முல்லை பெரியார் அணை விவகாரத்தின் பின்னணி
தமிழகத்தின் வறண்ட ராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் விவசாயத்தை மேம்படுத்த ஆங்கில அரசால் 1886-ல் திருவிதாங்கூர் மன்னருடன் 999 வருடங்களுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 1895-ல் முல்லை பெரியார் அணை கட்டப்பட்டது.
அணையின் நீர் மட்டம் 156 அடியாக பராமரிக்கவும்,அணை கட்டுவதனால் மூழ்கடிக்கப் படும் 8000 ஏக்கர் நிலத்திற்கு தமிழகம் ஆண்டு தோறும் நிர்ணயிக்கப்பட்ட வாடகை தரவேண்டும் போன்றவை ஒப்பந்தமாகி அதன் படி 60 ஆண்டுகள் எந்த சிக்கலும் இன்றி செயல் பட்டு வந்தது.
1970 ஆம் ஆண்டு மின் உற்பத்திக்காக பெரியார் மின்நிலைய திட்டம் வகுக்கப்பட்டு புதிய ஒப்பந்தமும் போடப்பட்டு , முன்பு கொடுக்கப்பட்டு வந்த நீரில் மூழ்கும் நிலத்திற்கு வாடகை பணம் உயர்த்தப்பட்டு அதன் படி உயர்த்தப்பட்ட தொகையை தமிழகம் கேரள அரசுக்கு கட்டியும் வருகிறது.
ஆனால் கடந்த 27 வருடங்களாக அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்து விட்டது கேரள அரசு.
குறைக்கப்பட்ட அளவினால் நீரில் மூழ்கும் நிலம் 8000 ஏக்கரிலிருந்து 4677 ஏக்கராக குறைந்து விட்டது. இப்படி நீர்மட்டம் குறைத்ததனால் வெளிப்பட்ட நிலத்தில் கேரள அரசு பல்வேறு விதமான சுற்றுலா கேளிக்கை சாதனங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
அணையின் நீர்மட்டம் 16 அடி குறைக்கப்பட்டதால் தமிழகத்தில் 1,25,000 ஏக்கர் நிலம் தரிசாக உள்ளது..அதுவும் தவிர 140 MW உற்பத்தி திறன் கொண்ட பெரியார் மின்நிலையம் 40 சதவிகித உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளது.
இவ்வளவிற்கும் கேரள அரசு நீர்மட்டத்தை குறைத்ததற்கு சொன்ன காரணம் அணை பலவீனமாக இருப்பதாக என்பதன்றி வேறெதுவும் இருப்பதாக தெரியவில்லை.இதில் உச்ச நீதிமன்றத்தால் நிபுணர் குழு அமைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு பின் அனை பலப்படுத்தப்பட்ட பின்னும் நீர்மட்டத்தை உயர்த்த கேரளம் தயாராக இல்லை.
இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்திற்கு சென்ற போது ,உச்ச நீதி மன்றம் அமைத்த வல்லுனர் குழு அணையை ஆய்வு செய்து பல சோதனைகள் செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என இறுதி தீர்ப்பளித்தது.
ஆனால் அவசர அவசரமாக சட்ட சபையை கூட்டி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதோடல்லாமல்..மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற வழக்கில் பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என கேரள அரசு வலியுருத்தியது..அதையும் ஏற்றுக் கொண்ட??!!! உச்ச நீதி மன்றம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணுமாறு தெரிவித்தது.
நேற்று(23-10-06) தமிழக முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ""மத்திய அரசு முன்னிலையில்"" கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன்னடிப்படையில் எழும் சில கேள்விகள்
1) பேச்சுவார்த்தை எந்தப் பலனும் அளிக்காததால்தானே நீதிமன்றத்தை நாடுவதே?அந்த நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்காமல் திரும்ப பேச்சுவார்த்தை நடுத்துவதனால் கால விரையம் தவிர வேறேதும் முடிவு பிறக்குமா ?
2) கேரளாவில் ஆட்சியில் மாறி மாறி இருப்பதே மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் அதற்கு துணை நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்தான். இந்த நிலையில் இவர்களது முன்னிலையில் பேச்சுவார்த்தை ஏதாவது பயனளிக்குமா என்பது கேள்விக்குறியே.
3)உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத ஒரு மாநிலம் மத்திய அரசின் முன்பாக பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டும் ஏதேனும் தீர்வுக்கு ஒத்துக் கொள்ளுமா என்பது அடுத்த கேள்வி
3)தங்களை தேசிய அளவிலான கட்சியாக நிறுவிக் கொள்ளும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது மாநில பிரதிநிதிகள் வாயிலாக ""இங்கு ஆதரித்தும்...அங்கு எதிர்த்துமாக"" இரட்டை நிலைபாட்டை எடுத்து இன்னும் எத்தனை காலந்தான் மக்களை ஏமாற்றுவார்கள் ?
4) நெய்வேலி லிக்னைட்டை தனியார் மயமாகுதலை எதிர்த்து "மத்திய அரசில் ஆதரவு வாபஸ்" என்ற பிரம்மாஸ்திரத்தை எடுத்த கருணநிதி அதே போல் இப்போதும் முடிவெடுத்து அல்லது கோடி காட்டி காரியம் சாதிக்க முயல்வாரா ?
5)இந்திய தேசியம் என்பது உண்மையில் வெறும் ஜல்லிதானா?ஏதோ ஒரு காலத்தில் ஆங்கிலேய அரசால் அவர்களது வசதிக்காக ஒரு குடையின் கீழ் கட்டிக்காக்கப் பட்டு, உலகிலேயே பெரிய ஜனநாயகம் என்று பெருமை பேசும் இந்தியா ஒரு உபயோகமில்லாத உளுத்துப் போன, தொட்டால் உதிர்ந்து விடும் எலும்புக்கூடுதானா ? சகிப்புத்தன்மை அறவே இல்லாத நம்மால் அடுத்த மாநிலத்தவருக்காக ஒரு சில டி.எம்.சி தண்ணீர் அதிகம் தர மனதில்லை அல்லது அண்டை மாநிலம் பயன் பெற ஒரு அணையில் சில அடி நீர் மட்டம் உயர்த்த வக்கில்லை. இந்த நிலையில் என்ன சாதிப்பதற்காக இந்த ஜனநாயகமும், தேசியமும், ஒருங்கிணைப்பும் என்ற கேள்வி எழுகிறது.
காத்திருப்போம்....காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
அன்புடன்...ச.சங்கர்