புத்தகம் படிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டபோதும் அவ்வப்போது ஏதாவது ஒரு புத்தகம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் . அப்படிப் பட்ட சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் முன்னால் படித்த அல்லது கேள்விப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தெரிவு செய்து படிப்பது வழக்கம். சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டில் அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்த போது எனது ஆங்கில நாவல் படிக்கும் ஆவலை தூண்டி விட்ட எழுத்தாளர்களில் ஒருவரான ஜெஃப்ரி ஆர்ச்சரின் சமீபத்தில் வெளிவந்த "A Prisoner of Birth" படிக்கக் கிடைத்தது.
தொடர்வது அந்த நாவலைப் பற்றி எனது பார்வையில்......
லண்டனில் சாதாரண மெக்கானிக்காக இருக்கும் அதிகம் படிக்காத டேனி கார்ட்ரைட் தனது சிறு வயது தோழியும் ,காதலியுமான எலிசபெத்துடன் தனது திருமணம் நிச்சயமானதை சிறப்பாக கொண்டாட நினைக்கிறான்.அதற்காக எலிசபெத்துடனும் ,தனது உற்ற தோழனும் எலிசபெத்தின் அண்ணனுமான பெர்னார்ட் வில்சனுடன் பணக்காரர்கள் வாழும் பகுதியிலுள்ள ஒரு பாருக்கு செல்கிறான்.அங்கு 4 பேர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ஒருவர் தொலைக்காட்சி மற்றும் நாடகங்களில் நடிக்கும் பிரபலமான நடிகர்.மற்ற மூவரும் கூட பிரபலமான மேல்தட்டு வர்க்கத்தினர்தான். குடி போதையில் அந்த நால்வரில் ஒருவன் (ஸ்பென்சர் க்ரெய்க்-ஒரு பிரபல வக்கீல்) எலிசபெத்தை ஆபாசமாக கேலி செய்ய கோபப்படும் எலிசபெத்தின் அண்ணனை சமாதானப் படுத்தும் டேனியும் எலிசபெத்தும் அண்ணனையும் கூட்டிக் கொண்டு பாரை விட்டு வெளியேருகிறார்கள். ஆனால் அவர்களிடம் தகறாறு செய்வதற்கென்றே வெளியே வரும் ஸ்பென்சர் க்ரெய்க்கும் அவனது கூட்டாளிகளுள் ஒருவனும் கை கலப்பில் இறங்க நடக்கும் அமளியில் எலிசபெத்தின் அண்ணன் பெர்னார்ட் வில்சன் (ஸ்பென்சர் க்ரெய்கினால்) கத்தியால் குத்தப்பட்டு இறக்கிறான். ( தமிழ் சினிமாக்களில் வருவது போல் குத்தப்பட்ட தனது நண்பனை கைகளில் ஏந்திக் கொண்டு அவன் நெஞ்சில் பாய்ந்த கத்தியை டேனி எடுக்க முயல கத்தியில் அவன் கைரேகை பதிந்து விடுகிறது.மற்றும் ஸ்பென்சர் க்ரெய்கே போலிஸுக்கு தகவல் முதலில் சொல்வதால் அது ஸ்பென்சர் க்ரெய்க்கிற்கு சாதகமாகவும் டேனிக்கு எதிராகவும் சாட்சியமாகிறது :))
ஆனால் ஸ்பென்சர் கிரெய்க் தேர்ந்த வக்கீல் என்பதால் சூழ்நிலையையும் , தனது நண்பர்களின் பொய் சாட்சியையும் தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு டேனி கார்ட்ரைட்தான் கொலை செய்தான் என போலிஸை நம்ப வைத்து விடுகிறான்.கோர்ட்டிலும் நடிகர் உட்பட பிரபலமான நால்வரின் சாட்சியத்தின் முன் எலிசபெத்தின் சாட்சியம் அதுவும் தனது காதலனுக்கு சாதகமான சாட்சியம் எடுபடாமல் போக ஜூரிக்களால் டேனி கார்ட்ரைட் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு 22 வருட ஆயுள் சிறைதண்டனை விதிக்கப் பட்டு இங்கிலாந்திலேயே அதிகம் பாதுகாப்பு கொண்ட பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப் படுகிறான். அவனது மேல் முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டு விடுகிறது.
சிறையில் இவனது அறையில் சக கைதியாக வரும் முன்னாள் ராணுவ அதிகாரி நிக்கோலஸ் மான்க்ரிஃப்பிற்கும் டேனிக்கும் மிக அதிக அளவில் உறுவ ஒற்றுமை இருக்கிறது ( மீண்டும் தமிழ் சினிமா ஸ்டைல் :)) ஒன்றரை வருடத்தில் விடுதலை செய்யப்படப்போகும் நிக் சந்தர்ப்பவசத்தால்??!! சிறையில் கொலை செய்யப்பட கொலை செய்யப்பட்டது டேனி தான் என அனைவரும் நினைக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி டேனி நிக்காக விடுதலை அடைகிறான்.( மீண்டும் தமிழ் சினிமா:)) நிக்காக வெளியில் வரும் டேனி நிக்கின் சித்தப்பாவுடனான சொத்துத் தகறாரை வென்று பெரும் பணக்காரனாகி விடுகிறான் :)பிறகு திட்டமிட்டு க்ரெய்க் ஸ்பென்சர் மற்றும் அவனது கூட்டாளிகளை தொழில் ரீதியாகவும்,அந்தஸ்து ரீதியாகவும் கீழிரக்கி அவர்களுக்கு மன உளைச்சலைக் கொடுத்து பழிவாங்கும் (கொலை செய்ய அல்ல) நடவடிக்கைகளில் இறங்குகிறான். நடுவில் பொய் வேடம் கலைந்து டேனி மாட்டிக் கொள்ள ஜெயிலிலிருந்து பொய் சொல்லி தப்பித்ததற்காக மீண்டும் அவன் மீது வழக்கு தொடரப் படுகிறது.
டேனி விடுதலை செய்யப் பட்டான? எலிசபெத்துடன் மீண்டும் இணைந்தானா? க்ரெய்க் ஸ்பென்சர் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 வருடங்களுக்கு முன் செய்த கொலை மற்றும் பொய் சாட்சி சொன்ன குற்றம் மறுபடி எப்படி வெளிக்கொணரப்பட்டது? என்பதை தனக்கேயான பாணியில் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் ஜெஃப்ரி ஆர்ச்சர். கோர்ட் நடை முறைகளையும், வாதப் பிரதி வாதங்களையும் விருவிருப்பாக சொல்லியிருக்கிறார்.
இங்கிலாந்து கோர்ட் நடைமுறையின் கீழ் குற்றவாளியின் வேறு வழக்கு நடக்கும் போது, ஏற்கனவே தீர்ப்பு சொல்லப்பட்டு முடிந்து போன முதல் வழக்கு பற்றி எந்த ஒரு ரெஃபரென்ஸும் தரவோ அல்லது கோடி காட்டவோ கூடாது என்ற நடை முறை இருப்பதை நீதிபதி இருதரப்பு வக்கீலையும் கூப்பிட்டு கடுமையாக எச்சரிக்க, ஆனால் அந்த முதல் வழக்கு ரெஃபரன்ஸும் , ஸ்பென்சர் க்ரெய்கின் பெயரும் குறிப்பிடப்பட்டு அவனை சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரித்தால்தான்ன் டேனி கொலையாளி இல்லை என்று நிரூபிக்கமுடியுமாதலால், டேனியின் வக்கீல் எப்படி அரசு தரப்பு சாட்சியங்களின் வாயிலாகவே அந்த சாட்சிகளின் பெயரை சொல்ல வைத்து ஸ்பென்சர் க்ரெய்க்கை வரவழைத்து இந்தக் கேசில் இணைக்கிறார் மற்றும் எப்பொழுதோ நடந்த கொலையை ஸ்பென்சர் க்ரெய்க் செய்திருக்கக்கூடும் என்று அவன் சாட்சியம் மூலமே நிரூபிக்கிறார் என்பது இந்தக் கதையின் ஹைலைட்.
ஜெஃப்ரி ஆர்ச்சரே சமீபத்தில் ஒரு வழக்கில் சிக்கி 2 வருடம் சிறை தண்டனை அனுபவித்ததும், பெல்மார்ஷ் சிறையிலேயே சிலகாலம் இருந்ததும் கோர்ட் நடைமுறைகளையும், சிறை வாழ்க்கையையும் தத்ரூபமாக எழுத உதவியிருக்கிறது என்பது என் எண்ணம் :)
ஜெஃரி ஆர்ச்சரின் முந்தைய சில படைப்புகளான Not a penny more Not a penny less , kane&Abel, Shall we tell the president, A Matter of Honour அளவுக்கு சொல்ல முடியாதென்றாலும் கதை சொல்லப்பட்ட விதமும் ஜெஃரி ஆர்ச்சருக்கே உரித்தான கவர்ச்சி நடையும் புத்தகத்தை கீழே வைக்கவிடாமல் முடிக்கத் தூண்டுகிறது.ஜெஃப்ரி ஆர்ச்சர் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.
கதை படித்து முடித்ததும் ஜெஃப்ரி ஆர்ச்சர் எம்ஜிஆரின் நாடோடி மன்னன்,ஒளிவிளக்கு, நீரும் நெருப்பும் அல்லது atleast ஷங்கரின் ஜீன்ஸ் போன்ற படங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டாரோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.:)
ஒன்று மட்டும் உண்மை, ஆர்ச்சர் சொல்வது போல் "We all suffer in our different ways from being Prisoners of Birth"
அன்புடன்...ச.சங்கர்