Wednesday, June 09, 2010

சிலப்பதிகாரம் -(நாவல் வடிவில்) By கே ஜி ஜவர்லால் - எனது பார்வையில்

சிலப்பதிகாரம் by கே ஜி ஜவர்லால்----- தமிழ் காப்பியத்தின் நாவல் வடிவம்.

என்னைப் பொருத்த வரை தமிழ் காப்பியங்களை நாவலாக்கும் முயற்சியில் எழுதுவதில் கஷ்டமானது மிகவும் சிம்பிளான சிலப்பதிகாரம்தான். :)

சின்னக் குழந்தையாக பாட்டி கதையாகக் கேட்டு 'தசரத ராஜாவுக்கு ராமர்,பரதன்,லச்சுமனன்,சத்ருக்கனன் அப்படீன்னு நாலு பிள்ளைங்க.ராமர் வில்லை படார்னு ஒடைச்சி சீதைய கல்யாணம் பண்ணிக்கிட்டார்.ராவணன் சீதையைத் தூக்கிட்டு பறந்து போயிட்டான்.ராமர் சண்டை போட்டு ராவணை ஜெயிச்சு சீதையக் கூட்டிக்கிட்டு வந்தார் " என்று மழலை மாறாமல் ராமாயணத்தை கதை சொல்ல ஆரம்பிக்கிறோமோ அன்றிலிருந்து ராமாயணம் நம்முடன் பயணப்பட ஆரப்பித்து விடுகிறது- சினிமாவாக, டி வி சீரியலாக ,நாடகமாக ,பிரசங்கமாக,பட்டிமன்றமாக, புத்தகமாக,பாட்டாக இன்னும் எத்தனையோ வழிகளில்.

அதே போல "கண்ணகி..கண்ணுல கண்ணீரோட.. தலை விரி கோலமா.. கையில சிலம்போட.." என்று சொல்லக் கேட்ட கதை வடிவிலும்,
"காவலனே அநியாயமாக வஞ்சிக்கப்பட்ட ஒரு அபலை நீதி கேட்டு வந்திருக்கிறேன் என்று உன் மன்னனிடம் போய் சொல்" என்று பத்தாம் வகுப்பில் நல்லா தமிழ் பேசும் பார்க்க நல்லாவும் இருக்கும் ஃபிகரை வைத்து ஸ்கூலில் போடும் ஆண்டுவிழா ட்ராமா மூலமாகவும்.,
தமிழ் பரிட்சையில் "பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன்" என்று மனப்பாடம் செய்து எழுதி மார்க் வாங்கிய போதும்
அப்புறம் இன்னும் கொஞ்சம் பெரியவனாக ஆன பின் "கற்பில் சிறந்தவள் கண்ணகியா, சீதையா" போன்ற பட்டிமன்றங்கள் மூலமும்
ஏதோ ஒரு ராத்திரியில் தூக்கம் வராமல் ஆக்சிடென்டலாக பொதிகை சானலில் எஸ் எஸ் ஆர் விஜயகுமாரியைப் பார்த்து " மாசறு பொன்னே , வலம் புரி முத்தே" என்று பாடும் படம் மூலமாகவும் ஏதோ ஒரு விதத்தில் சிலப்பதிகாரம் தமிழர் எல்லோருக்கும் அறிமுகம் ஆகியே இருக்கிறது.

இப்படி ஏற்கனவே அறிமுகமான ஒரு கதையை மீண்டும் வாங்கிப் படிக்க வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் வகையில் எழுத வேண்டும் என்பதனால்தான் நாவல் வடிவில் எழுதுவதில் கஷ்டமானது சிலப்பதிகாரம் என்று மேலே சொன்னேன். இதைக் கவனமாகக் கையாண்டு ஜவ(ஹ)ர் சிலப்பதிகார நாவல் வடிவை நன்றாகவே எழுதியிருக்கிறார்.பாராட்டுக்கள்

கதா பாத்திர அறிமுகத்திலேயே அந்தப் பாத்திரங்கள் பற்றி நமக்குத் தெரிந்ததும் தெரியாததுமான சில விடயங்களை இட்டு அது ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி அறிமுகமாகச் செய்து நாவலினுள் புகும் ஆர்வத்திற்கு அழகாகத் தூண்டில் போட்டிருப்பதற்கு ...சபாஷ்.
ஆனால் இப்படி பாத்திர அறிமுகத்தில் வீசிய அனைத்துக் கேள்விகளுக்கும் நாவலில் அழகாக பதிலளித்திருந்தாலும் "இளங்கோ அடிகள் " கதையில் தோன்றும் காட்சி எது ? என்று கேட்டுவிட்டு அதற்கு அவர் நாவலில் பதில் சொல்லியிருப்பதாக நினைவில்லை.
ஒவ்வொரு பகுதி முடிவிலிம் ஒரு சஸ்பென்ஸ் வைத்து தொடரும் போடும் சாண்டில்யனின் ஸ்டைலில் பகுதிகள் முடிவை அமைத்திருப்பது நன்றாகவே இருக்கிறது.

கதையோட்டத்தினைக் கெடுக்காதவாறு தத்துவ விசாரங்களை அங்கங்கே அள்ளித் தெளித்துள்ள விதம் அருமை.படிக்கவும் நன்றாக இருக்கிறது.கவுந்தி அடிகள் கோவலனுக்கு சொல்லும் அறிவுரைகள் யதார்த்தம்.

நிறைய காட்சியமைப்பு வர்ணனைகள் சிறப்பாகவும் நயமாகவும் இருந்தாலும் ( குறிப்பாக கோவலன்,கண்ணகி முதலிரவு) சில இடங்களில் நேரடி மொழி பெயர்ப்பு மாதிரி அப்படியே பதவுரை எழுதிருப்பது தவிர்த்திருக்கலாம்.
உதாரணம் "முரசுஇயம்பின, முருகுஅதிர்ந்தன, முறைஎழுந்தன பணிலம், வெண்குடை அரசுஎழுந்ததொர் படிஎழுந்தன, அகலுள்மங்கல அணிஎழுந்தது. " என்பதனை அப்படியே "சங்கும் , முரசும், மத்தளமும் முழங்கியது. வெண்குடைகள் சூழ்ந்து வந்தன.மன்னன் உலா வருவது போல மங்கல நாண்(தாலி) நகரெங்கும் ஊர்வலமாகச் சென்றது.நிறைவாக மண்டபத்தை அடைந்தது." என்று கோனார் தமிழ் உரை எழுதுவதை தவிர்த்து அவர் நடையில் எழுதியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும் என்பது என் எண்ணம்.

அதே போல கணிகையர் குலத்தில் பிறந்திருந்தாலும் மாதவி , கோவலனைத் தவிர வேரொருவனரை மனதாலும் நினையாமல் வாழ்ந்தவள் என்று படித்திருக்கிறேன் ஆனால் "போதாக்குறைக்கு ஆண்கள் அவளை ரசித்த போதெல்லாம் மாதவி உதட்டில் மெல்லிய புன்னகை அரும்பியது " (இது கோவலனுடன் அவள் வாழ்ந்த பிறகு நடக்கிறது)என்பது போன்ற சில , படித்ததற்கு முரணாக இருப்பது போல் தோன்றுகிறது.

நான் முன்னமே சொன்னது போல் தெரிந்த கதை என்பதால் இந்த நாவல் அதிகம் விமர்சனத்துக்குள்ளாகும் சாத்தியம் இருக்கிறது.

இது ஜவ(ஹ)ரின் முதல் முயற்சியா தெரியவில்லை.If so, very very good effort.

எது எப்படி இருந்தாலும் நாவல் வடிவாக அனைவரும் படிக்கும் படியாக சிலப்பதிகாரம் ஒரு "சிறப்பதிகாரமாகவே" வந்திருக்கிறது.

வாழ்த்துக்கள் கே ஜி ஜவர்லால்.

அன்புடன்...ச.சங்கர்

5 comments:

ச.சங்கர் said...

எப்போதும் போல "டெஸ்ட்"தேன்

Sridhar Narayanan said...

// நம்முடன் பயணப்பட ஆரப்பித்து விடுகிறது- சினிமாவாக, டி வி சீரியலாக ,நாடகமாக ,பிரசங்கமாக,பட்டிமன்றமாக, புத்தகமாக,பாட்டாக இன்னும் எத்தனையோ வழிகளில்//

தொடர்ந்து சிலப்பதிகாரத்தின் அனுபவத்தையும் அதே பாணியில் சொல்லிய உத்தியை ரசித்தேன். கலக்கல் விமர்சனம். உன்னிப்பா சிலதை சுட்டிக் காட்டியிருக்கீங்க.

ஜவர்லாலின் சிக்ஸ் சிக்மா பற்றிய பதிவு மிகவும் பிடித்திருந்தது. சிலப்பதிகார நாவலின் வெற்றிக்கு வாழ்த்துகள்.

Jawahar said...

//ஆனால் இப்படி பாத்திர அறிமுகத்தில் வீசிய அனைத்துக் கேள்விகளுக்கும் நாவலில் அழகாக பதிலளித்திருந்தாலும் "இளங்கோ அடிகள் " கதையில் தோன்றும் காட்சி எது ? என்று கேட்டுவிட்டு அதற்கு அவர் நாவலில் பதில் சொல்லியிருப்பதாக நினைவில்லை//

முதல் அத்தியாயத்திலேயே இருக்கு.

காரம்ன்னதும் பயந்துகிட்டே வந்தேன். மிளகு காரம்தான்.... ஜீரணத்துக்கு நல்லது!

உங்கள் ஆலோசனைகள் பயனுள்ளதாகவே உள்ளன. அடுத்த தடவை பயன்படுத்திக்கறேன்.

மாதவியின் புன்னகை என் கற்பனைதான்! எம்.எஸ்.கோபாலகிருஷ்னன் (வயலின்), வீணை சிட்டிபாபு முதலானவர்கள் நாம் ரசிக்கும் போது ஒரு பெருமிதப் புன்னகையை தர்ரதைப் பார்த்திருக்கேன். அதனால உயர்ந்த கலைஞர்கள் அப்படிச் செய்வாங்க என்கிற அண்டர்ஸ்டாண்டிங்கில் எழுதினேன்.

விமர்சனத்திற்கு நன்றி.

http://kgjawarlal.wordpress.com

ச.சங்கர் said...

ஸ்ரீதர் நாராயணன்

///தொடர்ந்து சிலப்பதிகாரத்தின் அனுபவத்தையும் அதே பாணியில் சொல்லிய உத்தியை ரசித்தேன். கலக்கல் விமர்சனம். உன்னிப்பா சிலதை சுட்டிக் காட்டியிருக்கீங்க.///


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ச.சங்கர் said...

ஜவஹர்

//மாதவியின் புன்னகை என் கற்பனைதான்! எம்.எஸ்.கோபாலகிருஷ்னன் (வயலின்), வீணை சிட்டிபாபு முதலானவர்கள் நாம் ரசிக்கும் போது ஒரு பெருமிதப் புன்னகையை தர்ரதைப் பார்த்திருக்கேன். அதனால உயர்ந்த கலைஞர்கள் அப்படிச் செய்வாங்க என்கிற அண்டர்ஸ்டாண்டிங்கில் எழுதினேன்.///

கலையை ரசிப்பதற்கும் ஆளை ரசிப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

எழுத்தாளரின் கற்பனை மூலக் கதை உத்தியை மாற்றிவிடக்கூடாது இல்லையா?

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி