Saturday, April 12, 2008

மஹாகவி பாரதி - யார் ?-----பதிவு 2

பாரதியார் பற்றிய முதல் பதிவின் சுட்டி இங்கே

அதன் தொடர்ச்சியாகவும் அல்லது தனிப் பதிவாகவும் வாசிக்கலாம்.

பொருளுதவி வேண்டி சீட்டுக்கவி

பதினைந்தே வயது நிரம்பிய பாரதியார் திருநெல்வேலியில் ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்த காலம்.எப்படியோ கஷ்டப்பட்டு அவரை திருநெல்வேலிக்கு படிக்க அனுப்பி விட்டார் அவருடைய தந்தை.ஆனால் பணம் அனுப்ப சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.எட்டையபுரத்தின் ஜமின்தாரை நேரில் சந்தித்து பணம் கேட்க தயங்கியிருக்கிறார்.ஏனெனில் அவர் நடத்திய எட்டையபுரம் ஜின்னிங் ஃபாக்டரியில் நஷ்டம் காரணமாக ஜமீந்தார் பங்குதாரராக போட்ட பணத்தை இழக்க நேரிட்டதே.அதனால் பாரதியே தன் கவித்திறமையை வெளிப்படுத்தி பொருளுதவி வேண்டும் விண்ணப்பத்தை சீட்டுக் கவியாக எழுதி ஜமிந்தாரிடம் அனுப்பி வைத்தார்.

விண்ணப்பப் பாடலில் கூட தமிழ் மேல் அவர் கொண்டிருந்த பற்று வெளிப்பட்டது.ஆதரிப்பில்லாததால் தமிழ் மொழி நலிவுருமாறு இருந்த நிலையையும் ஆங்கிலம் படித்தால்தான் வேலைவாய்ப்பு என்று இருந்த நிலையை

இன்னமு தினுஞ்சுவை யெய்வுறீஇ யமைந்த
செந்தமிழ்த் திருமொழி சிறிதுமா தரிப்பவர்
இன்மையி னிந்நா ளினிதுகற் பவர்க்கு
நன்மை பயவாது நலிந்திட மற்றைப்
புன்மொழி பலவும் பொலிவுற லாயின


என்று அழகாக கவிதையில் குறிப்பிடுகிறார்.

தனக்கு ஆங்கிலம் கற்க விருப்பமில்லை என்றாலும் , தந்தையார் வற்புறுத்துவதன் பேரில் கற்க வேண்டியிருப்பதையும் , தமிழ் மட்டுமே கற்றால் வேலை கிட்டுமோ என்ற ஐயப் பாட்டையும் அப்படியே விருப்பமின்றி கற்க முற்பட்டபோதும் பொருளிலாதாற்க்கு கல்வி இல்லை என்று "அன்றும்" இருந்த நிலையையும் குறிப்பிடுகின்றார்.


....... ........ உற்றவென் தந்தையார்
என்னையும் புறமொழி கற்கவென் றியம்புவர்.
என்னையான் செய்குவ தின்றமிழ் கற்பினோ
பின்னை யொருவரும் பேணா ராதலிற்
கன்னயா னம்மொழி கற்கத் துணிந்தனன்

எனினும்

கைப்பொரு ளற்றான் கற்ப தெவ்வகை?
பொருளா னன்றிக் கல்வியும் வரவில ;
கல்வியா னன்றிப் பொருளும் வரவில.

இது பாரதியால் எழுதப்பட்டு 100 ஆண்டுகள் முடிந்து விட்டது ( 1897-ல் எழுதியது) . இன்னும் நமது நாட்டில் அன்னிய மொழியின் தாக்கம் மற்றும் நல்ல கல்வி பெற அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை போன்றவற்றில் நிலைமை மேலும் மோசமாகி இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது :(

என்ன சொல்கிறீர்கள்?

இந்த சீட்டுக் கவி(தை)யைப் பொருத்தவரை இதுவே பாரதியார் எழுதிய முதல் பாடல் என்று கொள்ளத்தகும்.

மீண்டும் சந்திப்போம் ... பாரதியார் பற்றிய இன்னொரு சுவையான தகவலுடன்

அன்புடன் ...ச.சங்கர்

6 comments:

ச.சங்கர் said...

மஹா கவி பாரதிக்கு வந்தனம்.

jeevagv said...

இரண்டாவது பகுதியும் நன்றாக வந்திருக்கிறது, வாழ்த்துக்கள்!

ச.சங்கர் said...

பாராட்டுக்கு நன்றி ஜீவா.

குமரன் (Kumaran) said...

சங்கர். இந்த வரிகள் பாரதியார் எழுதிய சுயசரிதை என்னும் பாடலில் வருபவையா எட்டயபுரத்தரசருக்கு எழுதிய சீட்டுக்கவியில் வருபவையா? அரசருக்கு எழுதிய சீட்டுக்கவிகள் என்று வேறு ஒரு கவிதையைப் படித்ததாக நினைவு.

ச.சங்கர் said...
This comment has been removed by the author.
ச.சங்கர் said...

குமரன்

இது பாரதியார் 1897 ஆம் ஆண்டு எழுதியது.கிடைத்தவற்றுள் இதுவே முதற்பாடல் என்று கொள்ளத்தகும். இதைப் பாதுகாத்து வைத்திருந்த பாரதியாரின் தம்பி திரு.சி.விசுவனாத ஐயர் இதனை கலமகள் 1974 ஆகஸ்டு மாத இதழில் முதன்முதலாக வெளியிடுவித்தார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இதன் மூலப் பிரதியுல் தலைப்பு இல்லை !!

பின்னாளில் எட்டைய்யபுரம் மன்னருக்கு/மன்னர் மீது இரண்டு சீட்டுக் கவிகள் எழுதிய காலம் 1919. அந்தக் கவிதைகளையும் பின்னொரு சமயத்தில் குறிப்பிடுவேன் ஒரு சுவையான சம்பவத்துடன்:) நீங்கள் சொல்வது போல் பாரதியார் சீட்டுக் கவிதைகள் என்றாலே 1919 ல் எழுதிய இந்த இரண்டும் தான் குறிப்பிடப்படும்.