Sunday, September 12, 2010

பாஸ் (எ)பாஸ்கரன்--திரைப்பட விமர்சனம்





நீண்ட இடைவெளிக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படியான ஒரு படம். பெற்ற பையனையோ, பெண்ணையோ கூட்டிக் கொண்டு போய் விட்டு,அப்புறம் தியேட்டரில் சங்கடத்தில் நெளியும் படியான காட்சிகள் எதுவும் இல்லை.சண்டை, வன்முறை,கற்பழிப்பு மற்றும் இன்று மெகா சீரியலில் கூட கட்டாயமாக காட்டப்படும் பெண்ணை அடித்தல்/துன்புறுத்துதல் போன்ற எந்த ஒரு காட்சியும் இல்லாத அக் மார்க் நகைச்சுவைப் படம் எடுத்திருக்கும் இயக்குனர் ராஜேஷை எத்தனை பாராட்டினாலும் தகும்.

சின்ன நூலிழைக் கதையை வைத்துக் கொண்டு நகைச்சுவை வசனத் தோரணம் கட்டியிருக்கிறார் .படம் நெடுக மானாவாரியாக ரசிக்கும் படியான நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.நகைச்சுவை என்ற பெயரில் விரசத்தையோ,இரட்டை அர்த்த வசனங்களையோ புகுத்தாமல் இருந்ததற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.




நாயகன் ஆர்யா என்றாலும் நகைச்சுவைப் படம் என்பதால் சந்தானம்தான் முதன்மை நட்சத்திரமாக கலக்குகிறார்.அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஏற்று,ஈடு கொடுத்து நடித்திருக்கும் ஆர்யாவுக்குப் பாராட்டுக்கள்."நான் என்ன வேலை வெட்டியில்லாத டுபாக்கூரா" என ஆர்யா கேட்க " பின்ன என்ன டோகோமா கம்பனி ஓனாரா " என அசராமல் சந்தானம் திரும்பிக் கேட்பது, "கைல பணம் இல்லைடா" என்று ஆர்யா சொல்ல " பீரோல வச்சிருக்கியா?" என்று சந்தானம் திருப்பிப் போட்டுத் தாக்கும் காட்சிகள் போல பலப் பல நகைச்சுவைக் காட்சிகள் தியேட்டரை சிரிப்பலையில் அதிர வைக்கின்றன.ஆர்யாவும்,சந்தானமும் டைமிங்காக "நண்பன்டா" என்று சொல்லிக் கொள்ளும் இடங்களில் தியேட்டர் கல கலக்கிறது.

நயன்தாரா மெலிந்து முகம் இன்னும் பெரிதாகத் தெரிகிறது பார்க்க ஒரு மாதிரியாக இருக்கிறார்.ஆனாலும் ஆர்யாவைப் பார்த்து நக்கலாக செய்யும் ஸ்மைலிலும் நடிப்பினாலும் கொஞ்சமாக ஸ்கோர் செய்கிறார்.



அண்ணனாக வரும் சுப்பு ( பஞ்சு அருணாசலத்தின் மகன்), ஆரியாவின் அரியர்ஸ் நண்பனாக வரும் ஆறுமுகம், டுடோரியல் காலேஜில் சேரும் ரெளடியின் மகன் என அத்தனை பேரும் தங்கள் பாத்திரமறிந்து பங்களிப்பு செய்திருக்கிரார்கள்.


ஆர்யா பணம் சம்பாதிக்கிறேன் என வீட்டை விட்டுப் புறப்பட்டதும், வெட்டியாக சுற்றித் திரிந்த ஆர்யா சீரியசாக மாறி உழைக்க ஆரம்பித்து விட்டர் என்றோ அல்லது ஒரே பாட்டில் அவரை "அண்ணாமலை" ரஜினி மாதிரியோ இல்லை "சூரிய வம்சம்" சரத்குமார் மாதிரியோ பணக்காரனாக மாற்றிக் காட்டாமல் அதெல்லாம் படத்தில் மட்டும்தான் முடியும் என்று அந்தப் படங்களையே கிண்டல் செய்திருப்பதிலும் டைரக்டரின் டச் பளிச்சிடுகிறது.

கண் பார்வையில்லாத பெண் பாடம் நடத்தும் போது , அனைத்து மாணவர்களும் வகுப்பை விட்டு வெளியேர, அது தெரியாமல் அந்தப் பெண் பாடம் நடத்திக் கொண்டே போக, அதே வகுப்பில் படிப்பதற்காக சேர்ந்து எப்போதும் சாப்பிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் ரெளடியின் மகன் ஏதோ ஒரு கணத்தில் நேர்ந்த நெகிழ்ச்சியில், கத்தியைக் காட்டி அத்தனை பையன்களையும் வகுப்புக்குள் அனுப்புவது டச்சிங்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் முதல் இரண்டு பாடல்களும் பாஸ்..மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை.கும்பகோணத்திலேயே சில குறிப்பிட்ட இடங்களையே படம் சுற்றி வருவதால் வெளிநாட்டில் எடுத்த பாடல் காட்சிகள் தவிர ஒளிப் பதிவிற்கு பெரிய ஸ்கோப் ஒன்றும் இல்லை.



முதல் பாதியில் விறு விறு என்று செல்லும் படம் இடை வேளைக்குப் பிறகு கொஞ்சம் தத்தளிக்கிறது.இருந்தாலும் நகைச்சுவை பார்வையாளர்களை இறுதி வரை உட்கார வைக்கிறது. குடும்பத்துடன் சென்று,பார்த்து,மூன்று மணி நேரம் கவலையில்லாமல் சிரித்து மகிழ்ந்து வர விருப்பமிருந்தால் கண்டிப்பாக போகவேண்டிய படம்.

பாஸ் (எ) பாஸ்கர் வெறும் பாஸ் மட்டுமல்ல...டிஸ்டிங்ஷனும் கூட.

அன்புடன்...ச.சங்கர்