இந்த நேரத்தில் இது பற்றி சில கருத்துக்கள்- நம்மகிட்டதான் இதுக்கு பஞ்சமே இல்லயே.
காட்சி -1 நியூ ஜெர்சி, அமெரிக்கா
சமீபத்தில் குழந்தை பெற்ற என் தங்கையை பார்க்க + உதவிக்கு என் அம்மா அமெரிக்கா பயணப் பட்டார்.அச்சரவாக்கம் தாண்டாத அம்மா அமெரிக்கா தனியாக போகிராரே எப்படி சமாளிப்பார் என்று எனக்கு கொஞ்சம் பயம்தான்.ஒரு வழியாக இனிதே போய் சேர்ந்தார்.முதல் தடவையாய் வெளி நாடு போயிருக்கிராரே என்று போனில் அம்மா ..அங்க ஊர், வசதியெல்லாம் எப்படி இருக்கிறது என்று கேட்டேன்.நல்ல வசதியாக இருக்கிறது.டி.வி யில் "மெட்டி ஒலி" யெல்லாம் வருகிறது தெரியுமா என்றார்.அம்மாவின் வயது 65.அமெரிக்காவின் வளர்சி /வசதியே டி.வி யில் "மெட்டி ஒலி"வருவதுவராததை வைத்து எடை போடப் படுவதை நினைத்து நொந்து நூலாகி போனை வைத்தேன்.
காட்சி -2 நியூ டெல்லி, இந்தியா
நல்ல கோடை காலமானதால் இரவு உணவுக்குப் பின் மனைவியுடன் பூங்காவில் சிறிது உலாவப் போவது வழக்கம்.அங்கு சற்றே அறிமுகமான ஒரு தமிழ் மூதாட்டி ஒருவர் இருந்தார்.அருகில் அவர் பேத்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.நாங்கள் பேசிக்கொண்டிருந்த ஐந்து நிமிடத்தில் மூன்று முறை வந்து மணி என்ன, மணி என்ன என்று கேட்டாள்.நான் ஏன் வீட்டில் அப்பா/அம்மா சீக்கிரம் திரும்பி வந்து விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களா எனக் கேட்டேன்.அதற்கு அந்த பாட்டி சீக்கிரம் திரும்பி வர கூடாது என்று அனுப்பினார்கள் என்றார்.ஆச்சரியமாக ஏன் என்றேன். 9 மணிக்கு வீட்டில் இருந்தால் டி.வி போட்டுக் கொண்டு "மெட்டி ஒலி" பார்க்க உட்கார்ந்து விடுகிறாள்.பார்க்க விடா விட்டால் ஒரே அழுகை என்றார்.சின்னக் குழந்தைதானே பார்த்து விட்டு போகட்டுமே என்றேன்.நீங்க வேற வயித்தெறுச்சலை கிளப்பாதீங்க.T.V. முன்னாடி உட்கார்ந்து கொண்டு " என்ன ரவி இன்னக்கி லீலாவ(பெண்டாட்டிய) அடிக்கலையா"என்று கேட்கிறாள் என்று தலையில் அடித்துக் கொண்டார்.பேத்தியின் வயது 4. நொந்து நூலாகி நடையைக் கட்டினேன்.
காட்சி --3 சிங்காரச் சென்னை , தமிழ் நாடு
ரொம்ப நாள் கழித்து சென்னை போயிருந்தேன்.நீண்ட நாளுக்குப் பிறகு நெருங்கிய பள்ளித் தோழன் ஒருவனை சந்தித்தேன்.பள்ளி நாட்களில் ஈருடல் ஓருயிர் போல திரிந்தோம்.பிறகு 15 வருடம் கழித்து இப்போதுதான் சந்திக்கிறோம்.கூட இருந்த மனைவியைஅறிமுகப் படுத்தினார்.பிறகு இளமைக் கால நினைவுகளில் மூழ்கினோம்.நண்பனின் மனைவி அவர் காதில் ஏதோ கிசு கிசுத்தார்.அவரும் தலையாட்டிய படியே என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்.கொஞ்ச நேரத்திற்க்கு பிறகு கடிகாரத்தை பார்த்து விட்டு ஒரு மாதிரியாக நெளிந்தார்.என்ன ஏதாவது அவசர வேலையா என்றார்.இல்ல 9 மணிக்கு TV யில் "மெட்டி ஒலி" வரும்.என் பெண்டாட்டிக்கு அதை கண்டிப்பாய் பார்த்தாக வேண்டும் என்றார்.நண்பனின் மனைவியின் வயது சுமார் 26.நொந்து நூலாகி திரும்பினேன்.
பி.கு : அலுவலகத்திலிருந்து லேட்டாக திரும்பிய ஒரு நாள் வீட்டு ஹாலில் அமர்ந்து காலணிகளை கழட்டிக் கொண்டிருந்த போதுTV யில் "மெட்டி ஒலி" ஓடிக் கொண்டிருந்தது.அனிச்சையாக கண் TV யை பார்க்க இரண்டு வயசானவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
muthiyavar 1 :"அடேடே வாங்க சம்பந்தி"
muthiyavar 2 "என்ன சம்பந்தி எப்படியிருக்கீங்க"
muthiyavar 1: "நல்லா இருக்கேன் சம்பந்தி. நீங்க எப்படி சம்பந்தி இருக்கீங்க?
muthiyavar 2: எனக்கென்ன சம்பந்தி. நானும் நல்லா இருக்கேன். அப்புறம் சம்பந்தி என் பொண்ணு எப்படி சம்பந்தி இருக்கா?
muthiyavar 1: அவளுக்கென்ன சம்பந்தி.ராணி மாதிரி இருக்கா சம்பந்தி. அப்புறம் என்ன சம்பந்தி இந்தப் பக்கம் திடீர்னு?
muthiyavar 2: அது ஒண்ணுமில்லை சம்பந்தி,பெரிய சம்பந்திய பாக்கப் போனேன் சம்பந்தி அப்படியே ஒங்க நியாபகம் வந்தது சம்பந்தி. அதுனால சின்ன சம்பந்தியையும் பாத்துட்டு போகலாமுன்னுட்டு வந்தேன் சம்பந்தி.
muthiyavar 1.அப்பிடியா சம்பந்தி, ரொம்ப சந்தோஷம் சம்பந்தி.
இத்துடன் TV யில் விளம்பர இடைவேளை ஆரம்பித்து விட்டார்கள். நான் கழட்டிய என் ஷ¥வாலேயே தலையில் அடித்துக் கொண்டு ஹாலை விட்டு வெளியே ஓடி விட்டேன்.
அன்புடன் ....ச.சங்கர்
-------------------------------------------------------------------------------------------------------------