Tuesday, December 19, 2006

அம்மா என்றால் அன்பா ?

இந்தப் பதிவு ஜெ பற்றி என்று நினைத்து வந்திருந்தால் ...sorry you have come to a wrong place :)))


பணமா .... பாசமா
....



இன்று காலையில் அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பும் போது தொலைக்காட்சியில் தென்கச்சி சுவாமிநாதன் தாயன்பு பற்றி விலாவாரியாக விளக்கிக் கொண்டிருந்தார்.அதில் அவர் உண்மை சம்பவம் என்று சொன்ன ஒரு நிகழ்சி பின்வருமாறு


""ஒரு பெரிய அதிகாரியாக இருப்பவர் தனது வயதான அன்னையை சந்திக்க வந்து ஒரு ஐந்து நிமிடம் பேசி விட்டு பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டு கிளம்பினாராம்.அப்போது அந்த அம்மா அந்த அதிகாரி மகனைப் பார்த்து இந்தப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்ததற்குப் பதில் இன்னும் என்னுடன் அரை மணி நேரம் அதிகம் செலவழித்தால் நான் அதிகம் சந்தோஷப் பட்டிருப்பேன்..வயசான காலத்தில்... என்று சொன்னாளாம்""



இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு இது கொஞ்சம் நாடகத்தனமாக பட்டது.இந்த மெட்டிரியலிஸ்டிக் உலகில் இது போல சொன்ன தாய் பணத்தேவை இல்லாத தன்னிறைவடைந்த வசதி படைத்த அம்மாவாக இருக்கும் என்று தோன்றியது.இதே சோத்துக்கே கஷ்டப்படும் அம்மாவாக இருந்தாலும் உளமார இப்படியே சொல்லியிருப்பாரா ? அல்லது செலவழிச்சு வந்ததுக்கு பதிலா ஒரு 200 ரூபாய் மணி ஆர்டர் பண்ணியிருந்தால் இந்த மாத செலவுக்கு ஆகியிருக்கும் என practical -ஆக சொல்லியிருப்பாரா? அப்படி சொன்னாலும் தப்பில்லை என்பது என் அபிப்ராயம்.


எனது அனுபவத்திலிருந்து என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

நீங்க என்ன நினைக்கிறீங்க ?


அன்புடன்...ச.சங்கர்

Sunday, December 17, 2006

முல்லை பெரியார்- நிரந்தர தீர்வு



முல்லை பெரியார் பற்றி என் முந்தைய பதிவு http://ssankar.blogspot.com/2006/10/blog-post.html


அந்த பதிவிட்ட காலத்திற்கு பிறகு இரு மாநில முதல்வர்களும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு வார்த்தை??!! நடத்தி அது எதிர்பார்த்த மாதிரியே தோல்வியில் முடிந்து , பின் face saving measure ஆக அமைச்சர்கள் மட்டப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற முடிவுடன் முடிந்து...ஆயிற்று.... நாளை சம்பந்தப் பட்ட இரு மாநில அமைச்சர்களும் பொறியாளர்கள் சகிதம் மத்திய அமைச்சர் முன்னிலையில் பேச உள்ளார்கள்.இந்தப் பேச்சு வார்த்தையிலும் பெரிதாக பயனுள்ள எந்த முடிவும் எட்டக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக நான் நம்பவில்லை.


இதன் நடுவில்...பேச்சுவார்த்தையின் போது தமிழக முதல்வர் ஆற்றிய உரையின் பகுதி முதன்மை செய்தித்தாள்களில் அரசு விளம்பரமாக வர , அடுத்த வாரத்தில் கேரள முதல்வரின் உரை அதே மாதிரி விளம்பரமாக வந்தது.அதில் கேரள முதலமைச்சர் அணை உடைந்து விடும் அபாயம் பற்றி பயமுறுத்தியிருந்தார்.இதல்லாமல் அணை உடைவது போல் க்ராபிக்ஸ் வகை படங்கள் கேரளாவில் இடுக்கி பகுதியில் ஒளிபரப்பப்பட்டு """மாஸ் சைக்கிக்கை""" தமிழகத்துக்கு எதிராக தூண்டி விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.இதனை தமிழக முதல்வர் மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் கண்டித்துள்ளனர்.இந்தக் கால கட்டத்தி எந்தக் கலை,இலக்கிய, அரசியல் கூட்டத்திலும் தமிழக முதல்வரிடம் கேட்கப்படும் அல்லது அவர் பேசும் ஒரு விஷயமாகவே முல்லைப்பெரியார் அணை விவகாரம் மாறிவிட்டது.

அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் தோல்வியென்றால் அடுத்த கட்டமாக உச்சநீதி மன்றத்தை நாடப் போவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.ஆனால் கேரள அரசு ஏற்கனவே கொடுக்கப் பட்ட உச்ச நீதி மன்ற தீர்ப்பை எள்ளளவேனும் கூட மதிக்கவில்லை என்பதையும் எக்காரணத்தை கொண்டும் அணை நீர்மட்டத்தை உயர்த்த மாட்டோம் என அறிக்கை விடுவதையும்,புது அணை கட்டலாம் என போகாத ஊருக்கு வழி தேடுவதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

பின் இந்த பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?

போன வாரம் ஆனந்த விகடனில் எழுத்தாளர்.சுஜாதா அவர்கள் குறிப்பிட்டிருந்ததும்,நேற்றைய தினமலரில் முன்னாள் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முக சுந்தரம் என்பவர் கூறியுள்ள கருத்துக்கள் சுவாரஸ்யமானதும் மற்றும் தமிழகத்துக்கு பயனளிக்கக் கூடிய.... அதே நேரத்தில் நடைமுறைப் படுத்தக் கூடியதாகவும் படுகிறது.

திரு.சுஜாதா எழுதுகிறார்:-
பிரச்சனையின் உண்மையான காரணம் நதியோர நகரமயமாக்குதலும்,அதனால் வெட்டப்பட்ட மரங்களும்,அதனால் மழை குறைந்த மைக்ரோ எகனாமிக் மாறுதல்களும்தான் முக்கிய காரணம்.தண்ணீர் தமிழ் நாட்டுக்கு திருப்பி விடப்படுவதால் 1960-ல் அவர்கள் 50 கி.மி.கீழே கட்டிய இடுக்கி ஹைட்ரோ எலெக்ட்ரிக் திட்டத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.(இந்த வருஷம் எல்லோருக்குமே ஏராளமாய் தண்ணீர் கிடைத்தது, பருவ மழை தவறிப் போனால்தான் பிரச்சினை)இதுதான் மெய்ப்பொருள் .25 வருடமாக நீர் மட்டத்தை உயர்த்தாததால் இதுவரை தமிழ் நாட்டில் கணக்கிடப்பட்ட விவசாய நஷ்டம் 400000000000/- ரூபாய்கள். ( நாற்பதாயிரம் கோடி).
அரிசி தருகிறோம் நீர் மட்டத்தை உயர்த்த அனுமதியுங்கள்,உங்கள் பக்கம் வெள்ளம் வராது, இடுக்கிப் பிடிப்புக்கு குறைந்த பட்சம் நீர் தருகிறோம் அல்லது மின்சாரம் தருகிறோம் , உத்தரவாதம் என்று பேப்பர் சத்தியங்கள் ஏதாவது செய்து ஓரொரு அடியாக உயர்த்த வேண்டும்.

திரு.சண்முக சுந்தரம் சொல்கிறார்
கேரளாவில் 1979ம் ஆண்டு இடுக்கி நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்படும் வரை முல்லை பெரியார் பிரச்சினை எழுப்பப்படவில்லை.தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அந்நீர்த்தேக்கம் நிரம்பாததற்க்கு பெரியாறு அணைதான் காரணம் என கேரள மின்வாரிய தலைமை பொறியாளர் பரமேஸ்வரன் நாயர் பிரச்சினை கிளப்பினார்.அன்று முதல் பெரியார் அணையை கைப்பற்றுவதில் கேரள அரசு தீவிரம் காட்டியது.அதன் விளைவாக கேரள அரசு மூன்று ஆண்டுகள் தேடி கண்டுபிடித்த காரணம்தான் பெறியார் அணை பலவீனமாக உள்ளது என்ற வாதம்.கேரளாவில் தொடரும் மின்வெட்டுக்கு பெரியாறு அணைதான் காரணம் என அம்மாநில மக்கள் மத்தியில் அனைத்து கட்சியினரும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிரச்சினையை ஊதி பெரிதாக்கி விட்டனர்.,......அவர் மேலும் சொல்கிறார்.....இப்பிரச்சினைக்கு தீர்வு மிக எளிது.
லோயர் கேம்ப்பில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு 350 மில்லியன் யூனிட்டுகள் வரை கிலோவாட்டிற்கு ரூ.12 வீதம் அதற்கு மேல் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ.18 என பெற்றுக்கொண்டு கேரள அரசிற்கு தமிழக அரசு மின்சாரம் அளித்து வருகிறது.இலவசமாக கொடுக்கும் தண்ணீரை மின்சாரமாக மாற்றி தமிழக அரசு அதிக விலைக்கு விற்பதாக கேரள அமைச்சர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.இவ்விஷயத்தில் தமிழக அரசு பிரச்சினையை உன்னிப்பாக அணுகினால் தீர்வு காணமுடியும்.தமிழகத்தின் ஆண்டு மின் உற்பத்தி திறன் 10,500 மெகா வாட் எனவும் லோயர் கேப் மின் உற்பத்தி நிலையத்தில் பெரியாறு அணையில் 152 அடி கொள்ளளவாக தண்ணீர் இருந்தால் 140 மெகா வாட் எனவும் அதற்கு குறைவாக 136 அடி கொள்ளளவாக இருப்பதால் 100 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாவதாக தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் 100-ல் ஒரு மடங்கு கூட இல்லாத இந்த மின் உற்பத்தி இல்லாவிட்டால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அமைச்சர் உறுதியாக தெரிவித்துள்ளார்.எனவே லோயர் கேம்ப்பில் உற்பத்தியாகும் மின்சாரத்தை இலவசமாக கேரளத்திற்கு கொடுத்துவிட்டால் பெரியாறு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்து விடும்.தமிழக முதல்வர் இதய பூர்வமாக இந்த அடிப்படையில் அணுகினால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் தெரிவிக்கிறார்.

இந்த இருவரும் முன்வைத்துள்ளதின் சாராம்சத்தில் தீர்வு காண விழைந்தால் தீர்வு சாத்தியம்தான் எனப் படுகிறது.

1. நாம் தரும் "இலவசத்தை" மறுக்க முடியாத அரசியல் அழுத்ததில் கேரளா ஒத்துக் கொள்ளலாம்...அப்படி ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் அரசியல் ஆதாயத்துக்காக மக்கள் நலனை மறுக்கும் மக்கள் விரோத கேரள அரசு என நாமே பறை சாற்றலாம்.

2.தமிழகத்தின் மதிப்பு கேரளாவில் உயரும்..அதனால் நமக்கு எதிரான அவதூறு பிரச்சாரம் செல்லுபடியாகமால் போகக்கூடிய வாய்ப்பு.

3.விட்டுக் கொடுக்க முனைவதால் தார்மீக உரிமை அதனால் ஏற்படும் மனவியல் ரீதியான ஆதாயம் நம் பக்கம் இருக்கும்

4.பிரச்சினையை நாம் தீர்வு முறையில் அணுக முற்படுவதால் மத்திய அரசும்,நீதி மன்றங்களும் நம் பக்க நிலை எடுக்கக்கூடிய சாத்தியக் கூறு.

5. எல்லாவற்றிற்கும் மேலாக இதனடிப்படையில் தீர்வென்பதேற்பட்டால் இது இந்தியா போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் நல்ல முன்னுதாரணமாக அமையும்.

இதை செய்து முடிக்கும் எவரும் காலத்தால் அழியாத சரித்திரப் புகழ் பெறுவர் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

(முயற்சியாவது) செய்வார்களா ???!!!...காத்திருப்போம்...காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

அன்புடன்...ச.சங்கர்


Posted by Picasa

வலைப்பதிவர்கள் சந்திப்பு- சுடச் சுட...



இப்பதான் சென்னை வலைப்பதிவர் latest சந்திப்புக்கு (17-12-06) போயிட்டு வந்தேன்.

மத்த (மூத்த) வலைஞர்கள் அது பத்தி கண்டிப்பா எழுதுவாங்க.அதுனால நான் அது பத்தி அதிகம் எழுதப் போவதில்லை.

அங்கு பேசிக் கொண்டிருந்த போது கேள்விப்பட்ட ஒரு விஷயம் கொஞ்சம் "திடுக்" ரகம்.

பொதுவாக இலங்கை பிரச்சினை பற்றி பேச்சும் பிறகு இங்குள்ள அகதிகள் முகாம்களில் வாழும் "அவல" நிலை பற்றியும் பேச்சு வந்தது. அப்போது எனக்கு அறியக்கிடைத்த ஒரு விஷயம்...பொதுவாக நாம் அனாதை ஆசிரமங்களுக்கோ அல்லது இன்ன பிற சேவை நிருவனங்களுக்கோ உதவி செய்வது போல் முகாம்களில் கஷ்டப்படும் அகதிகளுக்கு உதவுவது என்பது அவ்வளவு சுலபமில்லை...ஏன், எதற்கு , எங்கிருந்து உதவி, இதற்கு பணம் எங்கிருந்து வந்தது மாதிரியான ஆயிரத்தெட்டு "சிவப்பு நாடா" கேள்விகள் மற்றும் போலிஸ் பிரச்சனைகளுண்டு என இது பற்றி கொஞ்சம் அனுபவமுள்ள ஓரிரு வலைப்பதிவர்கள் சொன்னார்கள்..அப்படியனால் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி வந்த நாட்டிலும் கஷ்டப் படும் இந்த சனங்களுக்கு "அரசியல் அல்லது அமைப்பு ரீதியாக இல்லாமல்" சக மனிதன், பொது சனம் என்கின்ற ரீதியில் " நேரடியாக " உதவ வழியே இல்லையா?

இதில் நான் அரசாங்க உதவிகள் அல்லது பிற அமைப்பு ரீதியான உதவிகளை குறை சொல்லவில்லை. அல்லது அகதிகளுக்காக மற்றவர் செய்ய விழையும் உதவிகளுள்ள கட்டுப்பாடுகளையும் தவறென்று சொல்லவில்லை..என்ன இருந்தாலும் அடுத்த நாட்டு குடியுரிமை பெற்ற மக்கள் என்பதால் அவர்களுக்கு நேரடியாக உதவுவதில் கட்டுப்பாடுகள் இருக்கும்தான் என்பது புரிகிறது.

ஆனால் இலங்கையில் அமைதிப் பங்கம் ஏற்பட்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் அகதிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் இது போன்ற "காலத்தே செய்த உதவி " மிக மிக அவசியம் என்று நான் கருதுகிறேன்.

தெரிந்தவர்கள் யாராவது இது பற்றி எழுதலாமே.

கூட்டு முயற்சியாக உதவி செய்ய ஆசை.(உணவு, உடை, குழந்தைகள் படிப்பு செலவை ஏற்பது என்பது மாதிரியாக).ஆலோசனைகள் மற்றும் அனுபவங்களை எழுதுங்களேன்.

அன்புடன்...ச.சங்கர்