் நான் துடித்துக் கொண்டிருக்கும் போதுதான் யாரும் எதிர் பார்க்காமல் அது நடந்தது. "
சற்றே பேச்சை நிறுத்திய அவரை விவேக் அவசரக் குரலில் கேட்டான் " பிறகு என்ன ஆயிற்று " அவனுக்கு விரு விருப்பான மர்ம நாவல் படிக்கும் போது பாதியுல் யாரோ பிடுங்கியது போலிருந்தது.
யாரும் எதிர் பாராத தருணத்தில் மேஜரே பாய்ந்து மறைவிடத்தை விட்டு வெளியே சென்று அந்த காயம் பட்ட வீரனைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டார்.மீதமிருந்த எங்கள் மூன்று பேருக்கும் என்ன நடக்கிறதென்பதே ஒரு கணம் பிடிபடவில்லை. மேஜர் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்ட மறுகணம் நாலா பக்கங்களிலிருந்தும் எதிரியின் தோட்டாக்கள் அவரை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தன.மேஜர் மறைவிடத்தை விட்டு வெளியேறி அந்தக் காயம் பட்ட வீரனை இழுத்துக் கொண்டு மீண்டும் மறைவிடத்தை அடைந்தது பத்துப் பதினைந்து வினாடிகளுக்குள்தான் இருக்கும். அந்தக் காயம் பட்ட வீரன் மேலும் ஒரு குண்டடி கூடப் படாமல் பாதுகாப்பாய் மறைவிடதில்.. ஆனால் அந்தப் பதினைந்து வினாடிகளுக்குள் மேஜரின் உடம்பில் 18 குண்டுகள் துளைத்து விட்டிருந்தன. அந்தக் குண்டடிகளுக்கும் மத்தியுல் அந்தக் காயம் பட்ட வீரனை மறைவிடத்துக்கு இழுத்து வந்தது அவர் மன உறுதியேயன்றி வேறல்ல. மறைவிடத்தில் ரத்த வெள்ளத்தில் விழுந்த மேஜரைப் பார்த்ததும்தான் அவர் என்னைப் போகவிடாததின் நோக்கம் புரிந்தது.கண்ணீருக்கிடையில் "ஏனைய்ய இப்படிச் செய்தீர்கள் "என்று அவரைக் கேட்ட போது சாகும் தருவாயில் அவர் சொன்னது " இராணுவத்தில் நான் மேஜராக சேர்ந்த போது எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணத்தில் --- முதலில் என் தாய் நாட்டின் பாதுகாப்பிற்காக பாடு படுவேன் அதன் பின் எனக்குக் கீழே பணி புரிவோரின் பாதுகாப்பிற்காக பாடு படுவேன் என்றும் சத்தியம் செய்தேன்.எந்த நிலையிலும் என் சொந்தப் பாதுகாப்பு கடைசி முக்கியதுவமே பெறும் எனவே நான் உயிரோடிருக்கும் வரை என் படைப்பிரிவினர் யார் உயிரையும் பணயம் வைக்க மாட்டேன்". இதுவே அவர் சொன்ன கடைசி வாக்கியமும் ஆகிப் போனது.
இப்பொழுதும் ஒவ்வொரு நாளும் "Point 4875" மலை முகட்டில் காவலுக்கு நிற்க்கும் போதும் இந்தக் காட்சி என் மனத்தை வியாபிக்கிறது. அதுவும் அந்த மேஜர் ,என்னைத் துளைக்க வேண்டிய தோட்டாக்களை தன் மேல் வாங்கி மடிந்த காட்சி... அப்பப்பா.... சீறி வரும் தோட்டாக்களின் பாதையில் நிற்பது எப்படியிருக்கும் என்பது எனக்கும் கண்டிப்பாக தெரியும் ஐயா ஏனென்றால் நான் வாக்கிய உதாரணத்துக்காக அன்றி அதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன் " என்று சொல்லி நிறுத்தினார்.
விவேக் ப்ரதானுக்கு யாரோ தன்னை சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.பேச நா எழவில்லை. கலங்கிய கண்களினூடே அவரைப் பார்த்தான். பிறகு நினைத்துக் கொண்டவன் போல் தனது லாப் டாப்பை மூடி சீட் பக்கத்தில் வைத்தான். கடைமையும் , வீரசாகசங்களும் தியாகமும் வாழ்க்கையின் சாதாரண அங்கமாக இருக்கும் இவர்களைப் போன்றவர்களுக்கு முன்னால் எப்படிப்பட்ட முக்கிய வேலையை செய்வதாக காட்டிக் கொண்டாலும் அது ஒரு பகட்டாகவோ அல்லது அவரை இழிவு படுத்தும் செயலாகவே இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.
இரயில் வேகமிழந்து மெதுவாக பிளாட்பாரத்தினுள் நுழைந்தது. சுபைதார் சுஷாந்த் சிங் தனது உடமைகளை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானார்.விவேக்கைப் பார்த்து புன்னகைத்து "உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்சி " என்று கை நீட்டினார்.
விவேக் ப்ரதான் தன் நடுங்கும் கரத்தால் அவர் கைகளைப் பற்றி குலுக்கிய வண்ணம் இந்தக் கைகள்தானே கரடு முரடான மலைகளை ஏறிக்கடக்கிறது,நாட்டை காப்பாற்ற துப்பாக்கி விசையை இழுக்கிறது, இந்தியாவின் மூவர்ணக் கொடியை அயராது பறக்க விட்டு பாதுகாக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.உடனே அனிச்சையாக அவரைப்பார்த்து ஒரு சல்யூட் அடித்தான்.
பின் குறிப்பு : இதில் வர்ணிக்கப் பட்டுள்ள கார்கில் 4875 மலை முகட்டு வெற்றி ஒரு உண்மை சம்பவம்.மேஜர் விக்ரம் Bபத்ரா, வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கையில், தனக்கு கீழ் பணி புரியும் வீரரை காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்தார்.அவருடைய வீர மரணத்திற்குப் பிறகு நமது தேச இராணுவத்தின் மிக உயரிய "பரம வீர் சக்ரா" விருது அவருக்கு வழங்கப்பட்டது.இது போன்ற வீர புருஷர்களால்தான் நாம் சீறி வரும் தோட்டக்களைப் பற்றிய கவலையில்லாமல் நிம்மதியாக தூங்க முடிகிறது.