நந்தினி பதறிப் போய் பின்னால் நகர்ந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்து"அவனை ஏன் இப்படி என் கண் முன்னாலேயே அடிக்கிறீர்கள்?சட்டப்படி அவன்மேல் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதன் படி செய்து தண்டனை கிடைக்கச் செய்தாலே போதுமானது " என்றாள்.
இன்ஸ்பெக்டர் நந்தினியைப் பார்த்து கொஞ்சம் கடுப்பாக " மேடம்...இவனை என்ன கொஞ்சச் சொல்றீங்களா?இந்த நாயெல்லாம் இப்படி அடிச்சாத்தான் திருந்தும்.நீங்க வேணும்னா பக்கத்து அறைல போய் உட்கார்ந்து , நடந்ததை ஒரு கம்ப்ளைன்டா எழுதிக் குடுங்க.நான் இவனை விசாரிச்சுட்டு வந்து ஒங்க புகாரை வச்சு ஒரு எ·ப் ஐ ஆர் போட்டுர்ரேன்.கான்ஸ்டபிள் இவங்களை கூட்டிட்டு போய் ஸ்டேட்மென்ட் வாங்கிக்குங்க " என்றார்.
கான்ஸ்டபிள் என்று விளிக்கப் பட்ட பெண் காவலர் பக்கத்து அறையில் நந்தினியை உட்கார வைத்து மின் விசிறியை போட்டு ஒரு வெள்ளை காகிதத்தை கொடுத்து " இதுல எழுதுங்கம்மா..பேனா இருக்குதா?" என்றாள்.
நந்தினி இருக்கிறது என்பது போல் தலை ஆட்டி விட்டு நடந்ததை யோசிக்க ஆரம்பித்தாள்.
நந்தினி பிரபல சென்னை பத்திரிக்கை ஒன்றில் நிருபர். இன்னும் கல்யாணமாகாத நன்கு படித்த 25 வயது பெண்.
சென்னை மெயிலில் நேற்றிரவு வரும் போது எதிர்பக்க மேல் பெர்தில்தான் அவன் படுத்திருந்தான்.கிட்டத்தட்ட நடு நிசி வேளையில் காலில் ஏதோ பூச்சி ஊர்வது போல் இருக்கவே சட்டென விழிப்பு வந்து பார்க்கையில் அவன் கால் நந்தினியின் கால்களை தடவிக் கொண்டிருந்தது.நந்தினி முழித்துக் கொண்டதைப் பார்த்ததும் சட்டென காலை நகர்த்திக் கொண்டான்.
முதலில் நந்தினிக்கு புரியவில்லை.அவன் தூக்கத்தில் தெரியாமல் கால் பட்டு பின் நகர்த்திக் கொண்டானா இல்லாவிட்டால் வேண்டுமென்றே செய்தானா என்று . நந்தினிக்கு என்ன செய்வது என்றே தோன்றவில்லை.சத்தம் போட்டு ஊரைக் கூட்டி பின் தெரியாமல் கால் பட்டது என நிரூபணமாகி விட்டால் வெறும் அவமானம் மட்டுமே மிஞ்சும்.அல்லாமல் நடந்து முடிந்ததற்காக எப்படி ஊரைக் கூட்டி ஞாயம் கேட்பது, மற்றவர்கள் அதை தவறு என நினைப்பார்களா அல்லது தெரியாமல் கால் பட்டதற்கு படித்த பெண்ணின் மிகையான அலட்டல் என கொள்வார்களா என்று யோசித்து நடந்ததை வெறும் சாதாரண நிகழ்சி போல் எண்ணி மறக்க முயன்றாள்.முடியவில்லை.
படித்த,பத்திரிக்கையில் வேலை பார்க்கும் அடுத்தவரை கேள்விகளால் துளைக்கும் தன் போன்ற பெண்ணிற்கே இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர் கொள்ள துணிச்சல் இல்லையே என வேதனைப் பட்டு தன்மானம் தாழ்ந்து போய் கீழ்த்தரமாக உணர்ந்தாள்.எப்போது விடியும்,சென்னை வரும் என்று எண்ணியவாரே மறுபடி தூங்கிப் போனாள்.
மறுபடி அரை மணி நேரத்தில் யாரோ மார்பில் கை வைப்பது போல் உணரவே தனிச்சியாக "வீல்"என அலறி விட்டாள்.அவளது அலறல் சத்தத்தால் அனைவருவ் விழித்தது,பின் பரிசோதகரும் இரயில்வே போலிசும் அழைக்கப்பட்டு அந்தப் பையன் வலுக்கட்டாயமாக போலிசாரால் அழைத்து செல்லப்பட்டான்.நந்தினி பெண்ணாகவும் தமிழாகவும் இருந்ததால் பொது மக்களின் பச்சாதாபம் வேற்று பாஷைக்காரனாகவும் ஆணாகவும் இருந்த அவனுக்கெதிராக இருந்தது.
ஆனால் அதன் பின் நடந்த நிகழ்சிகள் நந்தினியை அதிர்சியடைய செய்தன.பரிசோதகர் வந்து அந்த பையனை இரயில்வே போலிசார் செமத்தியாக கவனித்து விட்டதாகவும் இனி புகார்,கேஸ் என்று போனால் நந்தினி உட்பட அனைவருக்கும் அனாவசிய நேர விரயமும் தொந்தரவும் எனவே இதை இப்படியே விட்டு விடுமாரும் சொன்னார்.நந்தினியை ஆதரித்த சக பயணிகள் சிலர் கூட அவர் சொல்வது யதார்த்தம் போலவும் நந்தனி அதைக் கேட்பதே நல்லது என்பது போலவும் பேசத் தொடங்கினர்.
நந்தினி பதில் ஏதும் பேசவில்லை. இந்த சமுதாயத்தில் பெண்ணுக்கு நடக்கும் எந்த அநீதியும் எவ்வளவு அலட்சியமாகவும், சர்வ சாதாரணமாகவும் அனைவராலும் கையாளப் படுகிறது என வேதனைப் பட்டாள்.
மறு நாள் காலை சென்னை சென்ட்ரலில் அந்தப் பையனை கைகளை அவன் சட்டையாலேயே பின்னே கட்டி போலிசார் அழைத்துக் கொண்டு வந்தனர்.நந்தினியிடம் வந்து "அம்மா,ஸ்டேஷன் வந்து ஒரு கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்திடுங்க, மத்ததை நாங்க பார்த்துக்குரோம்" என்றார்கள்.
நந்தினி அவர்களுக்கு சற்று பின்னால் நடக்க முற்படுகையில் ஒரு இளைஞன் வந்து அவசர ஆங்கிலத்தில் தணிந்த குரலில் தான் அந்தப் பையனின் நண்பன் என்றும், " ஏதோ தெரியாமல் நடந்து விட்டது,மன்னித்து விடுங்கள்,அவன் அரசாங்க வேலை தேடி பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டது. அவன் மேல் கேஸ் நடந்து தண்டனை கிடைத்தால் அவன் எதிர்காலம் பாழாகி விடும் " என்றான்.
நந்தினி கோபத்துடன் " உன் அக்காள் ,தங்கைக்கு இதைப்போல் நடந்தால் இப்படித்தான் அறிவுறை கூறுவாயா " என ஆங்கிலத்தில் கேட்டாள். அந்த இளைஞன் முகம் கறுக்க அந்த இடத்தை விட்டு அகன்றான்.
போலிஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கூட முதலில் "மேடம், செமத்தியா நாலு சாத்து சாத்தி ரெண்டு நாள் ரிமாண்டுல வச்சு விட்டுரலாமே " என்றார். பின் நந்தினியின் கோபத்தையும் பத்திரிகை பின்னணியையும் பார்த்து சுறுசுறுப்பாய் கேஸ் போடுவதில் தீவிரமானார்."மேடம்,திட்டமிட்டு செய்தது என கேஸ் போட்டு ஒரு ஆறு மாதமாவது உள்ளே தள்ளி விடலாம் " என்றார்.
அடுத்த அறையில் அந்தப் பையனினிடம் விசாரணையும் அவனது பதில்களும் இந்த அறையில் தெளிவாக கேட்டன.
இன்ஸ்பெக்டர் " நாயே ...சொல்லேண்டா ...ஏன் இப்படி செய்தாய் " என்றார்
அந்தப் பையன் சன்னமான குரலில் ஹிந்தியில் பின்வருமாறு சொன்னான்.
"ஐயா, நான் நடுத்தர சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.கஷ்டப்பட்டு பி.ஏ வரை படிக்க வைத்தனர்.வீட்டில் புதிதாக கல்யாணமான அண்ணன்,அண்ணி.வயதான தாய் தந்தை இவர்களுடன் படுதா போட்டு பிரிக்கப்பட்ட ஒரே அறையில் படுக்கை.
மனதுக்குள் ஆயிரம் வாலிப கனவுகளை, உடலில் இளமை வேதனைகளை சுமந்து கொண்டு வேலையும் கிடைக்காமல் கல்யாணம் என்று ஒன்று நடக்குமா என்பது தெரியாமல் தினம் பாதி ராத்திரியில் படுதாவிற்கு அந்தப் பக்கமிருந்து கேட்கும் வளையல் ,மெட்டி ,சிணுங்கள் சத்தங்களால் சலனப்பட்டு தினம் தினம் சுய பச்சாதாபத்தால் செத்துக் கொண்டிருக்கிறேன்.
சில சவடால் நண்பர்கள் பெண்களை இணங்க வைக்க வேண்டுமானால் முதலில் நீயாக உன் விருப்பத்தை அவர்களிடம் செயலில் காட்ட வேண்டும். பெண்கள் முதலில் விருப்பமில்லாதது போல் நடந்தாலும் பின் பணிந்து விடுவார்கள் என்றும் மற்றும் இது போன்று அவர்கள் நிகழ்த்திய சாகசங்களை சொல்லும் போது இப்படி ஏதும் செய்யாத ,அனுபவமில்லாத என்னை தினம் தினம் கேவலமாகப் பேசி இகழும் நண்பர்களிடம் எனது சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும் ஒரு நொடி சலனத்திலும் இவ்வாறு செய்து விட்டேன். இதனால் ஜெயிலுக்குப் போய் வேலை கிடைக்காமல் போனால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியேயில்லை " என்று அழுதான்.
இதைக் கேட்ட நந்தினிக்கு "திக்"கென்றது.இவன் ஏற்கனவே ஒரு பாதி செத்த பாம்பு . சமுதாயத்தால் மறுபடி மறுபடி பலமுறை அடிக்கப் பட்டு சொந்தமாக நல்லது கெட்டது கூட தெளிவாக சிந்திக்கத் தெரியாமல் குற்றுயிரும் கொலை உயிருமாகக் கிடக்கும் ஆயிரக் கணக்கான பாம்புகளில் ஒன்று . ஏதோ ஒரு சந்தர்பத்தால் தேங்கிக் கிடந்த ஆக்ரோஷத்தில் ஒரு கணம் படமெடுத்து விட்டது.இதை மேலும் மேலும் அடித்துதான் நமது தன்மானத்தை திருப்திப் படுத்திக் கொள்ள வேண்டுமா? சமுதாயம் மாறி மாறி அடித்து துன்புறுத்தியதால் ஏற்பட்ட வலியினால் ஒரு கணம் படமெடுத்து விட்டது உண்மையிலேயே பாம்பின் குற்றம் தானா ? அதை மேலும் அடித்து துன்புறுத்தி கொல்வது சரியான முடிவுதானா ?
அதே சமயம் தனக்கு எற்பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுக்காமல் வாய் மூடி மௌனமாக போனால் இது வாழ்நாள் பூராவும் ஒரு கெட்ட கனவாக , முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கும்..இது போல தினம் தினம் பெண்களுக்கெதிராக நடக்கும் கோடானு கோடி தவறுகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது போலாகி விடும். பெண் என்ற முறையில் அதுவும் படித்த ,சுய சிந்தனையுள்ள பெண் என்ற முறையில் தன்னைத்தனே மேலும் இழிவு படுத்திக் கொள்ளும் செயலாகி விடும்...என்று குழப்பமாக யோசித்தாள்.
கையில் புகார் எழுதிய காகிதம் காற்றில் படபடத்தது.புகாரை வாங்கிப் பதிய அடுத்த அறையிலிருந்து இன்ஸ்பெக்டர் வரும் காலடிச் சத்தம் கேட்டது.
நந்தினி ......"என்ன செய்யப் போகிறாள் "
பின்குறிப்பு:
இன்ஸ்பெக்டர் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த போது நந்தினி அங்கே இல்லை.
நாலாக மடிக்கப் பட்ட காகிதம் மேசை மேல் காற்றில் பட படத்தது.இன்ஸ்பெக்டர் அதை எடுத்து பிரித்தார் ..அதில் ..
"இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு,
நான் புகார் எழுதும் போது, அடுத்த அறையில் உங்கள் விசாரணை உரையாடல் காதில் விழுந்தது.அவன் சொன்ன பதில் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.
நான் இந்தப் புகாரை பதிவு செய்து அவனுக்கு சட்டத்தின் படி தண்டனை வாங்கிக் கொடுப்பதால் நாட்டில் மற்றவர் இது போன்ற தவறை செய்யாமல்இருந்து விடுவார்கள் என்று சொல்ல முடியாது.அப்படி இருப்பின் தண்டனை அளிக்கப் பட்ட அனேக குற்றங்கள் நாட்டில் திரும்ப நடை பெறக் கூடாது.ஆனால் அவ்வகைக் குற்றங்கள் தினமுக் நடந்து வருகின்றன.தண்டனை அதிகமாக அதிகமாக குற்றவாளிகள் மேலும்நூதன முறையில் பிடிபடா வண்ணம் யோசித்து குற்றம் செய்ய துணிகின்றனர்.அல்லது பிடி பட்டாலும் சட்டத்தின் ஓட்டைகளைக் கொண்டுதப்பிக்க முயல்கிறார்கள்.
ஆனால் அவன் சொன்ன காரணங்களை கருத்தில் கொண்டு மனிதாபிமானத்துடன் அவனை மன்னித்து அதை அவனுக்கு தெரியுமாறுசெய்தால் கண்டிப்பாக இவன் திருந்தி விடுவான், இந்த மாதிரி தவறை வாழ்நாளில் எந்த சந்தர்ப்பத்திலும் திரும்ப செய்ய மாட்டான் என எனக்கு தோன்றுகிறது.
எனவே சட்டத்தின் மூலம் பலரை திருத்த முயல்வதை விட மனிதாபிமானத்தால் கண்டிப்பாகஇவன் ஒரே ஒருவனைக் கூட நல்வழிப்படுத்தினால் அதுவே மற்ற பெண்களுக்கு நான் செய்யும் உபகாரமாக இருக்கும் என தோன்றுகிறது.எனவே நான் புகார் செய்யும் எனது எண்னத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்.
உங்கள் நேரத்தை விரயம் செய்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்.... இப்படிக்கு...நந்தினி " என எழுதியிருந்தது.
இன்ஸ்பெக்டருக்கு ஏனோ நேரம் விரயமானதில் கோவம் வரவில்லை.அவன் கண்டிப்பாக திருந்தி விடுவான் என்றே தோன்றியது.
திறந்திருந்த கதவு வழியாக
"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதை
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்தடுத்துக் கொண்டே இருக்குது,
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
திருடாதே... பாப்பா ... திருடாதே "
பட்டுக்கோட்டையின் பாட்டு மிதந்து வந்து அவரை புன்னகைக்க வைத்தது.
கதை முற்றும்.
By அன்புடன்...ச.சங்கர்