Tuesday, April 08, 2008

மஹாகவி பாரதி - யார் ?-----பதிவு 1

இதில் தொகுக்கப் படும் தகவல்கள் பாரதியார் பற்றி நான் படித்தவைகளை ஒரு குறிப்பாக எனது பதிவில் சேமிப்பதற்கும் அத்தகவல்கள் பற்றி ஏற்கனவே படிக்காதவர்களுக்கு சுவையும் ஆர்வமும் ஊட்டவே.தகவல் பிழை ஏதேனும் இருந்தாலோ அல்லது மேலும் சுவையான சம்பவங்கள் இருந்தாலோ பின்னூட்டத்திலோ அல்லது சுட்டியாகவே குறிப்பிடுங்களேன்.

இளமையில் புலமையின் சான்று

ஒரு சமயம் தமிழில் பண்டித்தியம் பெற்ற திரு . சோணாசலம் பிள்ளை அவர்களது மகன் திரு. காந்திமதி நாத பிள்ளை அவர்கள் தன்னை விட வயதில் இளையவரான பாரதியை மடக்க எண்ணி " பாரதி சின்னப் பயல் " என்ற ஈற்றடியைக் கொடுத்து அதற்கு பாட்டெழுதச் சொன்னாராம்.
உடனே பாரதி சாதுர்யமாய் காந்திமதி நாதப் பிள்ளையே வெட்கும் படி பின் வரும் பாடலை பாடினாராம்.


ஆண்டில் இளையவனென் றந்தோ, அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள்போ லுளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்
என்று பாடி, பிரித்துப் படித்தால் " காந்திமதிநாதனைப் பார்-அதி சின்னப் பயல் " என்று பொருள் வரும்படி பாடினாராம்.

ஆனால் , என்னதான் இருந்தாலும் வயதில் பெரியவரான காந்தி மதி நாதப் பிள்ளையை ஏளனம் செய்வது தவறு என்று, சில வார்த்தைகளையே மாற்றி பாடலை அர்த்தம் அடியோடு மாறிப் போகும் படி பாடினாராம். அந்தப் பாடல் கீழே.

ஆண்டில் இளையவனென் றைய, அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் - மாண்புற்ற
காரதுபோ லுளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்


இந்தப் பாடலை இயற்றும் போது பாரதியாருக்கு 15 அல்லது 16 வயதுதான்!!!!

இதே காந்திமதிநாதப் பிள்ளை பாரதியார் "இளசை ஒருபா வொருபஃது" என்ற பெயரிட்டு எழுதிய 11 பாடல்களடங்கிய பிரபந்தத்திற்கு புகழ்ந்து சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார் பின்வருமாறு

பாலாகற் கண்டா பழம் பொருந்து மின்னமு
தாலாகும் பாகா தமிழுருவா - ஏலாதி
இட்ட சருக்கரையா ஏரிளசைப் பாரதியார்
தொட்ட வொருவொருபஃது
.

சிறு வயதிலேயே பாரதியாருக்கு வாய்க்கப்பெற்றிருந்த புலமைக்கு இது ஒரு சான்று என்றால் மிகையில்லைதானே.

மீண்டும் சந்திப்போம் ... பாரதியார் பற்றிய இன்னொரு சுவையான தகவலுடன்

அன்புடன் ...ச.சங்கர்

5 comments:

ச.சங்கர் said...

மஹா கவிக்கு வந்தனம்.

குமரன் (Kumaran) said...

சங்கர். முதல் பாடலான 'பார் அதி சின்னப்பயல்' பாடலையும் அந்த நிகழ்ச்சியையும் படித்திருக்கிறேன். ஆனால் பாரதியார் அந்தப் பாட்டை மீண்டும் மாற்றி எழுதியதையும் மாற்றி எழுதிய அந்தப் பாடலையும் கற்கண்டு பாடலையும் இன்று தான் படிக்கிறேன். நன்றிகள்.

ச.சங்கர் said...

வாங்க குமரன். நலமா ? நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் உரையாடுகிறோம் :)

இந்தப் பாடலின் முழு வடிவையும் மற்றும் மாற்றி எழுதிய பாடலையும் பற்றி பாரதியாரின் தம்பி திரு. விஸ்வநாதன் அவர்கள் பல்காலும் முயன்று திரட்டி வெளியுட்டுள்ளார் என பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பில் செய்தி காணக் கிடைக்கிறது.நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

Anonymous said...

நல்ல பதிவு

தொடரட்டும்

ச.சங்கர் said...

நன்றி கூடுதுறை

உங்கள் பெயர்க்காரணம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது :)