Saturday, October 04, 2008

பிறப்பின் கைதி--"A Prisoner of Birth - By Jeffrey Archer"


புத்தகம் படிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டபோதும் அவ்வப்போது ஏதாவது ஒரு புத்தகம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் . அப்படிப் பட்ட சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் முன்னால் படித்த அல்லது கேள்விப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தெரிவு செய்து படிப்பது வழக்கம். சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டில் அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்த போது எனது ஆங்கில நாவல் படிக்கும் ஆவலை தூண்டி விட்ட எழுத்தாளர்களில் ஒருவரான ஜெஃப்ரி ஆர்ச்சரின் சமீபத்தில் வெளிவந்த "A Prisoner of Birth" படிக்கக் கிடைத்தது.

தொடர்வது அந்த நாவலைப் பற்றி எனது பார்வையில்......

லண்டனில் சாதாரண மெக்கானிக்காக இருக்கும் அதிகம் படிக்காத டேனி கார்ட்ரைட் தனது சிறு வயது தோழியும் ,காதலியுமான எலிசபெத்துடன் தனது திருமணம் நிச்சயமானதை சிறப்பாக கொண்டாட நினைக்கிறான்.அதற்காக எலிசபெத்துடனும் ,தனது உற்ற தோழனும் எலிசபெத்தின் அண்ணனுமான பெர்னார்ட் வில்சனுடன் பணக்காரர்கள் வாழும் பகுதியிலுள்ள ஒரு பாருக்கு செல்கிறான்.அங்கு 4 பேர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ஒருவர் தொலைக்காட்சி மற்றும் நாடகங்களில் நடிக்கும் பிரபலமான நடிகர்.மற்ற மூவரும் கூட பிரபலமான மேல்தட்டு வர்க்கத்தினர்தான். குடி போதையில் அந்த நால்வரில் ஒருவன் (ஸ்பென்சர் க்ரெய்க்-ஒரு பிரபல வக்கீல்) எலிசபெத்தை ஆபாசமாக கேலி செய்ய கோபப்படும் எலிசபெத்தின் அண்ணனை சமாதானப் படுத்தும் டேனியும் எலிசபெத்தும் அண்ணனையும் கூட்டிக் கொண்டு பாரை விட்டு வெளியேருகிறார்கள். ஆனால் அவர்களிடம் தகறாறு செய்வதற்கென்றே வெளியே வரும் ஸ்பென்சர் க்ரெய்க்கும் அவனது கூட்டாளிகளுள் ஒருவனும் கை கலப்பில் இறங்க நடக்கும் அமளியில் எலிசபெத்தின் அண்ணன் பெர்னார்ட் வில்சன் (ஸ்பென்சர் க்ரெய்கினால்) கத்தியால் குத்தப்பட்டு இறக்கிறான். ( தமிழ் சினிமாக்களில் வருவது போல் குத்தப்பட்ட தனது நண்பனை கைகளில் ஏந்திக் கொண்டு அவன் நெஞ்சில் பாய்ந்த கத்தியை டேனி எடுக்க முயல கத்தியில் அவன் கைரேகை பதிந்து விடுகிறது.மற்றும் ஸ்பென்சர் க்ரெய்கே போலிஸுக்கு தகவல் முதலில் சொல்வதால் அது ஸ்பென்சர் க்ரெய்க்கிற்கு சாதகமாகவும் டேனிக்கு எதிராகவும் சாட்சியமாகிறது :))

ஆனால் ஸ்பென்சர் கிரெய்க் தேர்ந்த வக்கீல் என்பதால் சூழ்நிலையையும் , தனது நண்பர்களின் பொய் சாட்சியையும் தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டு டேனி கார்ட்ரைட்தான் கொலை செய்தான் என போலிஸை நம்ப வைத்து விடுகிறான்.கோர்ட்டிலும் நடிகர் உட்பட பிரபலமான நால்வரின் சாட்சியத்தின் முன் எலிசபெத்தின் சாட்சியம் அதுவும் தனது காதலனுக்கு சாதகமான சாட்சியம் எடுபடாமல் போக ஜூரிக்களால் டேனி கார்ட்ரைட் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு 22 வருட ஆயுள் சிறைதண்டனை விதிக்கப் பட்டு இங்கிலாந்திலேயே அதிகம் பாதுகாப்பு கொண்ட பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப் படுகிறான். அவனது மேல் முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டு விடுகிறது.

சிறையில் இவனது அறையில் சக கைதியாக வரும் முன்னாள் ராணுவ அதிகாரி நிக்கோலஸ் மான்க்ரிஃப்பிற்கும் டேனிக்கும் மிக அதிக அளவில் உறுவ ஒற்றுமை இருக்கிறது ( மீண்டும் தமிழ் சினிமா ஸ்டைல் :)) ஒன்றரை வருடத்தில் விடுதலை செய்யப்படப்போகும் நிக் சந்தர்ப்பவசத்தால்??!! சிறையில் கொலை செய்யப்பட கொலை செய்யப்பட்டது டேனி தான் என அனைவரும் நினைக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி டேனி நிக்காக விடுதலை அடைகிறான்.( மீண்டும் தமிழ் சினிமா:)) நிக்காக வெளியில் வரும் டேனி நிக்கின் சித்தப்பாவுடனான சொத்துத் தகறாரை வென்று பெரும் பணக்காரனாகி விடுகிறான் :)பிறகு திட்டமிட்டு க்ரெய்க் ஸ்பென்சர் மற்றும் அவனது கூட்டாளிகளை தொழில் ரீதியாகவும்,அந்தஸ்து ரீதியாகவும் கீழிரக்கி அவர்களுக்கு மன உளைச்சலைக் கொடுத்து பழிவாங்கும் (கொலை செய்ய அல்ல) நடவடிக்கைகளில் இறங்குகிறான். நடுவில் பொய் வேடம் கலைந்து டேனி மாட்டிக் கொள்ள ஜெயிலிலிருந்து பொய் சொல்லி தப்பித்ததற்காக மீண்டும் அவன் மீது வழக்கு தொடரப் படுகிறது.

டேனி விடுதலை செய்யப் பட்டான? எலிசபெத்துடன் மீண்டும் இணைந்தானா? க்ரெய்க் ஸ்பென்சர் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 வருடங்களுக்கு முன் செய்த கொலை மற்றும் பொய் சாட்சி சொன்ன குற்றம் மறுபடி எப்படி வெளிக்கொணரப்பட்டது? என்பதை தனக்கேயான பாணியில் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் ஜெஃப்ரி ஆர்ச்சர். கோர்ட் நடை முறைகளையும், வாதப் பிரதி வாதங்களையும் விருவிருப்பாக சொல்லியிருக்கிறார்.

இங்கிலாந்து கோர்ட் நடைமுறையின் கீழ் குற்றவாளியின் வேறு வழக்கு நடக்கும் போது, ஏற்கனவே தீர்ப்பு சொல்லப்பட்டு முடிந்து போன முதல் வழக்கு பற்றி எந்த ஒரு ரெஃபரென்ஸும் தரவோ அல்லது கோடி காட்டவோ கூடாது என்ற நடை முறை இருப்பதை நீதிபதி இருதரப்பு வக்கீலையும் கூப்பிட்டு கடுமையாக எச்சரிக்க, ஆனால் அந்த முதல் வழக்கு ரெஃபரன்ஸும் , ஸ்பென்சர் க்ரெய்கின் பெயரும் குறிப்பிடப்பட்டு அவனை சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரித்தால்தான்ன் டேனி கொலையாளி இல்லை என்று நிரூபிக்கமுடியுமாதலால், டேனியின் வக்கீல் எப்படி அரசு தரப்பு சாட்சியங்களின் வாயிலாகவே அந்த சாட்சிகளின் பெயரை சொல்ல வைத்து ஸ்பென்சர் க்ரெய்க்கை வரவழைத்து இந்தக் கேசில் இணைக்கிறார் மற்றும் எப்பொழுதோ நடந்த கொலையை ஸ்பென்சர் க்ரெய்க் செய்திருக்கக்கூடும் என்று அவன் சாட்சியம் மூலமே நிரூபிக்கிறார் என்பது இந்தக் கதையின் ஹைலைட்.

ஜெஃப்ரி ஆர்ச்சரே சமீபத்தில் ஒரு வழக்கில் சிக்கி 2 வருடம் சிறை தண்டனை அனுபவித்ததும், பெல்மார்ஷ் சிறையிலேயே சிலகாலம் இருந்ததும் கோர்ட் நடைமுறைகளையும், சிறை வாழ்க்கையையும் தத்ரூபமாக எழுத உதவியிருக்கிறது என்பது என் எண்ணம் :)

ஜெஃரி ஆர்ச்சரின் முந்தைய சில படைப்புகளான Not a penny more Not a penny less , kane&Abel, Shall we tell the president, A Matter of Honour அளவுக்கு சொல்ல முடியாதென்றாலும் கதை சொல்லப்பட்ட விதமும் ஜெஃரி ஆர்ச்சருக்கே உரித்தான கவர்ச்சி நடையும் புத்தகத்தை கீழே வைக்கவிடாமல் முடிக்கத் தூண்டுகிறது.ஜெஃப்ரி ஆர்ச்சர் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

கதை படித்து முடித்ததும் ஜெஃப்ரி ஆர்ச்சர் எம்ஜிஆரின் நாடோடி மன்னன்,ஒளிவிளக்கு, நீரும் நெருப்பும் அல்லது atleast ஷங்கரின் ஜீன்ஸ் போன்ற படங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டாரோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.:)

ஒன்று மட்டும் உண்மை, ஆர்ச்சர் சொல்வது போல் "We all suffer in our different ways from being Prisoners of Birth"

அன்புடன்...ச.சங்கர்

8 comments:

ச.சங்கர் said...

இந்தப் புத்தகம் படித்திருந்தால் அது பற்றி உங்களது கருத்துக்களையும் பகிரலாமே :)

dondu(#11168674346665545885) said...

இப்புத்தகம் படிக்காவிட்டாலும், கதையின் ப்ளாட் அலெக்ஸாந்தர் ட்யூமாவின் கவுண்ட் ஆஃப் மோண்டிக்றிஸ்டோ நாவலை நினைவூட்டுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ச.சங்கர் said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி திரு டோண்டு ராகவன்

Sridhar Narayanan said...

தல புதிய நாவல் ரிலீஸ் ஆயிட்டுதா? நான் படிக்கல இன்னமும்.

//டேனி கார்ட்ரைட் //

இவருடைய இன்னொரு கதையான 'Sons of Fortune'-லும் ஒரு நாயகன் பெயர் நேட் என்று சொல்லப்படும் நேதனியல் கார்ட்ரைட். தலைவருக்கு பெயர் பஞ்சம் வந்திடுச்சா என்ன?

//பெல்மார்ஷ் சிறையில் //

ஆமாம். தலைவர் 'Prisoners diary'ல ரொம்பவே உருக்கமா எழுதியிருப்பார் பெல்மார்ஷ் சிறையைப் பத்தி

//டேனி விடுதலை செய்யப் பட்டான? எலிசபெத்துடன் மீண்டும் இணைந்தானா? க்ரெய்க் ஸ்பென்சர் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 வருடங்களுக்கு முன் செய்த கொலை மற்றும் பொய் சாட்சி சொன்ன குற்றம் மறுபடி எப்படி வெளிக்கொணரப்பட்டது?//

அட எங்கங்க இதுக்கெல்லாம் நேரம் இருக்கு. நீங்களே கொஞ்சம் படிச்சு சொல்லலாமில்லே?

//விருவிருப்பாக சொல்லியிருக்கிறார். //

விறுவிறுப்பு கொஞ்சம் கம்மிதான் போல. சின்ன 'ர' போட்டிருக்கீங்களேன்னு கேட்டேன் :-))

//ஜெஃப்ரி ஆர்ச்சர் எம்ஜிஆரின் நாடோடி மன்னன்,ஒளிவிளக்கு, நீரும் நெருப்பும் அல்லது atleast ஷங்கரின் ஜீன்ஸ் போன்ற படங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டாரோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.:)//

அட நீங்க அவரோட Kane and Abel, Sons of Fortune, Fourth Estate இதெல்லாம் படிக்கலையா?

//பிறகு திட்டமிட்டு க்ரெய்க் ஸ்பென்சர் மற்றும் அவனது கூட்டாளிகளை தொழில் ரீதியாகவும்,அந்தஸ்து ரீதியாகவும் கீழிரக்கி அவர்களுக்கு மன உளைச்சலைக் கொடுத்து பழிவாங்கும் (கொலை செய்ய அல்ல) நடவடிக்கைகளில் இறங்குகிறான்.//

இது Not a penny more not a penny less கதைதான் :-))

தலைவரும் ரீ-மிக்ஸிங்க்ல இறங்கிட்டார்ப் போல.

ஒரு வியத்தகு ஒற்றுமை இருக்குப் பாத்தீங்களா. First among the Equals-ல் ஒரு பிரிட்டிஷ் காங்கிரஸ் உறுப்பினர் பாத்திரம் வரும் (பெயர் ஞாபகம் இல்லை). அவர் ஒரு விபச்சார வழக்கில் மாட்டி ஜெயிலுக்குப் போவார். நம்ம தலைவரும் 'House of Lords' இருந்திட்டு எப்போதோ செய்ததாக சொல்லப்படும் அந்நிய செலாவணி மோசடிக்காக ஜெயிலுக்கு போயிட்டு வருவார். நிஜமாகவே பாவமா இருந்தது :((

ச.சங்கர் said...
This comment has been removed by the author.
ச.சங்கர் said...

வாங்க ஸ்ரீதர் நாராயனன்.

///தலைவருக்கு பெயர் பஞ்சம் வந்திடுச்சா என்ன///

:)) சொன்னமாதிரி கதைப்பஞ்சமும் சேர்த்து.

//அட எங்கங்க இதுக்கெல்லாம் நேரம் இருக்கு. நீங்களே கொஞ்சம் படிச்சு சொல்லலாமில்லே//

ஆர்ச்சர் ரசிகர்களுக்கு முடிவு சொல்லணுமா என்ன? எப்பவுமே கடைசியில் கதானாயகன் ஜெயித்து விடுவார் :)

//இது Not a penny more not a penny less கதைதான் :-))

தலைவரும் ரீ-மிக்ஸிங்க்ல இறங்கிட்டார்ப் போல.//

ஆமாம். ஆனால் இந்தக் கதையில் கோர்ட் சீன்கள் புதுசு.முந்தைய எந்த ஆர்சரிலும் வரவில்லை :)

//ஒரு வியத்தகு ஒற்றுமை இருக்குப் பாத்தீங்களா. First among the Equals-ல் ஒரு பிரிட்டிஷ் காங்கிரஸ் உறுப்பினர் பாத்திரம் வரும் (பெயர் ஞாபகம் இல்லை). அவர் ஒரு விபச்சார வழக்கில் மாட்டி ஜெயிலுக்குப் போவார். நம்ம தலைவரும் 'House of Lords' இருந்திட்டு எப்போதோ செய்ததாக சொல்லப்படும் அந்நிய செலாவணி மோசடிக்காக ஜெயிலுக்கு போயிட்டு வருவார். நிஜமாகவே பாவமா இருந்தது ///

ஒற்றுமையா இல்லை அவர் எழுதுனதி வச்சே அவரை புடுச்சுட்டாங்களா :) இதுவும் விபசார / அன்னிய செலாவணி வழக்குதான்.தொடுப்பு வெச்சிக்குனு அதை வெளிய சொல்லாம இருக்குறதுக்கு அம்மிணிக்கு 2000 பவுண்டு கொடுத்து வெளியூர் அனுப்பப் பாத்து ஸ்டிங் ஆபரேசஷன்ல மாட்டிக்கினாராமே :)

விறு விறுப்பா எழுதும் போது விரு விருப்பா ஆயிடுது :)

enRenRum-anbudan.BALA said...

I too have read the novel :) And your review is excellent !! Some quotes from the book would have made it more interesting !

ச.சங்கர் said...

பாலாஜி

நன்றி